கடைசி செயற்திட்டம்..!
எமது மாணவர்கள் மூலம், எமது நிறுவனத்தின் 25ஆவது வருடப்பூர்த்தியை முன்னிட்டு, சமூகத்திற்கு பயனுள்ள செயற்திட்டங்கள் மூலம், நிறுவனத்திற்குப் பெருமை சேர்ப்பதாக நாம் முடிவு செய்து, அதனடிப்படையில் ஒவ்வொரு துறையும் தலா எட்டு எட்டு செயற்றிட்டங்களைச் செய்வதுடன், 25 ஆவது செயற்றிட்டத்தை எல்லோரும் சேர்ந்து செய்வோம் எனத்தீர்மானித்து, அதனடிப்படையில் வேலைகள் மும்முரமாக நடந்தன..!
தகவல் தொழில்நுட்பத்துறையின் ஒரு செயற்றிட்டமாக, போனதடவை,
யாழ்ப்பயணம் செல்லும் பஸ் தரிப்பிடத்தில் ஒரு பிரச்சனையை அவதானித்தேன்..! அதனை, முடிந்தால்
மாணவர்கள் மூலம் தீர்க்க நினைத்தேன். ஒரு செயற்திட்டமாகச் அதனைச் செய்யப் பணித்தேன்.
நிச்சயம் அதனால் பலருக்கு நன்மையுண்டு என்பதையும் சொன்னேன். அந்த வகையில், இன்று மதியத்திற்குள்
அந்த வேலையைச் செய்து முடித்துவிட்டார்கள்..!
நான், இன்று யாழ் போக இருந்ததால் போகும்போது அந்த பஸ் தரிப்பிடத்தைப்
பார்ப்போம் என இருந்தேன். சரியாக மாலை 2.45 மணிக்கு வழமையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு,
எமது நிறுவன வாசலைத் தாண்டி வீதியின் மறுபக்கம் வர பஸ்ஸூம் வந்துவிட்டது..! பார்க்க
நினைத்தது, தள்ளிப்போய்விட்டது..! சரி அடுத்த முறை பார்ப்போம் என்ற நினைப்போடு பஸ்ஸிற்குள் ஏற, நிறைய கூட்டம்
இருந்தது. நாளை தீபாவளி என்பதால், மக்கள் நடமாட்டம் திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி,
சாவகச்சேரி, யாழ்ப்பாணம், மற்றும் சுன்னாகம் என எல்லா இடங்களிலும் அதிகமாகத் தெரிந்தது..!
நாடு, முறைமை மாற்றம் அடைய இருக்கும்வேளை, இவ்வாறு மக்கள் கூட்டத்தைப் பார்க்க, மனதில்
ஒரு நம்பிக்கை தெரிந்தது..!
சாரதியும் வேக விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. அதோடு, இன்று
அதிக சனம் என்பதால், வழமையைவிட, பஸ் பிந்தியே யாழ்ப்பாணம் வந்தது.
பின்னர் வழமைபோல் அங்கிருந்து வீடுவந்து குளித்து தேநீர்
அருந்தி, சாப்பிட, மணி இரவு பத்தாகிவிட்டது. அத்தோடு ஒரு படத்திலும், கணினியிலும் நேரத்தைச்
செலவிட தீபாவளி நாள் வந்துவிட்டது..! நித்திரைக்குப் போக ஏறக்குறைய இரவு 12.45 தாண்டிவிட்டது.
திருகோணமலையில் சரியாகப் பத்துமணிக்கு படுப்பது வழக்கம். இங்கு வந்தால், எல்லாம் மாறிவிடும்..!
ஆ.கெ.கோகிலன்
30-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக