இலண்டன் மனிதன்..!

 


இன்று காலையே மழை தனது வேலையைக்காட்ட இன்று முழுக்க மழைதானோ என யோசிக்க வைத்துவிட்டது..!

இன்று நான் திருகோணமலை போகவேண்டும். அது மாத்திரமன்றி, எனது உறவினர் ஒருவரது மகளின் சாமத்திய வீட்டிலும் கலந்துகொள்ள வேண்டும். அதனைத் தவிர்க்க முடியாது. ஏனென்றால், அவரும் எனது இருமகள்களின் சாமத்திய நிகழ்வுகளுக்கும் வந்து, எனது அழைப்பிதலுக்கு மதிப்பளித்தவர்..!

மழைதொடர்ந்து பெய்தாலும் நானும், மனைவியும் திட்டமிட்டபடியே அந்த நிகழ்வில் கலந்து, மதிய உணவையும் உண்டு வீடுதிரும்பினோம்.  வழமைபோல், சகல ஏற்பாடுகளையும் செய்து, மாலை திருமலைக்குப்போகும் பஸ்ஸிலும்   ஏறினேன். ஏற்கனவே சீற் புக்பண்ணிய பஸ் என்பதால், எனக்குரிய சீற் இருந்தது. பிரச்சனையில்லாமல் இருக்கக்கூடியதாக இருந்தது. மழைவந்தாலும் சமாளிக்கூடியவகையில்  பெரிய மழைக்கவசத்தையும் கொண்டே சென்றேன். ஆனால் மழைபோகும் போது வரவில்லை..!

பஸ்ஸில் எனக்குப் பக்கத்தில் சிலர் நின்றிருந்தார்கள். இடையில் வயதான, சற்று வெள்ளை நிறமான, கொஞ்சம் குள்ளமான ஒருவர், தனது பாக்கை குறித்த தாங்கியில் வைக்கச் சிரமப்பட்டார். நான் உடனே எழுந்து அவருக்கு உதவினேன். அவரும் நன்றி சொன்னார். இந்த இடத்திற்கு நடத்துனர் அனுப்பியதாகவும், கிளிநொச்சிப் பகுதியில் சிலர் இறங்குவார்கள் என்றும் அதுவரை தான் நின்று வருவதாகவும் சொன்னார். நானும் பரவாயில்லை, என்னுடைய இடத்தில் இருங்கள் என்றேன். அவர் உடனே மறுத்துவிட்டார்..! கிளிநொச்சி கடந்தும் அவருக்குச் சீற் கிடைக்கவில்லை. நான் எனது இயல்பைப் பற்றிச் சொல்லி, அவரை வற்புறுத்தி எனது சீற்றில் இருத்தினேன். சற்று நேரத்தில், அருகிலுள்ளவர் எழுந்து அந்த சீற்றை எனக்குத் தர, மீண்டும் அவர் எழுந்து, எனது சீற்றை என்னிடம் தர  அன்பு அலை அங்கே சூழன்று அடித்தது..!

இதற்கு இடையில் அவர் தனது பேர்ச்சைத் திறக்கும் போது அவருடைய பஸ் ரிக்கெட் கீழே விழுந்து  காற்றில் மறைந்துவிட்டது..! அங்கும் இங்கும் குனிந்து, தேடினார் கிடைக்கவில்லை. அவருக்கு உதவ பலரும் தேடினோம், கிடைக்கவில்லை. இறுதியாக நடத்துனரிடம் சொல்ல, அவரும் ஒன்றும் சொல்ல முடியாமல், நகர்ந்து சென்றார். ரிக்கெட் பரிசோதிப்பவர்கள் வந்தால், நாமெல்லாம் சொல்லலாம் தானே..! அதே போல் நடத்துனரும்  திருகோணமலைக்கு ரிக்கெட் எடுத்தவர்களைக் கணக்கு வைத்துக்கொண்டு, குறித்த நபர் ரிக்கெட் எடுத்தவரா அல்லது இல்லையா என்றும் சொல்லமுடியும் தானே. யாரும் அவரைப் பார்த்தால், ரிக்கெட் எடுக்காமல் ஏறக்கூடியவர் மாதிரித் தெரியவில்லை..!

 பின்னர்  அவருடன் கதைக்கும் போது தெரிந்தது, அவர் கடந்த 35 வருடங்களாக இலண்டனில் வசிப்பவர்..! என்னைவிட ஏறக்குறைய 10 வயது மூத்தவர்.

 திருகோணமலை வரும் வரை, இரண்டு பேரும் மாறி மாறி பல விடயங்களைக் கதைத்தோம். அவர் தற்போது, அங்கே ஒரு பிரபலமான நூல்நிலையத்தில் உதவி நூலகராக வேலைசெய்கின்றார். அதனால் நிறையப் புத்தகங்கள் படித்துள்ளார். சம்பந்தருக்கு முதலுள்ள மாணிக்கவாசகர் என்ற பாராளுமன்ற உறுப்பினரின் பேரன் தான் அவர்..! தனது திருகோணமலை அலப்பறைகள் பற்றி நிறையச்  சொன்னார்.  கடந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் விசுவாசி என்பது புரிந்தது..! இருந்தாலும் நான் அரசியல் பக்கம் போகவில்லை. நேர்மையான ஆட்சியை யார் வழங்கினாலும் அவர்களுக்கு உதவியாக இருப்பேன் என்று சொல்லிவிட்டு இறங்கினேன். அவசரத்தில்  அவரது கைபேசி இலக்கத்தை சரியாக எழுதமுடியாமல் போய்விட்டது.

சரியான நேரத்திற்கு திருமலை வந்து குளித்து, நண்டுக்கறியுடன் பானைச் சாப்பிட்டு, சில வழமையான வேலைகளைச் செய்துவிட்டு படுத்தேன்.

விடியும்போது கடும் மழை. வெளியே உடற்பயிற்சி செய்ய முடியாது. எனவே அறைக்குள் சிரப்பட்டு பிசியோதெரபி செய்தேன்.

எமது கன்ரீன் நடத்துனருக்கும் வருத்தம் என்பதால் இன்று, மூன்று வேளையும் வெளியிலேயே உணவு எடுத்தேன். அத்துடன் ஒரு பெண்  முகாமைத்துவ உதவியாளர், இன்று எமது நிறுவனத்தில் இணைந்தார்.

அதுமாத்திரமன்றி, அதிஷ்ட இலாப சீட்டிலுப்பிற்கான பரிசில்களை இன்றில் இருந்து வழங்கத் தொடங்கினோம்.

மாலை, நான் இந்நிறுவனத்தில் இணையக்காரணமான எனது நண்பர் வந்தார்..! அவருடன் சில மணிகள் செலவிட்டதுடன் இரவுச்சாப்பாட்டையும் எடுத்து வந்து, உடலுக்கு சக்தியை வழங்கினேன்.

நேற்றுக்காலை முதல் இன்று மாலை வரை வழமைபோல பல விடயங்கள் இருந்தாலும் இலண்டன் மனிதரின் செயல்கள், பேச்சுக்கள் மற்றும் அவர் சொன்ன அனுபவங்கள்  இன்னும் மறக்கமுடியாமல் இருக்கின்றன..!

 


ஆ.கெ.கோகிலன்

21-10-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!