தண்ணீரில் கண்டம்..!
பல வருடங்களுக்கு முன்னர், நான் எனது குடும்பத்தினருடன் திருமலையில்
வசிக்கும்போது, தண்ணீர் என்பது ஒரு பெரும் பிரச்சனையாக மாறியதை நிஜமாக அனுபவித்துள்ளேன்..!
நான் வசித்த பிரதேசம் சற்று மலைப்பாங்கான, உயர்வான பிரதேசம். அந்த இடத்தில் தண்ணீர்
வருவது என்பது கடினம்..! நீண்ட காலமாகத் தண்ணீர் தாங்கி அங்கே இருந்தாலும் தண்ணீர்
வருவதில்லை. அந்தத் தண்ணீர் தாங்கியும் பயன்படுத்தப்படவில்லை..! எமது வீட்டுத் தண்ணீர் மீற்றரை பார்த்தால் நன்றாக ஓடும்..! ஆனால்
தண்ணீர் வராது..! காற்று மட்டுமே வரும்..!
இதனால் தண்ணீர் கட்டணமும் அதிகமாக வரும்.
ரூபா .9000 சம்பளம் எடுக்கும் போது தண்ணீருக்கு ரூபா .5000 வந்தால்
என்ன செய்ய முடியும்..? நான் யாழ்போக நினைத்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்..! தண்ணீருள்ள
இடங்களுக்கு வீடு மாறி இருக்கலாம். ஆனால் வீடும், நல்ல தண்ணீரும் இருக்கும் எமது இடம்,
நாசமாவதைப் பார்ப்பதும் கடினம்..! முடிவு மாறியது..! குறிஞ்சி பூக்கும் காலம், அங்கும்
இருக்கப்பணித்தது இயற்கை..! மனிதர்களின் இடைவினைகள் இருந்தாலும், அதையும் தாண்டி சில
விடயங்கள் இந்தப்பிரபஞ்சத்தில் நடக்கின்றன. அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
முரண்டு பிடித்தாலும், ஒரு கட்டத்தில் இயற்கையிடம் சரணடையாமல் யாரும் தப்பமுடியாது.
இதனை நான் நன்றாகப்புரிந்து வைத்துள்ளேன்.
இந்த வாரம் பல்நோவால் மருத்துவ லீவு எடுக்க நினைத்தாலும், சில தவிர்க்க
முடியாத காரணங்களால் இயற்கை என்னை வேலைக்கு அழைத்துவிடும். யாரும் வற்புறுத்தவில்லை. ஆனால் மனச்சாட்சியே அங்கே
இருக்கவிடாது..! வந்ததால் பல விடயங்களைக் காலத்தோடு செய்ய முடிந்தது..!
இவ்வாறாக நேற்றைய பொழுது ஒருவாறு கடந்தது..! இன்று காலை வேளைக்கு எழுந்து
உடற்பயிற்சி செய்து, பின்னர் காலைக்கடனை முடிக்க நினைக்க, இடி இறங்கியது..! தண்ணீர்
இல்லை..! தாங்கியிலும் தண்ணீர் இல்லை. நேற்று மாலை நிரப்பியது என்றார்கள்..! ஆனால்
விடியத் தண்ணீர் தீர்ந்து விட்டது அல்லது ஏதாவது கசிவால் விரயமாகிவிட்டது..! சரி என்று மோட்டர் போடச்சென்றார்கள். தண்ணீர் ஏற்றும் மோட்டர் வேலைசெய்யவில்லை என்பதை
உணர்ந்த பாதுகாப்பு ஊழியர்கள், தம்மால் இயன்றவரை முயன்றார்கள் பலனில்லை. அந்நேரம் நானும்
போய் பார்த்து ஏதாவது செய்யலாமா எனப்பார்த்தேன். முடியவில்லை..! நானும் பின்னர் பலருக்கு
தொலைபேசி அழைப்புக்களை எடுத்து உதவிகோர முனைந்தாலும், ஒருவரும் அந்நேரம் போனை எடுக்கவில்லை..!
சரி, வெளியில் குளிக்கலாம் என்றாலும், நன்றாகப்
பொழுது விடிந்துவிட்டது. யாரும் பார்க்க வாய்ப்புண்டு. அது அவ்வளவு நல்லதல்ல..! நாம்
ஒன்றும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல..! சாதாரண மனிதர்கள் தான். ஆனாலும் சில
விடயங்களில், நாகரீகமாக நடக்க வேண்டியுள்ளது.
நேற்று இரவு இருந்த கொஞ்சத்தண்ணீரும், ஒரு வாழியில் வெளிப்பைப்பில் பிடித்த தண்ணீரும், அடிப்படைவேலைகளை
முடிக்க உதவின..! அதன்பிறகு அலுவலகம் வந்து, ஒரு அலுவலக ஊழியரிடம் சொன்னேன். அவர் போய் பார்த்துப் பிரச்சனையைக் கண்டுவிட்டார்.
சிறிது நேரத்தில் தண்ணீர் வந்துவிட்டது..!
மோட்டரில் பழுதில்லை என்றும் ஒரு றிப்சுவிச் விழுந்ததால் ஏற்பட்ட சிக்கல் என்பதையும் பின்னர்
புரிந்துகொண்டேன்..!
தண்ணீர் இல்லை என்ற நிலை வந்ததும் மனது பழைய இடத்திற்கே சென்றது. பட்ட சிரமங்கள் மனத்திரையில் ஓடின..! போதும் என்று அப்போது போனாலும்,
தேவை என்று இப்போது நிலைமை மாறியிருப்பது உண்மையில் ஆச்சரியமானதே..!
காலை குளிக்காமலே, சும்மா மேல் கழுவியதோடு பூஜையில் கலந்துகொண்டேன்.
ஆனால் மாலை அலுவலக வேலைகள் முடித்த பின்னர், காலைக் குளியலை மாலை நடாத்தி, விட்ட குறையை
இட்டு நிரப்பினேன்.
தண்ணீரில் குளிப்பது என்பது தனியாக அழுக்கு போவதற்கு மாத்திரமல்ல..!
அகச்சூடும், மன அழுத்தங்களும் குறைவதற்கு என்றவோர் முக்கிய காரணமும் உண்டு என்பதைப்
பலர் அறியார்..!
நன்றாக நீரைக்குடித்து, உட்குளியலும், நன்றாக நீரில் வெளிக்குளியலும்
செய்தால், ஆரோக்கியம் நிச்சயம் கெடாது என்று அறிந்துள்ளேன்.
ஆ.கெ.கோகிலன்
11-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக