நிலக்கடலை..!

 


 


கடலை என்றாலே சிலருக்குப் பிடிக்காது. எனக்கு அதில் அலாதிப்பிரியம் உண்டு. சிறுவயதுகளில் கோவிலுக்குச் சென்றால் கடலை என்பது இல்லாமல் வீடு வரமாட்டேன். அவ்வளவு பைத்தியம். அது இன்று வரை தொடர்கின்றது..!  திருகோணமலை மாறிய பின்னர், அடிக்கடி முருகண்டிப் பிள்ளையாரைக் காணவும், கடக்கவும் கடலையும் காரணம். குறிப்பாகக் காரில் அல்லது தனியார் வண்டிகளில் வந்தால், அங்கே பிள்ளையாரை கும்பிட்டுவிட்டு, கடலை வாங்குவது என்பது எனது நீணடகாலப்பழக்கம். இன்றுவரை அதனை மாற்ற முடியவில்லை. கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பது பலருக்குத் தெரியும்..! இருந்தாலும் அது பிடிக்கின்றது. சில நேரங்களில் ஒரு பிழையான (பழுதடைந்த) கச்சானைச் சாப்பிடும் போது, அந்த கெட்ட பருப்பு, வாயையே நாசப்படுத்திவிடும்..! அதேபோல் கடலை சாப்பிடும் நாட்களில் வெளிவரும் பின்மூச்சுக்கள் கூட சகிக்க முடியாத வாசனையினைத் தந்து, சூழலை மாசடையச்செய்யும்.

 


மூதூரில், நான் இருந்த காலத்தில் தான் அவிச்ச கடலை சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. எமது ஊர்களில் வறுத்த கடலையே பிரபல்யம். ஆனால் மூதூரில் அதிகம் அவித்த கடலையே சாப்பிடுவார்கள். ஒரு முறை எனது மாணவர், தற்போது பிரபல வரலாற்று ஆசிரியர், கணிதம் படிப்பித்ததற்கு, குருதட்ஷணையாக அரை உரபாக்களவில் அவிச்ச சோளனையும்,  அவிச்ச கடலையும் தந்தார்..! நான் கேட்கவில்லை, சங்கடப்பட்டேன். அவர் அதனை விரும்பித்தந்தார்..! தவிர்க்க முடியாமல், அங்கிருந்த பலருடன் பங்கிட்டு அதனை உண்டு முடித்தேன். இன்றுவரை, அந்தக்கச்சானுக்கு நிகரான கச்சான் கிடைக்கவில்லை..! உழைப்பின் கூலி என்பதால் அந்தச்சுவையோ தெரியவில்லை..! தற்போது ஒவ்வொரு வாரமும் பஸ்ஸில் போகும் போது அவிச்ச கச்சான் வாங்கி, பஸ்ஸிலேயே உண்பது வழமை. அதனை வாங்கிச் சாப்பிடத்தொடங்கினால், மொத்தத் தூரத்தில் நாலிலோரு  பங்குத் தூரம் பயணம் செய்ததே தெரியாது..! அப்படியிருக்கும்..!



இப்படியாக வாழ்க்கை பறக்கும்  நிலையில், விவசாயத்தில் ஈடுபடும் எனது தம்பியும் கடலை பயிரிட்டு இருந்தார்..! அதன் அறுவடையும் அண்மை நாட்களில் நடந்தது. அதில் இருந்து, எனக்கும் கொஞ்சம் பச்சைக்கச்சான் தந்தார்..! அது எமது உற்பத்தி என்பதில் சற்று சந்தோசம். எனது மனைவி, அதனை அவித்து எனது மேசையில் வைத்ததால், இப்போது இரு நாட்களாக மேலேயும், கீழேயும் போய்வரும் போது அதனை உண்டு சுவைக்கின்றேன். வயிறு சற்று ஊதியது போலிருந்தாலும், அதனை தவிர்க்க மனம் வருவதே இல்லை..!

வாயும், வயிறும், மூளையும் தொடர்ந்து ஒன்றில் விருப்பமாக இருந்தால், அதனைத் தவிர்க்க கூடாது. எமது உடலிற்கும், அந்தப்பொருளுக்கும்  கண்ணுக்குத்தெரியாத ஒரு தொடர்பு இருப்பதாக நம்புகின்றேன்.  அது, எமது உடலிலுள்ள ஏதாவது குறைபாடுகளை நீக்கி, எம்மை நீண்ட காலத்திற்கு வாழவைக்கும் ஒரு காரணியாகக் கூட இருக்கலாம்..! அதன் ரகசியத்தை இயற்கை மட்டுமே அறியும்..! அதனால் நானும் அதனை ஏற்கின்றேன். ”நாக்கே மருத்துவர், உணவே மருந்து..!”

 


ஆ.கெ.கோகிலன்

21-09-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!