திடீர் முடிவு..!
அண்மையில் ஒரு சாமத்திய வீட்டிற்கு போகக்கூடிய வாய்ப்பு வந்தது. மிகவும் எளிமையாகவும், ஆடம்பரமின்றியும் அந்த நிகழ்வை நடாத்தியிருந்தார்கள். அதன் பிறகு எனது மனைவிற்கு, கொரோனாவாலும் சில உறவுகளின் மரணங்களாலும் தடைப்பட்ட இரண்டாவது மகளின் சாமத்தியவீட்டை நடாத்தவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் என்னிடம் ஒப்புதல் கேட்டார். மறுப்பதற்கு என்ன இருக்கின்றது..? செய்வோம் என்று விட்டேன். தூரத்தில் இருந்து வரக்கூடிய உறவு என்றால் தற்போது தம்பி மட்டும் தான். அதுவும் கொழும்பில் இருந்து தான் வரவேண்டும். அவரிடம் ஒரு நாளைக்கேட்டு, சம்மதம் பெற்றவுடன், ஐயரிடமும், மண்டம் வழங்குபவரிடமும் கேட்டு, எல்லாம் பொருந்திவர நிச்சயப்படுத்தினோம் அந்தத்திகதியை..!
முன்பு அச்சிட்ட வரவேற்பு அட்டைகளில் சில மாதிரிகளை எடுத்துக்கொண்டு,
முன்பு பிறின்ட் செய்த அச்சகத்தில் சில மாற்றங்களைச் செய்து, திரும்பவும் அந்த வரவேற்பு
அட்டைகளைப் பயன்படுத்தி, புதிய திகதிக்கான வரவேற்பு அட்டைகளைத் தயார்படுத்தி, செலவுகளைக்
குறைத்தோம்.
இந்த அட்டைகளை மாற்றும் செயற்பாட்டில் நானும், மனைவியும்
இருபிள்ளைகளும் இணைந்து செயற்பட்டது ஒரு நிறைவைத் தந்தது. நாடே பொருளாதார கஷ்டத்தில்
இருக்கும் போது இது தேவையா என நான் என்னையே கேட்டுக்கொண்டேன். பின்னர் நாளை என்பது
எமது கையில் இல்லை. எனது கடமை, முயற்சியைச்
செய்வோம் என்ற எண்ணத்தில் காரியங்களைச் செய்யத்தொடங்கினேன். இதேநேரம்
எனது மாமியின் தமக்கையார் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துவிட்டார். எனது மனைவியும், குடும்பத்தினரும்
வேண்டியதற்கு இணங்க என்னால் அந்த துக்க நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை. நான் வழமையாக
சுடலை போய்விட்டு வந்து விளக்கு வைத்துக்கும்பிடுகின்ற பழக்கம் உடையவன். இந்த முறைகளைப்பற்றி
அதிகம் அலட்டிக்கொள்ளாதவன். ஆனால் மற்றவர்கள் வேண்டியதால், அவர்களுக்காக எனது, எண்ணப்படி
நடக்கமுடியாத சூழல் வந்ததையிட்டு கவலைப்பட்டேன்.
மரணம் நடந்த வீட்டில் இளையவர்கள் மிகக்குறைவு. முதியோர்களே
அதிகம். அவர்களுக்கு நிச்சயம் என்னால் சிறிய உதவியாவது செய்திருக்க முடியும். ஆனால்
சூழல் தடுத்துவிட்டது.
மாமாவின் மனைவி இறக்கும் போது 2020இல் தடைப்பட்ட நிகழ்வு,
அவரின் தமக்கை இறக்கும்போது, தடைப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்துவந்தேன்.
இதேசமயம், புதிய பதில் பணிப்பாளர் நாயகம், அவசர கூட்டம் ஒன்றைக்
கொழும்பில் கூட்டியிருந்தார். அதற்காகக் கொழும்பு செல்லும்போது, உறவுகளுக்கும், சில
நண்பர்களுக்கும் வரவேற்பு அட்டைகளைக் கொடுத்துவிட்டு வந்தேன். இவர்களுக்கு கொடுத்ததன்
நோக்கம், இவர்களும் எனக்கு அழைப்பிதழ்கள் அல்லது மரியாதைகள் கொடுப்பவர்கள். இரண்டு,
அவற்றுக்கெல்லாம் நான் போனேனோ தெரியவில்லை. அவர்களுக்கும், என்னைப்போல் செயற்படுவதற்கான உரிமையை வழங்க ஆசைப்பட்டேன். அவர்கள் அவர்களது,
சூழலைப் பொறுத்து தீர்மானிக்கட்டும். குறிப்பாகத் தகவலுக்காகவும், ஒவ்வொரு நபர்களின்
ஆசீர்வாதத்தை வேண்டுவதற்காகவும் கொடுத்ததாக கருதலாம்..!
என்ன செய்வது..? எமது சூழல் இப்படியான நிகழ்வுகளின் ஊடாக
சமூக உதவியும், ஒற்றுமையும் மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை நமக்கு வழங்குகின்றது.
ஊரிலே இருந்தால் தவிர்ப்பது கடினம்.
தூரப்போனால் குறைசொல்ல யாருமில்லை. எப்படியும் செயற்படலாம்.
நீண்ட வரலாறுகள் மூலம் வந்தவை, நிச்சயம் அர்த்தம் பொதிந்தவையாகவே
இருக்கும் என்பது மட்டும் உண்மை.
ஆ.கெ.கோகிலன்
25-05-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக