பிறவழம்..!

 



இன்று அதிகாலை எழும்பும்போதே கழுத்திலுள்ள கட்டி பெருத்திருந்தது..! அதனால் கழுத்துப்பகுதியில் நோ இருந்தது. அதேபோல் பற்சூத்தையால், வாய், கன்னம், தொண்டை போன்ற பகுதியிலும் நோ இருந்தன. இன்றைய உடற்பயிற்சியை நிறுத்துவோமா அல்லது செய்வோமா..? என்ற மனநிலையில் இருந்து,  செய்வோம் என்ற மனநிலைக்கு ஒருவாறு வந்தேன். வழமைபோல், பாதுகாப்பு ஊழியரும் என்னை எழுப்ப வர, நான் வெளியே வரச்சரியாக இருந்தது..! வருத்தங்களைப் பொருட்படுத்தாது பயிற்சிகளைச் செய்தோம். இறுதியில் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக உணர்ந்தேன். வலிகள் தெரியவில்லை..!

வழமைபோல் தோய்த்துக் குளித்து, பின்னர் சற்று உறங்கி வெளிக்கிட நேரம் சரியாக இருந்தது.

நேற்று இரவு தெரிந்த ஒரு விடயத்தை இற்றைப்படுத்த, பல மணிநேரம் செலவிட வேண்டியிருந்தது. தகவல் தொழில்நுட்ப துறையில் 5 வருடங்கள் படிக்காமலும், படிப்பிக்காமலும் இருந்தால், எல்லாம் சூனியமாகத் தான் தெரியும். சூனியத்தை இராஜ்ஜியமாக மாற்றப் போராட வேண்டியிருந்தது. ஒருவாறு, விட்டதைப் பிடித்த மனத்திருப்தி இறுதியாக ஏற்பட்டது. அதே மனநிலையில் இன்றைய வகுப்பையும் எடுத்து முடித்து, சரஸ்வதி பூஜைக்குப் போக முனைய, சிற்றூண்டிச்சாலை ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டிவந்தது. அத்துடன் இரண்டாம் நாளே, தெரியாத்தனமாக கும்பத்தை இடமாற்றிய மாணவர்களின் செயல்களால் ஏற்பட்ட பிளவை ஓரளவிற்கு சமாளித்து, பின்னர் பூஜை முடித்து, பிரசாதங்களை உண்டு பஸ்ஸூக்குப் புறப்படலாம் எனநினைக்க, மேலும் சில காரியங்கள் செய்யவேண்டி வந்தது. இறுதியாக ஒரு மாணவர்,  பகுதிநேரத்தில் படிக்க காசைக் கட்டிவிட்டு, வெளிநாடு போகப்போவதாகவும், தான் படிக்கவில்லை என்றும், கட்டிய காசை திருப்பித்தரச்சொல்லியும் வாதிட்டார்..! ஒரு கட்டத்தில், பொறுமையிழந்து, அவருக்கு கடுமையான வார்த்தைகளில் இந்தவிடயம் தொடர்பாக விளக்கிவிட்டு, அந்த இடத்தை விட்டு விலகி, எனது அறையிலுள்ள பையில் தோய்க்க வேண்டிய உடுப்புக்களை எடுத்துக்கொண்டு, அவசர கெதியில்  ரீ-சேட்டையும் மாட்டிக்கொண்டு வெளிவந்து, அலுவலக அறையிலுள்ள வேலைகளை முடித்துக்கொண்டு, கையெழுத்துப்பதிவில் வெளியேறும் நேரத்தையும் போட்டுவிட்டு, கையெழுத்து இயந்திரத்திற்கும் வேலைகொடுத்துவிட்டு ரோட்டிற்கு வந்தேன். நிறைய மாணவர்கள் பார்த்தார்கள்..! சிரித்தார்கள்..! நானும் அவர்களைப் பார்த்து சிரித்து, கைகாட்டி பஸ் தரிப்பிடத்திற்கு வந்தேன். அங்கு ஏறக்குறைய அரை மணித்தியாலம் உட்கார்ந்து இருந்தேன். எனக்குப் பக்கத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 வெவ்வேறு வயதுடைய பெண்கள் நின்றார்கள்..! அவர்கள் தங்களுக்குள் கதைத்துக்கொண்டிருந்தார்கள்.  நானும் போனுடன் இருந்தேன். ஒரு கட்டத்தில் பஸ் வந்தது. உள்ளே ஏற, ஒரு பெண் எழுந்து எனக்கு சீற் தந்தார் ..! உட்கார்ந்தேன். அப்போது தான் ரீ-சேட்டை உற்றுப்பார்த்தேன்..! “ பிறவழமாகப் போட்டிருந்தேன்…!”  ஒன்றும் செய்ய முடியாது. வழமைபோல் இன்று, எழும்பி நிற்க முடியாது..! யாருக்கும் சீற்கொடுக்க முடியாது..! இந்த நிலையில் ஒரு பிள்ளைத்தாச்சிப் பெண் ஏறினார். என்னால் அவருக்கு உதவ முடியவில்லை..! எழுந்து நின்றால்  பலரும் பார்ப்பார்கள் எனக்கருதி, தொடர்ந்து உட்கார்ந்தேன். அப்போது எனது நிறுவன மாணவர் ஒருவர், சிரித்துக்கொண்டு வந்து, எனக்குக் கேட்க மெதுவாக சேர்  “ரீ-சேட்டைப் பிறவழமாகப் போட்டுவிட்டீர்கள்,  தங்கள் வீட்டிற்கு வந்து, மாற்றிச்செல்லும்படி கேட்டார்..!” எனக்கு, இப்படியொரு மாணவர் என்னிடம் அக்கறையாகக் கேட்டது மிகவும் சந்தோசமாக இருந்தது. நன்றி சொல்லிப் பராவாயில்லை என்றேன். கெப்பிற்றிக்கொலாவ பஸ் டிப்போவில் பஸ் நிற்கும்போது, மாற்றுவோம் நினைத்து இருந்தேன். பின்னர் அவ்வாறே செய்தேன். மாற்றிய பின்னர், வேறு ஒரு தம்பி வந்து, அதே விடயத்தைச் சொன்னார்..! நானும் நன்றி சொன்னேன். என்ன வயது போகப் போகச் சில சிறிய விடயங்கள் கூட மானத்தை வாங்கிவிடும்..! இருந்தாலும், யாரும் வேணும் என்று செய்வதில்லை என்பதால், யாரும் இதனைத் தவறாக நினைக்க மாட்டார்கள்.

