அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பு..!

 


 

இன்று காலை எமது நிறுவன வெள்ளிவிழாவை முன்னிட்டு, நிதி சேகரிப்பு நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பு என்முன்னிலையில் நடந்தது. அனைத்து மாணவர்களும், எமது நிறுவன கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் கலந்துகொண்டார்கள். பரிசில்கள் வரும் திங்கட்கிழமை காலை 9.00மணிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. என்னிடம் பல மாணவர்களும், ஊழியர்களும் ரிக்கெட்களைத் தந்தார்கள்..! நான் அவர்களை மறுத்து, அவற்றை வெளியேயுள்ள நபர்களுக்கு கொடுக்கச் சொன்னேன். இறுதியாக ஏதாவது மிஞ்சினால், கொஞ்சத்தை நான் வாங்குகின்றேன் எனச்சொன்னேன். பின்னர் அவ்வாறே செய்தேன். ஏறக்குறைய ஒரு புத்தகத்தையே வாங்கி, நானும் அதில் கலந்துகொண்டேன். எனக்கு 20/10000  என்ற நிகழ்தகவு இருந்தாலும், ஒரு பரிசும் கிடைக்கவில்லை என்பது தான் சோகம்..! எனது Luck இனைப் பரிசோதித்து பார்த்ததில் ஒரு விடயம் புரிந்தது. அது, எனக்கு குறுக்கு வழியில் எதுவும் கிடைக்காது என்பது தான்..! சோகம் இருந்தாலும் அதனை மறைத்துக்கொண்டு, சந்தோசத்துடன் இயற்கையின் பாடத்தை ஏற்றுக்கொண்டேன்.

பின்னர் மின்சாரம் இல்லாவிட்டாலும் சில வேலைகளை மாணவர்களுக்கு கொடுத்துவிட்டு, சில மாணவர்களை, ரிக்கெட் விற்பது தொடர்பான ஒரு பிரச்சனைக்காக, விசாரணை மேற்கொண்டதுடன், முதலாம் வருட மாணவர்களின் ஒப்படைகளையும் பார்த்துவிட்டு, மாலை யாழிற்கு பஸ் ஏறினேன்.

மூன்று மாதங்களுக்கு முன்னர், பதவி உயர்வு பெற்று வேறிடம் சென்ற பதிவாளர், மீண்டும் எமது நிறுவனத்திற்கு வந்ததால் எல்லோருக்கும் மகிழ்ச்சி. எனது வேலைப்பளுவும் கொஞ்சம் குறைந்தது. அதனால், வரும்போது அவரிடம் சொல்லிவிட்டு வந்ததில் ஒரு நிறைவு இருந்தது. அது மாத்திரமன்றி, புதிய முகாமைத்துவப் பணியாளர் ஒருவரும் மகியங்கணையில் இருந்து வந்துள்ளார். இனி, சில வேலைப்பளுக்கள் குறையும் என்று நம்புகின்றேன். இல்லை என்றாலும் பொறுப்பை எடுத்ததால், செய்து முடித்துத் தான் ஆகவேண்டும்.

 

வரும்போது பஸ்ஸில் என்னுடன் யாழ்ப்பாணத்தில் வேலைசெய்த வழக்கறிஞர் ஒருவரைச் சந்தித்தேன். மிகச்சிறிய வயதுடைய அவருக்கு நேற்று முந்தைய நாள் ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அந்த சந்தோசத்துடன் “சட்டங்கள்” தொடர்பாகப் பல விடயங்களைக் கதைத்துவந்தேன். குறிப்பாக மேற்கத்தையர்களின் வருகைக்கு முதலுள்ள சட்டங்களும், அதனை அமுல்படுத்திய விதங்கள் தொடர்பாகவும் கதைத்தேன். அண்மையில் சிறை சென்ற மருத்துவர் அர்சுணா தொடர்பாகவும் கதைத்தேன். சில சட்டசீர் திருத்தங்கள் தொடர்பாகவும், வழக்கறிஞர்களின் பங்குபற்றியும், அதனால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் நிறைய விடயங்கள் கதைத்தது இந்த பஸ் பயணத்தை மிகவும் பிரயோசனமாக்கியுள்ளது..!

இரவு 7.30இற்கு யாழ்வந்து, மோட்டார் வண்டியை எடுத்து வீடு வருவதற்குள், பெய்த கடும்மழையால் முற்றாக நனைந்து, பின்னர் வீட்டிலுள்ள மழை நீரைத்தள்ளிவிட்டு, குளித்து சாப்பிட்டு நித்திரைக்குத் தயாரானேன். திருகோணமலையில் இருந்தால் மூளைக்கு மட்டுமே உழைப்பு..! யாழ் வந்தால், மூளை, உடல் இரண்டிற்கும் உழைப்பு..!

 

ஆ.கெ.கோகிலன்

16-10-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!