மருத்துவ லீவுக்காலம்..!
கடந்த சில நாட்களாக மருத்துவ லீவு எடுத்து வீட்டில் நின்றேன். இந்த
சமயத்தில் தான் புரிந்தது, பல் தொடர்பான பிரச்சனைகள் எவ்வளவு கஷ்டத்தைக் எமக்குக் கொடுக்கின்றது
என்பது..!
வழமையாக வைத்தியசாலைக்குப் போகவிரும்பாத நான், ஒரு பல்வலியால் வீட்டில்
நிற்கின்றேன் என்றால் என்னைப்பொறுத்தவரை பற்கள் உடலுக்கு சக்தியை கொடுக்க உதவினாலும், அவற்றால் வரும் உபத்திரங்கள்
சொல்லிமாளாது..!
நான் வவுனியாவில் இருந்த 1990 காலகட்டத்தில் தான் பற்கள் தொடர்பான
பிரச்சனைகளுக்காக மருத்துவமனைக்கு முதல் முறையாகச்சென்றேன். கண்டதையும் சாப்பிடுவதால்
பற்கள் சில பழுதாகிவிட்டன..! குறிப்பாகச் சூத்தை (tooth cavity) பிடித்துவிட்டன. அந்நேரத்தில்
அரச மருத்துவமனையில் இருந்த பல் மருத்துவர்
என்னை சில நாட்கள் வரச்சொல்லி, ஒவ்வொரு முறை செல்லும் போதும், ஒவ்வொரு பல்லாகச் சரிப்படுத்தி,
சில மாதங்களில் அனைத்துப் பற்களும் நன்றாக இருக்கக்கூடியளவில் கொண்டுவந்துவிட்டார்..!
அந்தச்சமயம் சில பற்கள் மட்டும் உலோக அடைப்புச்
செய்யப்பட்டது.
அதன் பின்னர் திருமலை, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் என அந்த அந்த
இடங்களில் இருந்த காலத்தில், அங்காங்கே பற்கள் தொடர்பான பிரச்சனைகளைச் சரிப்படுத்தினேன்.
பல்லு அடைப்பு மற்றும் பல்லுச் சுத்திகரிப்பு தவிர வேறோர் விடயமும்
பற்கள் தொடர்பாகச் செய்யவில்லை. 50 வயதைத் தாண்டிய உடன் பல வருத்தங்கள் வந்தன..! நரம்பு
வருத்தம், பல் வருத்தம் போன்றவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம்.இந்த வருத்தங்கள் எனது
நிலையை மாற்றிவிட்டது. நரம்பு வருத்தம் ஒரு மீள் பிறப்புப்போலவே என்னை மாற்றிவிட்டது..!
அண்மையில் வந்த இடமாற்றத்திற்குப் பிறகு ஒரு பல்லைப் பிடுங்கவேண்டி
வந்துவிட்டது..! வலியைக்கொடுக்கின்றது என்று, பிடுங்கிய பல்லைப் பார்த்தால் இன்னும்
சில காலங்களுக்கு வைத்து பேணியிருக்கலாம் என உணர வைத்தது.
சில சமயம் சூழல் எம்மை சிக்கலில் மாட்டிவிடும். தவிர்க்க முடியாது.
அதேபோல் இடமாற்றம் வர முதலும், ஒரு பல் பிடுங்க சமயம் பார்த்து இருக்கும் போது, அது
தானே விழுந்துவிட்டது..! அதனால் பிடுங்கும்போது ஏற்பட்ட வலி தெரியவில்லை. சில சமயம்
நான் பார்த்த வைத்தியர் போட்ட விறைப்பூசி, மற்றும் பிடுங்கிய விதம் இவற்றில் குறைபாடுகள்
இருந்தாலும் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எனக்கு இனி பல்லே பிடுங்கக்கூடாது என்ற
எண்ணமே மேலோங்கி இருக்கின்றது.
படுக்க முடியவில்லை..! கதைக்க முடியவில்லை..! எழுத முடியவில்லை..!
ஏன் படம் பார்க்கவே பிடிக்கவில்லை..! சுருங்கச் சொன்னால் வாழவே பிடிக்கவில்லை. பல்வலி
அப்படியான ஒரு மனநிலைக்கு கொண்டுவந்துவிட்டது..!
