பொன் ஒன்று கண்டேன்..!

 

 


கவிதை போல் தலைப்பைக் கண்டதும் படமும் அவ்வாறான உணர்வைத் தரும் என்று நம்பினேன். உண்மையில் தந்ததா..? என்றால் எனது பதில் தந்தது என்பது தான்..!

படத்தில்  இரண்டு கதாநாயகர்கள் ஒரு பெண்ணுடன் இரண்டு விதத்தில் தொடர்புபட்டுள்ளார்கள்..!

ஒருவர் ஆரம்பத்தில் அவளுடன் பழகி, பிடித்துப்போய் காதல் திருமணம் செய்து, சில காலத்தில் மனப்பொருத்தம் இன்றிப் பிரிந்துள்ளார்கள். ஏறக்குறைய விவாகரத்தே பெற்றுவிட்டார்கள்..!

விவாகரத்துப் பெற்ற பின்னர், மேலும் படித்து, தனது திறமைகளை நிரூபிக்க செய்யும் முயற்சிகளின் போது இன்னோரு கதாநாயகனைச் சந்திக்கின்றாள் அந்தப்பெண்..! இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கின்றது. ஒரு கட்டத்தில் தான் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவள் என்ற உண்மையை, கதாநாயகி இரண்டாவது நாயகனிடம் சொல்கின்றாள்..!

அவனும், முதலில் தயங்கினாலும், தனக்கு இவளை விட்டால், வேறு நல்ல பொண்ணு கிடைக்காது எனநினைத்து, அவளை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து காதலிக்கின்றான்.

இந்தப் பெண்ணுடன் சம்பந்தப்பட்ட  இரு நாயகர்களும் ஆரம்பத்தில் கும்பகோணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் படிக்கும்போது, கிரியும் பாம்புமாக இருந்தவர்கள். ஒருவன் படித்து, நகரத்தில் பெரிய வைத்தியராக இருக்கின்றான். அதேவேளை, மற்றவன், ஆசிரியையான தனது தாயை, அவரது முதுமையில் வந்த நோய் காரணமாக, தான் தொழிலே செய்யாமல், தாயாரை வீட்டில் வைத்துக் கவனமாகப் பார்க்கின்றான்..!

பல வருடங்களுக்குப்பிறகு இரண்டு நாயகர்களும் சந்திக்கும்போது, ஒருவனுக்கு மற்றவன் மேல் கோபம் போய், நேசம் மலர்கின்றது..!  ஆரம்பத்தில் இருவரையும் கோபப்படுத்தியது  ஒரு பெண்..!

நீண்டகாலத்திற்குப் பிறகு விதி, அதே இருவரையும் கோபப்படும்  நிலையில் கொண்டுவந்து விடுகின்றது. இருவரும், திரும்ப தாம் காதலித்த மற்றும் மணந்த பெண்ணுக்காக எல்லாவற்றையும் செய்து அவளின் மனதில் இடம் பிடிக்க நினைக்கின்றார்கள்..!

இந்தப்போட்டி திரும்பவும் குடும்பங்கள், மற்றும் நட்புக்களுக்கிடையே நடக்கின்ற பிரச்சனையாக மாற, நாயகி என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்ப, ஆரம்பத்தில் அந்த இருவரையும்  கவர்ந்த  சிறுமி, தற்போது வளர்ந்து இன்னொரு நாயகியாகத் திரும்பி வர, மீண்டும் இருவரும் அவரைத் துரத்த, அந்த நாயகி திருமணம் செய்யாத நாயகரின் கையைப் பிடிக்க, மற்றவர் தனது விவாகரத்துப் பெற்ற மனைவியைத் திரும்பக் கையைப்பிடிக்கப் படம் முடிகின்றது.

வி.பிரியா என்ற ஒரு பெண் இயக்குனர், ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து இயக்கியுள்ள படம் என்பதால் சற்று மென்மையான உணர்வுகள் படம் பார்க்கும்போதே எழுகின்றது..! அது மனதிற்கு நன்றாகவும் இருக்கின்றது. சற்று நம்ப முடியாத கதை என்றாலும், சுவாரசியமாக இருக்கின்றது.

கிட்ட இருக்கும் போது தெரியாத அருமை, விலத்தி இருக்கும் போது தான் புரியும். அதேபோல் தான், ஆரம்பத்தில் மனைவியாக இருக்கும் போது வெறுத்தவன், அதே மனைவியை இன்னொருவன் காதலிக்கும் போது, திரும்பப்பிடிக்க ஆரம்பித்துவிடுவது சிறுபிள்ளைத்தனம் என்றாலும், மனிதன் என்பவன் எப்போதும் குழந்தையாக இருந்து வளர்ந்தவன் தான்..! குழந்தைத் தன்மை என்பது அவனுக்குள் எப்போதும் இருக்கும்.

அசோக்செல்வன்,  வசந்த் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, மற்றும் அம்ருதா ஸ்ரீனிவாசன்  என அனைவர் நடிப்பும், தொழில்நுட்பங்களும் தரமாக இருந்தன..!

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 


ஆ.கெ.கோகிலன்

29-09-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!