வங்கிச்சேவை..!

 




எனது தாயார் ஏறக்குறைய 80 வயதை உடையவர். முதுமையால், உதவி தேவைப்படுபவர். தனது ஓய்வூதியப்பணத்தை எடுப்பதற்கு வங்கி செல்ல வேண்டும். பல முறை என்னைக்கேட்டுவிட்டார். நான் தற்போது திருகோணமலை என்பதால் அவரது கோரிக்கையை நிறைவுசெய்ய முடியவில்லை.

இந்தநிலையில் தொடர்ந்து யாழிலேயே நிற்கவேண்டிய சூழல் இருப்பதால்,  இந்த வாரம் அம்மாவின் கோரிக்கையை நிறைவு செய்ய முனைந்தேன். நேற்றும் முந்தைய நாளும் எனது மருத்துவ தேவைகளுக்காக நேரத்தை ஒதுக்கினேன். இன்று அம்மாவுடன் வங்கி அலுவலைப்பார்க்க முனைந்தேன். இருந்தாலும் காலை எழும்பும் போதே, ஒரு வித சோர்வான மனநிலையில் இருந்தேன். மருந்துகள் எடுப்பதால் தொடர்தூக்கமாக இருந்தது. இன்றைய வங்கி வேலையை நிறுத்த நினைத்து, அம்மாவிற்கு அழைப்பை எடுத்தேன். அவர் எடுக்கவில்லை. பின்னர் ஏறக்குறைய 9.00 மணியளவில் எடுத்தார். தான் தயாராக இருப்பதாகவும், உடனே வரும்படியும் சொன்னார். நானும் உடனே தயாராகி, காரை எடுத்துக்கொண்டு சென்றேன். அம்மாவும் தயாராக இருந்ததால் விரைவாக வங்கிக்கு வந்துவிட்டோம்.

அம்மா சொன்னமாதிரி குறித்த தொகையை எழுதி, அம்மாவின் கையெழுத்துக்களையும் பெற்றுக்கொண்டு வரிசையில் நின்றேன்.  எனது இந்த வேலை நடக்கும் போது, மனைவியும் வங்கிக்கு வந்திருந்தார். அவர் முதலில் என்னைக்கவனிக்கவில்லை. பின்னர் கண்டதும் அம்மாவுடன் கதைத்தார். இந்த வரிசையில் எனக்கு ஒராளுக்கு முன்னால் நின்றார். அவர் தனது பணத்தை எடுப்பதற்கான வேலை முடிந்ததும், கணினி இயங்க மறுத்தது..! அங்குள்ள அனைத்துக் கணினிச்சேவைகளும் தடைப்பட்டன. மனைவி, ஏனைய வேலைகளைச் செய்ய சந்தைக்குச்  சென்றுவிட்டார். அம்மா வாங்கில் இருந்தார். நான் பொறுமையிருக்கும் வரை, லைனில் நின்றுவிட்டு, அங்குள்ள முகாமைத்துவ நிலை அதிகாரியிடம் கதைத்துவிட்டு, அம்மாவையும் கூட்டிக்கொண்டு எனது வீட்டிற்கு வந்தேன். கொஞ்ச நேரம் அங்கே இருந்துவிட்டு, பின்னர் புறப்பட்டு வங்கிக்குச் சென்றேன். இன்னும் நிறையச் சனம் வரிசையில் இருந்தது. முறைமை இன்னமும் சரிவரவில்லை என்றார்கள். பின்னர் அம்மாவையும் கூட்டிக்கொண்டு, காகிள்ஸ்ஸில் சில பொருட்களை அம்மாவிற்காக வாங்கிக்கொண்டு, அம்மாவை, அவரது வீட்டில் விட்டுவிட்டு வந்தேன். வரும்போது மீண்டும் வங்கிக்குச்சென்றேன். எனது நிலையைப்பார்த்த பாதுகாப்பு ஊழியர் எனக்கு உதவ, எனது தொலைபேசி இலக்கத்தையும், வங்கிப்புத்தகம் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தையும் வாங்கி வைத்தார்..! அத்துடன், கணினி முறைமை சரிவந்ததும் அழைப்பு எடுப்பதாகச் சொன்னார்.

அவர் சொன்ன மாதிரி  மதியம் 1.30 இற்கு எனக்கு அழைப்பு எடுத்தார்..! அதேவேளை நானும், 2.00 மணி முதல் வங்கிக்குச் சென்று சகல ஆவணங்களையும் பெற்றுவரத் தீர்மானித்திருந்தேன். அடுத்த வேலை நாளில், நான் இங்கு இருக்க முடியாது. ஏற்கனவே மூன்று நாட்கள் லீவு எடுத்துவிட்டேன். சிலசமயம் பணம் கிடைக்கவில்லை என்றாலும் அடுத்தமுறை எடுப்போம் என்ற மனநிலையும் வந்துவிட்டது. பண தேவை அவசியமில்லை என்பது ஒன்று. அடுத்து, அந்த ஆவணங்களைத் தவறவிட்டால், மேலும் பல சிக்கல்கள் எழலாம் என்பது இன்னோன்று..!

அதையும் தாண்டி, இதற்காக திரும்பவும் அலைவதைத் தவிர்க்க நினைத்திருந்தேன். அதுவும் ஒரு  முக்கிய காரணம் தான்.

ஆனால், காலை போனபோது காரியம் சொதப்ப, குளித்து, சுவாமிக்குப் பூவைத்து, ஆற அமரச் செல்லும்போது, அனைத்துக்காரியங்களும் சுலபமாக முடிந்தன..!

எது எப்ப நடக்க வேண்டுமோ, அது அப்ப தான் நடக்கும் என்பது மீண்டும் நிரூபணமாகியது..!

 

ஆ.கெ.கோகிலன்

20-09-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!