அரண்மனை 4

 

 


நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சியை முதலில் பாராட்ட வேண்டும்..! ஒரே போமற்றில் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுப்பது என்பதும் ஒரு மிகப்பெரிய திறமை தான்..!

ஒரு பெரிய வீடு..! அந்தவீட்டிற்குள் இருக்கும் குடும்ப உறவுகளுக்குள் ஒருவரையோ அல்லது பலரையோ, பேயோ அல்லது பிசாசோ அல்லது துஷ்ட ஆவியோ பிடிக்கும்..! பல சிரமத்தின் மத்தியில் சுந்தர் சி அந்தப்பேயை அல்லது பிசாசை அல்லது துஷ்ட ஆவியை ஒழித்து, அந்த எஞ்சிய குடும்ப  உறவுகளுக்கிடையே மகிழ்ச்சியைக் கொண்டுவருவார்..!

இது தான், அவரது கதையின் அடிநாதம்.

பேய், பிசாசு, மோகினி, கெட்டசக்தி, ஆவி, ஆவிகளின் கூட்டம், ஆவியுலகம், ஆவிப்பிரபஞ்சம் இவ்வாறாக ஆவிகள் பற்றிய ஆராய்ச்சிகளும், மக்களின் கண்களில் கண்ணீர் வரவைக்கின்ற சென்டிமென்ட் வித்தைகளையும், வார்த்தைகளில்,  பாடல்களில் இளசுகளைக் கவரும் ஆபாசக் கவர்ச்சி நடனங்களையும், காட்சிகளில் ஜாலம் ஏதாவது செய்து சிரிக்கவோ அல்லது ரசிக்கவோ வைக்கின்ற சாமர்த்தியமும் கொண்ட சுந்தர் சி, இனி இறுதிவரை அரண்மனை 5, அரணமனை 6,…அரண்மனை n வரை எடுத்துக்காட்டக்கூடிய அசாதாரண திறமை கொண்டவர் என்பதில் எந்த ஒரு ஜயமும் வேண்டாம்..! அதனை, அவர் முதல் அரண்மனை-1 படத்தில் நிரூபித்தார், இரண்டாம் படத்தில் நிரூபித்தார்..! மூன்றாம் படத்திலும் நிரூபித்தார். ஆகவே இனி nஆம் படத்திலும் நிரூபிப்பார் என்பது திண்ணம்.

“எனக்கு என்ன பிரச்சனை..?” என்றால், மக்களும் ஒவ்வொரு நாளும் சோறு சாப்பிடுவது மாதிரி, ஒரே படத்தை சின்ன சின்ன வித்தியாசங்களுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பது, உண்மையில் பாராட்டக்கூடியது..! ஆனால், அது என்னால் முடியாமல் இருப்பதால் தான் எனக்குள்ள பிரச்சனை..!   அதனால் தான் மக்களைப் பாராட்டுகின்றேன்..!

இந்தப்படத்தைப் பார்க்க ஏறக்குறைய 6 மாதங்களுக்கு மேலாக என்னை, நான் தயார்படுத்தியுள்ளேன்..!

இறுதியில், ஒரு மாதிரி இரண்டு நாட்கள் எடுத்து, அதிலும் 5 இடைவேளை எடுத்து, படத்தைப் பார்த்து முடித்துள்ளேன்.  குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி..!



படத்தில் நடிகர்களின் பங்களிப்பு சிறப்பு. குறிப்பாகத் தமன்னாவை இப்படித் தாயாகவும், பேயாகவும், கடைசியில் தாசியாகவும் (அச்சோ அச்சோ அச்சச்சோ..) பார்த்ததில் பெரிய திருப்தி..! ஏனைய தொழில்நுட்பங்கள் எல்லாம் சிறப்பு..! ஆனால், சுந்தர் சியின் அரண்மனை n வரும்போது “எப்படிப்பார்ப்பது..?” என்று, நான் இன்றிலிருந்தே திட்டம் போடவேண்டியுள்ளது..! வாழ்க அவர் சேவை. வளரட்டும் வையகம்..!

 


ஆ.கெ.கோகிலன்

19-10-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!