பணப் புழக்கம்..!

 


கடந்த சில வாரங்கள், ஏனைய வாரங்களை விட எனக்கு வித்தியாசமாக இருக்கின்றது..!

கடந்த வாரமும் இந்த வாரமும் நான் திருகோணமலையிலே இருக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. தேர்தல் காலத்தில் விடுமுறையெடுத்து யாழ்ப்பாணத்தில் நின்றதால், நிறைய விடயங்கள் ஆற்ற வேண்டியிருந்தது.

 தற்போது, நான் மாத்திரம் புதுமையை உணரவில்லை..! நாடும் அவ்வாறான புதிய வகையிலான உணர்வுகளைப் பெற்று வருகின்றது..! ஆட்சியின் அதிகாரம் கைமாறி, ஏழைகளும் கொண்டாடக்கூடிய சூழலும் வலுப்பெற்று வருகின்றது..! இயற்கையின் பார்வையில் அனைத்தும் நடப்பதால் எல்லாவற்றிற்கும் காரணங்கள் இருக்கும்..! அவை நமக்குப் புரியாமல் இருக்கலாம்..!

ஒவ்வொரு சனி, ஞாயிறும் யாழ் சென்று வரும்போது இருக்கும் ஒரு புத்துணர்வு இந்தவாரம் கிடைக்கவில்லை..! தொடர்ந்து இங்கேயே இருப்பதால் ஒரு வித சலிப்பும் ஏற்படப்பார்த்தது..!  அதனை இயன்றவரை வீடியோ அழைப்புக்கள் மூலம் பலருடன் தொடர்புகொண்டு, மாத்திவிட்டேன்..! இந்த இடத்தில்  தான் தொழில்நுட்பத்திற்கு நன்றி சொல்ல விரும்புகின்றேன். பொதுவாக தொழில்நுட்பங்களின் மறுபக்கங்கள் பற்றியே நான் அதிகம்  சிந்திப்பது வழக்கம்..!

 செப்ரெம்பர் கடைசி  30ம் திகதியில்  அதிகாலை சிறிது மழைபெய்தது..! நான் வழமையாகச் செய்யும் உடற்பயிற்சியை அதே இடத்தில் செய்ய முடியவில்லை. மாறாக மாணவர்கள் சைக்கிள் பார்க்கில், ஒரு பாதுகாப்பு ஊழியருடன் சேர்ந்து  செய்தோம். அப்போது எனது கண்ணுக்குப் புலப்படாத ஏதோவொன்று தலைமயிருக்குள் மாட்டிவிட்டது..! அதனைத் தட்டும்போது, அது கடித்துவிட்டது. உடனே கடும் வலியாக இருந்தது. எத்தனையோ குளவிகள் கடித்தும் தாங்கியுள்ளேன். அந்தச் சின்ன உயிர் கடித்து, மண்டையில் வீக்கத்தையே ஏற்படுத்தியது..! என்னுடன் உடற்பயிற்சி செய்த பாதுகாப்பு ஊழியரிடம் அந்த கண்ணுக்குப் புலப்படாத  உயிர்பற்றிக் கேட்கும்போது அவர் சொன்னார் “அது ஒரு சிறகுமுளைத்த கறுப்பு எறும்பு என்று..!”  எனது காலின் கீழ் ஓடியதைக் காட்டினார்..!  அவ்வளவு தான்..! உடனேயே வழமைபோல், கொலைவெறித்தாக்குதலில் அது தரையோடு தரையாகியது..! மன்னிக்க வேண்டும் என்ற எண்ணம் வலி இருக்கும் வரை வரவே இல்லை. ஆனால் இதை எழுதும்போது வருகின்றது..! அன்றும் வீட்டில் இருந்து வரும்போது, ஆயிரக்கணக்கான முசுறுகளை எரித்து, அழித்துவிட்டே வந்தேன். இதுவும் அந்த வகையைச் சேர்ந்ததால், என்னைப் பழிவாங்கித் தானும் மாண்டதோ தெரியவில்லை..!

 அடுத்து நேற்றைய நாள் தொடங்கும்போதே கடந்த வெள்ளிக்கிழமை மாலை என்னிடம் ஒரு தொகைப் பணம் வெள்ளிவிழாவிற்காக,  அதிஷ்ட இலாபச் சீட்டு விற்பனைகள் மூலம், சேர்த்துத்தரப்பட்டது.  அதனை 30ம் திகதியன்று  காலை தந்த நபரிடம் திருப்பி, கொடுக்க வேண்டி வந்தது. அந்தப்பணத்தை திருப்பி எண்ணிக்கொடுக்கும் போதே “அப்பாடி..!” என்று இருந்தது. அந்தப்பணத்தை உடனேயே வங்கியில் வைப்பில் இடச்சொன்னேன். ஆனால் அதற்கான குறித்த ஊழியர் வராததால், மாலை இன்னும் நிறையப் பணத்தையும் சேர்த்து என்னிடம் தந்தார்..! நான் காலையே களைத்துவிட்டேன். இனி மாலையிலுமா..? அலுத்துக்கொண்டு,  ஒரு அலுமாரியைக்கொடுத்து அதற்குள் நீங்களே வைத்து எடுங்கள் என்று, அதன் சாவியையும் கொடுத்தேன். அவர் மேலும், அதைச்சரியாகக் கணிப்பிட்டு வைக்க  வேண்டும் என்பதற்காக என்னையும் சேர்த்துக்கொண்டு, எண்ணத்தொடங்கினார். ஏறக்குறைய 1 மணி நேரம் அதற்குச் செலவிட்டு இருப்போம். எம்முடன் மேலும் இரு ஆண், பெண் மாணவர்களும் இணைந்து கொண்டார்கள். பின்னர் , நான் முதலே சொன்னது போல், குறிப்பிட்ட பகுதியில் வைத்துப்பூட்டி அதன் திறப்பை அவரே வைத்திருந்தார்.

கார்த்திகை 1இல், மீண்டும் அதனை எடுத்து, அன்றைக்குச் சேர்ந்த தொகையோடு, வங்கியில் வைப்பில் இட  முனைந்தார்கள்..!  அதற்காக மதியம் மேலும் மூன்றுபேர்  45 நிமிடங்களுக்கு மேல் செலவிட்டு, தயார்படுத்தினார்கள். நிதியைச் சேகரிப்பதும், பாதுகாப்பதும், அதற்கான கணக்குகளைக் காட்டுவதும் மிகவும் பொறுப்பு வாய்ந்த  செயல்களாகும்..! எப்போதும் பொறுப்புக்கூற நாமும் தயாராக இருக்க வேண்டும்.

 எனது நிறுவனத்தில் இரு துப்பரவுப்பணியாளர்கள், சகோதர மொழி பேசுபவர்களாக இருக்கின்றார்கள். அதேவேளை தமிழ் பேசும் ஊழியர்கள் இருவரும் இருக்கின்றார்கள். சகோதரமொழி பேசுபவரிடம் என்ன என்ன வேலைகளைச் செய்விக்க வேண்டும் என்பதை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ புரியவைக்க என்னால் முடியவில்லை. தற்போது கூகுள் மொழிமாற்றியே எனக்கு உதவுகின்றது..!

பல இடங்களில்  தொழில்நுட்பங்கள் பாதிப்புக்களைத் தந்தாலும் பல இடங்களின் நன்மைகளையும் தருவதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரு மொழியை வைத்துக்கொண்டே, பல மொழி பேசுபவர்களுடன் தொடர்பாடும் காலம் தற்போது வந்துள்ளதை அனைவரும் உணர வேண்டும். எல்லோரும் தனித்தனியே மொழிகளைப்படிக்கக் காலத்தை  விரயப்படுத்தாமல் தொழில் செய்யும் தகுதிகளையும், சமூகத்திற்குப் பயனான செயல்களைச் செய்வதற்கு, தயாராகவும் வேண்டும். ஒருவருக்கு பல மொழிகள் கற்க விரும்பினால், அவர் கற்கலாம். அதனால் அவருக்கான பல தொழில் வாய்ப்புக்கள் வரும். ஆனால் அதையே பலரும், வற்புறுத்தலின் பெயரில் செய்தால், பின்னர், அதற்கான கேள்விகள் குறையும். அதற்காக விரும்பிப் படித்தவருக்கே வாய்ப்பு இல்லாமல் போகும்.

 நாம் பலருக்கு நன்மை செய்ய வேண்டும்..! அதற்காக, உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், சிலர் எம்மை ஒரு மாதிரி, அப்பாவியாக, ஒன்றுக்கும் லாயக்கு அற்றவராக நினைக்கலாம். ஆனால் இறைவனும், இயற்கையும் உங்களது மனத்தூய்மையைக் கண்டு, நிம்மதியான வாழ்வை அளிப்பது மாத்திரம் நிச்சயம். யார் என்ன சொன்னாலும், நல்லது செய்பவர்களை இயற்கை என்றும் நேசிக்கும். நிறைவையும் நிம்மதியையும் கொடுக்கும்.  உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசினால், அதாவது பொய் பேசினால், அந்த வாய்க்கு பொரியும் கிடைக்காது என்று பெரியோர்கள் சொல்வார்கள். நானும் அதனை நம்புகின்றேன்.

 

ஆ.கெ.கோகிலன்

01-10-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!