சாபக்கேடு..!

 


 


சில விடயங்களைச் சுத்தி வளைக்காமல் நேரடியாகப் பேசவேண்டும் என்று நினைக்கின்றேன். அப்படியாக உலகோடு நோக்கும்போது, எமது நாட்டைப் பொறுத்தவரை  ஒருவன், சிங்களப் பௌத்தனாகப் பிறக்காவிட்டால், இந்த நாட்டில் ஜனாதிபதியாக வரமுடியாது..!

நான் இந்து சமயம் என்று பொதுவாகச் சொன்னாலும், அதன் ஒரு பிரிவான சைவ சமயம் தான் எனது சமயம்..! நாட்டில் ஜனாதிபதியாகும் தகுதிபோல், எவ்வளவு  ஆச்சாரமாக இருந்தாலும், பிராமணன் அல்லாத ஒருவன் இறைவனுக்கு கிட்டப் போகமுடியாது..!  இறைவன் எப்படிக் கண்ணுக்குத் தெரியும்..? அதாவது இறைவனுள்ள கோவிலுக்குள் சென்று பூஜை செய்ய முடியாது..! அதேபோல் ஒரு பிராமணன் ஆச்சாரமாக இல்லாவிட்டாலும், அவன் அசைவம் சாப்பிட்டாலும், கீழ்தரமான எந்த கெட்ட பழக்கங்கள் இருந்தாலும், அவனைப் பிராமணனாகத் தான் இந்த சமூகம் பார்க்கின்றது..! அவன் கெட்டது, செய்தாலும் அவனை நல்ல விதமாகவே நோக்குகின்றது இந்த சமூகம்..!  ஒருவன்,  பிறப்பால் ஏழையாகவோ, பணக்காரணாகவோ, எந்தவோர் சமூகத்திலோ பிறப்பதற்கு, அவன் ஒன்றும் செய்ய முடியாது. பொதுவாகப் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள்..! ஆனால் இறக்கும்போது முயற்சியால், படிப்பால், உழைப்பால்  தொடர்ந்து ஏழையாக இருக்கத்தேவையில்லை. ஆனால்,  ஒரு பொதுவான எல்லோரும் வழிபடும் கோவிலில், குறித்த சமூகத்தில் பிறக்காத ஒருவன் பூஜை செய்ய முடியுமா..? பணம் இருந்தால் தானே தனக்கு என்று ஒரு கோவில் கட்டி பூஜை செய்யலாம். நான் அதைச்சொல்லவில்லை. பொதுவாகச் சமூகங்கள் ஏன் சில விடயங்களை இன்னும் ஆராயாமல் இருக்கின்றது என்ற ஆச்சரியம் எனக்கு என்றும் தொடர்கின்றது..!

 ஆய்வுகள் நடந்து, இவற்றில் சீர் திருத்தங்கள் வருமாயின் நாடும், சமூகமும் உருப்படும். சமூகம் உருப்பட, யாரும் ஆச்சாரத்தைக் கடைப்பிடிக்கக்கூடிய வகையில் இருந்தால், அவர் கோவிலுக்குள் செல்லும் அச்சகர் ஆகலாம். அதேபோல் யாரும் நாட்டுக்கு நல்லது செய்யும் நோக்கங்களுடன் இருந்தால், அவர்  இலங்கைத்திருநாட்டின் ஜனாதிபதியும் ஆகலாமென இருக்க, சம்பிரதாயங்களையும்,  சட்டங்களையும் மாற்றியமைக்க வேண்டும்.

இன்று நவராத்திரி தொடக்கம். பணிப்பாளர் என்ற வகையில் முதலாவது பூஜையை எனக்குத் தந்தார்கள். நான், என்னால் ஆன பண உதவியை மட்டும் செய்துவிட்டு, ஏனைய அனைத்தையும் ஊழியர்களிடமும், மாணவர்களிடமும் எதிர்பார்த்தேன். அவ்வாறே அனைத்தும் நடந்து முடிந்துள்ளன..!  குறிப்பாக அச்சகர் இல்லாமல், எமது நிறுவன ஊழியரே நவராத்திரி பூஜையினைச் செய்தார்.

யாழ்ப்பாண உயர்தொழில்நுட்ப நிறுவனத்திலும் ஏதோவோர் சந்தர்ப்பத்தில் நானே தீபம் காட்டிப் பூஜையினைச் செய்தேன்.

எனது பூஜைக்கு, உதவிய அனைவருக்கும்  எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும், ஆங்கிலேயர்களின் உடைகளை பின்பற்றப் பழகிய எமக்கு, எமது சூழலுக்கான உடைகளை இன்னும் தெரிவு செய்ய முடியாமல் இருப்பது வேதனைக்குரியது..! இந்தவகையில் எமது பெண்களின் ஆடைகள் ஏறக்குறைய எமது சூழலுடன் ஓரளவுக்கு ஒத்துவருகின்றன..! ஆனால் ஆண்களின் அலுவலக ஆடைகளில் திருத்தம் அவசியம்.

மாற்றத்தை நாடும் மக்களுக்கு, அரச முறைமையை மாற்றும் அரசு அமைந்துவரும் இந்தக்காலத்தில், சமூகத்திலும், நாட்டிலும், நகரங்களிலும் கலாசார விழுமியங்களைப் பேணும் வகையிலும், தேவைகளின் அடிப்படையிலும் மாற்றங்கள் செய்வது காலத்திற்கு ஏற்புடையதாகும்.

நல்ல மாற்றங்களை வரவேற்றால் நாடும், நகரமும், ஊரும் விரைவிலே முன்னேறும். வெளிநாடுகளைப் பார்த்துக் கொட்டாவி விடாமல், எமது நாட்டையும், மக்களையும், செயல்திறன்களையும்,  உலகே திரும்பிப் பார்க்க வைக்க, அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சரியான மாற்றங்களை சரியான தருணத்தில் செய்வதே சரியான வெற்றியை எமக்கு ஈட்டித்தரும்.

 

ஆ.கெ.கோகிலன்

03-10-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!