தேர்தல் பணி..!

 


 


மூன்று தடவைகள் மாத்திரம் நான் திருகோணமலையில் இருந்த ஆரம்ப காலத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். பின்னர், ஆர்வமில்லாமல் போய்விட்டது காரணம், எம்மிடம் படித்த மாணவர்களை எமக்கு,  மேலதிகாரிகள் போல் போடுவதால், எமக்குரிய குறிப்பாக எமது பதவிநிலைக்குரிய தகுதியை அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்ற எண்ணத்தில் அவற்றைத் தவிர்த்துவிட்டேன்.  அத்துடன் கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் எனக்கு இது பொருத்தமில்லாததாகத் தோன்றியது. மேலும் அரசியலில் பெரிய நாட்டம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. மக்கள் அதிகமாகவிரும்பும் ஒருவர் ஆட்சிக்கு வரப்போகின்றார். அவர் நன்றாக ஆண்டால் அனைவரும் நலமாக வாழமுடியும். இல்லையேல் குழப்பங்கள் கூட வரும். காலம் சரியான வழியில் கொண்டுசெல்லும் என்ற நம்பிக்கை, எனது முயற்சிகளின் அடிப்படையில் தோன்றியுள்ளது. இதற்கு மேலதீகமாக பல்கலைக்கழகங்கள் போன்று எமது நிறுவனமும் முற்றான ஒரு அரச நிறுவனம் கிடையாது. அரசால் உரிமைகொள்ளப்படும் ஒரு நிறுவனம். அதேநேரம் எம்மைக்கட்டுப்படுத்துவது ஒரு அமைச்சிற்கு கீழ்வரும் மேல்மட்ட சபையாகும் (Governing Council).

 கடந்த பல வருடங்கள் யாழில் இருக்கும்போது, அந்தப்பக்கமே போனது கிடையாது. எமது நிறுவனத்தில் கூடத் தேர்தல் கடமையை எனது பதிவாளர் ஊடாகவே, மற்றவர்களுக்கான அஞ்சல் வாக்கெடுப்பை நடாத்தியுள்ளேன்.

நான், ஒரு சாதாரண நபரைப்போல் எனக்குரிய வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களித்துவிட்டு வருவதே வழமை.

இம்முறை மீண்டும் திருகோணமலைக்கு, வந்ததாலும் இந்தப்பணிகளில் ஈடுபடும் எண்ணம் கிடையாது.

இந்த நிலையில் எமது ஊழியர்கள் பலர் தேர்தல் கடமைகளில் ஈடுபட விரும்பம் கொண்டார்கள். அதற்கு நான் தடைபோடவில்லை. அவர்களுடன் ஒத்திசைந்து, என்ன செய்யவேண்டுமோ அதனைச்செய்து அவர்களுக்குரிய அஞ்சல் வாக்கெடுப்பை நடாத்தினேன். எனது வேலைப்பளு கருதி, அது தொடர்பான கூட்டத்திற்கு, ஆர்வமுள்ள ஒரு உத்தியோகஸ்தரையே அனுப்பினேன்.  அவரின் வழிநடத்தலுக்கு ஏற்ப தேர்தல் கடமையை நடாத்தினேன். அடுத்தநாள், எனக்கு மேலதிகரியாக நியமிக்கப்பட்ட ஒருவர், எனது நிறுவனத்திற்கு வந்து, சில கேள்விகளை என்னிடம் கேட்டார். அவர் சகோதர மோழியைச் சேர்ந்தவர். நான் ஆங்கிலத்தில் பதிலளித்தேன். ஒன்றும் சொல்லாமல், தலையை அசைத்துக்கொண்டு சென்றுவிட்டார்..! அடுத்த நாளும் அந்த நபர் என்னிடம் வந்து, ஏன் நேற்று அஞ்சல் வாக்கெடுப்பை நடாத்தினீர்கள்..? என்றார். எனக்குப்பதிலாகக் கூட்டத்திற்குப்போனவர் சொன்னதிற்கு அமைவாகவே நடாத்தினேன் என்றேன். அவர் தனது மேலதீகாரியிடம் தொடர்பை ஏற்படுத்தி என்னைக் கதைக்கச் சொன்னார். நான் நடந்ததைச் சொன்னேன். அதற்கு அவர் என்னைத் திட்டிவிட்டு, கூட்டத்திற்கு போனவரிடம் கதைக்கப் போனைக் கொடுத்தேன்.  அத்துடன் அவரது அழைப்பு துண்டிக்கப்பட்டது..! எனக்கு மேலதிகாரியாக நியமிக்கப்பட்டவரிடம், பல குறைகளையும், தவறுகளையும், எமது வேலைப்பளுக்களையும் சொல்லிச்சற்று கடுமையாக நடக்க முற்பட, அவர் சென்றுவிட்டார்..!

தேர்தல் கடமைகள் தொடர்பாக சரியான வழிகாட்டல்கள் எல்லோருக்கும் விளங்கும் மொழிகளில் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் இவ்வாறான சிக்கல்கள் நடைபெறும். தேர்தல் கடமைகள் செய்ய விருப்பமில்லாத, தகுதியான பதவிகள் கொடுக்காமல் தவிர்த்த அவ்வாறானவர்களைத் திரும்பத்திரும்ப அழைத்து, தவறுகள் செய்யக்கூடாது.

தேர்தல் கடமைகளை பணத்திற்காக, ஏனோ தானோ என்று செய்யக்கூடாது.  அதனைச்செய்வதற்கு சரியான வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும். பதவிகள் வழங்குவதிலே தவறுகள் இருந்தால், பின்னர் எத்தனை இடங்களில் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு..! பொருத்தமான, தகுதியான நபர்களை பொருத்தமான பதவிகளில் ஈடுபடுத்துவதன் ஊடாகவே தேர்தலை சரியாக நடாத்த முடியும். அப்படியான தேர்தலே சரியான நபரை, பதவிக்கு கொண்டுவர உதவும். இல்லை என்றால், தவறுகள் எங்கும் பரந்து இருப்பதால், யாரையும் குறைகூறிப் பயனில்லை.

 


ஆ.கெ.கோகிலன்

07-09-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!