பொசுக்கிய மாலைக் குளியல்..!
கொழும்பில் தலைமை அலுவலகக் கூட்டத்திற்காக யாழில் இருந்து கொழும்புக்கு குளிர்சாதன வசதியுள்ள ஒரு பஸ்ஸில் இன்று காலை வந்தேன். வழமைபோல் தம்பி வீட்டில் காலைக்கடனை முடித்து வெளியேற முன்னர் இன்று தம்பியும், அவரது அலுவலக தேவைக்காக வெளிநாடு ஒன்றிற்கு புறப்பட்டார். சிறிது நேரம் கழித்து நானும் வெளிக்கிட்டேன். காலை உணவை ஒரு கடையில் எடுத்துக்கொண்டு, அரை மணிக்கு மேல் காத்திருந்து, பஸ்ஸைப்பிடித்து, அதிலும் நீண்ட நேர காத்திருப்பின் பின்னர் அலுவலகம் போய்ச்சேர்ந்தேன்.
புதுப்பணிப்பாளர் நாயகம் கூட்டத்தைத் தலைமை தாங்கிக் கொண்டு சென்றார்.
போகும்போது ஏதாவது குழப்பமாகக் கேட்பார் என்ற எண்ணத்தோடு சென்றதால், அவரின் செயற்பாடு
மிகவியப்பாக இருந்தது. இன்னொருவிதமான பார்வையில் நிறுவனத்தை திறமையாக வழிநடத்துவார்
என நம்பக்கூடிய வகையில் செயற்பட்டார்.
எனது வேலைகளைத் தலைமையகத்தில் முடித்துக்கொண்டு, வழமைபோல்
பொரளையிலுள்ள மாமாவீட்டிற்குச் சென்று ஒரு மணி நேரத்தைச் செலவழித்துவிட்டு, மீண்டும்
தெஹிவளை வந்தேன். வரும்போதும் பஸ்ஸில் நீண்ட நேரம் காக்க வேண்டியிருந்தது..! அத்துடன்
அணிந்த புது அடைகளும், காலணியும் உடலை அதிகமாக அழுத்திக்கொண்டிருந்தன. வெயிலின் தாக்கத்தால்
சகிக்க முடியாமல் உடல் எங்கும் வேர்த்துக்கொட்டியது.
ஒருவாறு, தெஹிவளையில் இறங்கி, பொல்ரொட்டிகள் மற்றும் சீனிச்சம்பல்
என்பவற்றை இரவுச்சாப்பாடாக வேண்டிக்கொண்டு தம்பி வீடுவந்து, குளிக்க முடிவெடுத்தேன்.
உடனே குளிக்கும்போது தெரியவில்லை. ஒரு பக்கம் குளிரான நீரும்,
இன்னொரு பக்கம் சூடான நீரும் வந்தது. தண்ணீர் அதிகம் பயன்படுத்தக்கூடாது என்று மற்றவர்கள்
வீட்டில் தங்கும்போது நான் கடைப்பிடிக்கும் ஒரு பழக்கம்.! அதனை இன்றும்
செய்ய நினைத்து சரியாகக் குளிக்க முன்னர் சவர்க்காரத்தைப்போட்டேன். பின்னர் குளிக்கும்
போது தான் தெரிந்தது. இருபக்கமும் சூடான நீரே வந்தது..! தொடர்ந்து குளிக்க முடியவில்லை.
உடலெங்கும் சவர்க்காரம். எல்லாக் குழாய்களிலும் கொதிநீரே வெளிவந்தது. கொஞ்சமாவது சவர்க்காரம்
போக கழுவுவோம் என்று தண்ணீர் குழாயைத் திறக்க, அதிலும் சூடான நீரே வெளிவந்தது. அதிக வெப்பத்தால் Tank தண்ணீரே
கொதித்துக்கொண்டிருந்தது..! உடலில் அந்நீர்படும்போது தாங்கமுடியவில்லை. தோலை அள்ளியது..!
உடலும் வலியால் துடித்தது. வெறுத்துப்போனேன். இனிமேல், வெயில் நேரம் மாலைக்குளியல்
வேண்டாம் என்ற நினைப்போடு சிறிதுநேரம் படுத்துவிட்டு, இரவு 7.00 மணிக்கே வீட்டில் இருந்து
புறப்பட்டேன். பஸ்ஸூம் Book செய்யவில்லை. ஒரு ஓட்டோவைப் பிடித்துக்கொண்டு, வெள்ளவத்தை
ராமகிருஷ்ணன் மண்டபப்பகுதியிலுள்ள குளு குளு வண்டிகளில் ஒன்றில் சீற் இருந்தது. அந்தபஸ்ஸில்
ஏறி அதிகாலை 4.00மணிக்கே வீடுவந்து சேர்ந்தேன். தொடர்ந்து பயணித்ததால் உடலில் வலி எடுத்தது.
காலும் விறைக்கத் தொடங்கியது. இருந்தாலும் ஒருவாறு சமாளித்து, போனகாரியத்தை முடித்தது
மனதிற்கு நிறைவானது.
ஆ.கெ.கோகிலன்
15-06-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக