கோட் (GOAT)

 


 


நடிகர் விஜயின் படங்கள் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில், இந்தப்படம் அவரது கண்மூடித்தனமான ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆனால் விஜயின் நல்ல மாறுபட்ட படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப்படம் ஒரு பெருத்த ஏமாற்றம் தான்..!

பொதுவாக வெங்கட் பிரபுவின் படங்கள் என்றால் சும்மா நேரம் போவதற்காக எடுக்கப்படும் படங்கள் போல் தான் இருக்கும். ஏதாவது ஒன்று இரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் இந்தப்படத்தில் விஜயை வைத்து, விதம் விதமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களையும் வைத்து, ஏதோ ஒன்றைச் செய்ய முனைந்துள்ளார். அது சரியாக அமையவில்லை என்பது தான் உண்மை. முதலில், படத்தில் பயன்படுத்திய பல பிரபலமான நடிகர்களைத் தவிர்த்து இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகளைக்கொடுத்தாவது பயன்படுத்தியிருக்க வேண்டும். எல்லா நடிகர் நடிகைகளையும் விரயப்படுத்திவிட்டு, சும்மா தேவையில்லாமல் செயற்கை நுண்ணறிவில் பல விஜய்களை உருவாக்கி, கதையைச் சொதப்பிவிட்டார்.

இந்தப்படத்தின் கதை என்றால், தந்தை மகனைக் கொல்லுவது தான்..!

அத்தோடு, காதலன் காதலியைக் கொல்வது, போதாததற்கு தங்கையை அண்ணன் கொல்ல முற்படுவது, உற்ற நட்பு துரோகம் செய்வது, தெரியாத்தனமாக ஒரு சண்டையில் இறந்த குடும்பத்திற்காக, வில்லன், கதாநாயகனின் குடும்பத்தை, அவனது பிள்ளையை வைத்துப் பழிவாங்குகின்றார்..!

ஹீரோ யாரு விஜய்..! வில்லன் யாரு விஜய்..!  ஏனைய நடிகர்கள் யாரு விஜய்கள்..! பார்வையாளர்கள் யாரு..அதுவும் விஜய்கள்…!

ஏன் பெரிய நடிகர்களைக்கொண்டுவந்து இப்படி ஒரு உப்புச்சப்பு இல்லாத கதையில் கேவலப்படுத்தியுள்ளீர்கள் வெங்கட் பிரபு அன்ட் ரீம்.

இறுதிக்கு, முதலுள்ள படம் என்றும் அரசியலுக்கு  போவதாகவும் இருக்கும் நிலையில், ஏன் அவரைக் கெட்டவனாகக் காட்டவேண்டும்..? முட்டாளாகக் காட்ட வேண்டும்..? கலியுகத்தில் எல்லாரையும் கெட்டவர்களாகக் காட்டினால் தான் வெற்றி கிடைக்குமா..? அப்படி என்றால் நீங்கள் அரசியலுக்கு வந்து கெட்டது தான் செய்யப்போகின்றீர்களா..?

மென்மையான, நன்றாகப் பாட, ஆடக்கூடிய ஒரு நடிகரை வைத்து, எவ்வளவோ அருமையான படங்களை எடுத்து, அனைத்து ரசிகர்களுக்கும் கொடுக்க முடியும். இன்னும் அவரது அரசியல் பயணத்திற்கும், அது உதவும்.

இதில், முதல் தவறு விஜயில் தான் இருக்கின்றது.  கதைத்தேர்வில் கவனம் வேண்டும். சும்மா குப்பை எண்ணங்களை ரசிகர்கள் மனதில் விதைத்து, நாளைய நல்ல மனிதர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம். கலியுகம் அழிவை நோக்கிப்போனாலும் நாமெல்லாம் அதனைத் தடுக்கப் போராட வேண்டும். பெரிய மக்கள் சக்தியை வைத்துள்ள விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நல்ல, நீதியான, மனித சமூதாயம் மேம்படக்கூடிய கருத்துக்களை, பொழுதுபோக்குடன் கூறலாம். தவறில்லை. முரண்களைக் கொண்டுவரக்கூடாது. தந்தையை மகன் கொல்லுதல்..! தங்கையுடன் அண்ணன் குடித்தனம் போதல்..! காதலியின் கழுத்தை அறுத்துக்கொல்லல்..!  என்ன சிந்தனை இது..?

எவ்வளவோ பணம் விரயம். நல்ல நடிகர்களின் உழைப்பு வீண். பல தொழில்நுட்ப வல்லுனர்களின் திறன் பாழ்..!

வெங்கட் பிரபுவும், அவரது அணியும் கழிவறையில் இருப்பதை காட்சியறையில் வைக்கக்கூடாது என்ற அடிப்படை நாகரீகம் தெரியாமல் இருப்பதற்காக வருந்துகின்றேன். நல்ல அறம் சார்ந்த நூல்களைப் படித்து, பின்னர் படங்களை இயக்கினால், சமூகம் நன்றாக இருக்கும். இல்லாது விடின், நீங்களும் கஞ்சா விற்கும் நபராக, விபச்சாரம் செய்யும் நபராக, பணத்திற்காக கொலை செய்யும் ரவுடியாகவே தெரிகின்றீர்கள்..! அடுத்த முயற்சியை, சமூகத்தின் மீது அக்கறைகொண்டு, அவதானமாக எடுங்கள்.

 


ஆ.கெ.கோகிலன்

08-10-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!