இன்னோர் ஆச்சரியமான விடயம் இன்று, பஸ்ஸில் வரும்போது, பல இடங்களில் மாடுகள் குறுக்கால் வந்து பஸ்ஸூடன் மோதப் பார்த்தன..!

அதேபோல், பஸ் நடத்துனரும்  ரிக்கெட் போடும் இயந்திரத்தை கெப்பிட்டிக்கொலாவவிலுள்ள பஸ் டிப்போவில்  இருந்து மாறி எடுத்துவந்து, பின்னர் ரிக்கெட் போடமுடியாமல் இடையில் நின்று, அதனைத் திரும்ப எடுக்க முனைய, நீண்ட நேரம் காக்க வேண்டிவந்துவிட்டது..! பின்னர் இயந்திரம் வந்தது. அது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது..!

இன்னும் சில விடயங்கள் ஆச்சரியமாக இருந்தன.

1)          பஸ் நடத்துனர் ரூபா.1.00 அல்லது ரூபா.2 சில்லறைகளைக் கூட தந்தார். அனுரா ஆட்சியில் அசுர மாற்றம்..!

2)          வீதி முழுக்க வீதிப்போக்குவரத்து போலீஸ் கண்காணித்துக்கொண்டு இருந்தார்கள். இனி யாரும் ஏமாற்ற முடியாது. தண்டங்கள் எல்லாம் திறைசேரிக்குப் போகவேண்டும்.

3)        நடத்துனர்,  ஒவ்வொரு பயனியையும் அன்பாகவும், பொறுமையாகவும்  நடாத்தினார்.

4)          அத்துடன் பலருக்கு உதவிகளும் செய்தார்..!

வீடு வர, இரவு ஏழு தாண்டிவிட்டது. பின்னர் குளித்து, உண்டு உறங்கத்தயாராக இருக்கும் போது, பிரசாதமும் பழமும் வர, சொன்னது போல் சகலதும் நிறைவாக நடந்தன.

முறைமை மாற்றம் நாட்டிற்கு நல்லதாக அமைந்தால், இனிவரும் சந்ததிகளாவது நிம்மதியாக, சொந்த நாட்டில் சகலசௌபாக்கியங்களுடன் வாழட்டும்.

ஆ.கெ.கோகிலன்

04-10-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!