இதேகாலப்பகுதியில், அம்மாவும் படுத்த இடத்திலே விழுந்து, முகம் வீங்கியதுடன்,
அப்பகுதியிலுள்ள சில இடங்கள் கண்டியிருக்கவும், பார்க்க கவலையாக இருந்தது. எதுவும் சொல்லாமல் மறைத்து, எமக்கு கஷ்டம் கொடுக்காமல்
இருந்துள்ளார். போய் பார்க்கும் போது தான் உண்மைநிலை புரிந்தது..! நோவால் மிகவும் வேதனைப்பட்டிருக்கின்றார்..!
அதேவேளை, மனைவியும் முழங்கால் மடக்க முடியாமல் துன்பப்படுகின்றார்.
எனக்கு பல்லுவலியும், தலை மற்றும் கழுத்தில் ஏற்பட்ட கட்டுக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வெறுப்பை ஏற்படுத்தின..!
திருமலையில் இருந்து 9ம் திகதி, பாதுகாப்பு ஊழியர்களின் சம்பளம் தொடர்பான
கோரிக்கைகள் வந்தன. இந்தக்கிழமை முழுவதும் பூரணமாக மருத்துவ லீவு எடுக்க முனைந்தேன்.
ஆனால் பாதுகாப்பு ஊழியர்களின் நிலைமை அறிந்ததும், முடிவை மாற்றி, பஸ் புக்பண்ணாமலே திருமலை வெளிக்கிட்டேன். வீட்டிலும் சில வேலைகளைச்
செய்துவிட்டு, பல் மருத்துவர் தந்த மாத்திரைகள் முற்றாகப்போட்டும் சுகம் வரவில்லை..!
பின்னர் எனது நண்பர், அம்மாவிற்கு மருந்து தந்தவர், சொன்னார் “பெனடீன் வாங்கிப்போடும்படி..!”
இப்போது அதைப்போட்டுக்கொண்டு தான் இருக்கின்றேன்.
பல்லுப்பிடுங்கிய இடத்தில் கோறையாக ஒரு குழி தெரிகின்றது..! அந்த இடத்திலுள்ள
சதைகள் சிதைந்ததால், வலி இன்னமும் கூடவாகவே இருக்கின்றது..!
வழமையாகக் கிழமை தொடக்க நாளிலே பயணம் நடக்கும். இம்முறை கிழமை நடுவில்,
குறிப்பாக புதன் கிழமை மாலை 3.30 மணிக்கு பயனிக்க
நினைத்திருக்க, அந்நேரம் நல்ல மழைபெய்தது..! ரெயின்கோட் மற்றும் எனது பொருட்கள்
தண்ணீர் படாமல் இருப்பதற்கான பை மற்றும் தண்ணீர் போக முடியாத சப்பாத்து என்பவற்றைப்
போட்டுக்கொண்டு வெளிக்கிட்டேன். ஊரில் நல்ல
மழை..! ஆனால் யாழ் நகரில் தூறிக்கொண்டு இருந்தது. ஆனால் பஸ்ஸில் சீற் கிடைத்து..! வழமையை
விட வெளிக்கிடும்போதே இரண்டு பைகளோடு வெளிக்கிட்டு, திருமலை வரும்போது ஏறக்குறைய
8.30 ஐத்தாண்டியிருக்கும். இங்கே மழையில்லை. ஆனால் மாலை இடையிடையே இலேசான தூறல்கள்
வீழ்ந்து இருந்தன என்று பாதுகாப்பு ஊழியர் சொன்னார்.
பின்னர், நானும் குளித்துச் சாப்பிட்டு உறங்கப்போக இரவு 10.00 மணி
தாண்டிவிட்டது.
மருத்துவ லீவை முற்றாக அனுபவிக்க முன், கடமை குறுக்கே வர, எல்லாவற்றையும்
விட, “கடமையே மனதிற்கு நிம்மதியைத் தரும்..” என்ற எண்ணம் உண்மையாகியது..!
பாதுகாப்பு ஊழியர்கள் சிலர் எமது சம்பளப்பணத்தை மட்டுமே நம்பியுள்ளனர்..!
ஒரு நாள் பிந்தினாலும், அவர்களின் வயிற்றுக்கஞ்சிக்கு அடிவிழலாம்..! அப்படி விழுமானால்,
அதுவும் என்னுடைய லீவால் வருமானால், அதுதரும் வலி, பல்லுப் பிடுங்கிய வலியைவிட அதிகம்..!
ஆ.கெ.கோகிலன்
10-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக