மகிழ்ச்சி நகர்ந்தது..!
கடந்த ஒரு மாதத்திற்குள், நடந்த விடயங்கள் 3 வருடங்களுக்கு
முன்னர் நடந்திருக்க வேண்டியவை. ஆனால் காலம் செய்த கோலம், இயற்கை என்னை இவ்வளவு நாட்கள்
தண்டித்தது..! என்று இயற்கை மன்னித்ததோ, அன்றே
தடைப்பட்ட அனைத்தும் தங்குதடையின்றி நடந்தேறியது..!
இப்படியான உணர்வுகள் பொதுவாக மக்களுக்கு வருகின்றதா என்பது
எனக்குத் தெரியாது. ஆனால் எனது வாழ்க்கையில் இயற்கை விளையாடுவதை பல முறை நான் அவதானித்துள்ளேன்..!
இந்த அவசர காலத்தில் இயற்கையின் போக்கை அவதானிக்க யாருக்கு
நேரம் இருக்கின்றது..? ஆனால் நான் அதற்கு சிறு நேரமாவது ஒதுக்கி அவதானிக்கின்றேன்.
இயற்கையின் அனுக்கிரகத்தால், சூழலில் ஏற்படும் மாற்றங்களை கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன். எனது வாழ்க்கையில் வந்த சூழல்களும், அதில் இருந்து
கிடைத்த பாடங்களும், தற்போது மீதமுள்ள எனது வாழ்க்கைக்கான வழிகாட்டிகள்..!
இன்று அரச லீவு நாள். முஸ்லீம் மக்களின் ஹஜ்ஜூப் பெருநாள்
(பக்ரீத் பண்டிகை). ஆனால் இரண்டு, முக்கிய உறவினர்களின் நிகழ்வுகளில் பங்கேற்கவேண்டிய
சூழல். ஒருவாறு, ஒரு பகுதி உறவினரைச் சமாளித்து, இன்று என்னால் வரமுடியாது என்பதை முற்கூட்டியே
தெரிவித்ததுடன், பதிலாக அவர்களுடன் ஒரு முழுநாள் நேரத்தைச் செலவழித்துவிட்டேன்.
மற்றப்பகுதி அயலிலே இருக்கின்றார்கள். எனவே நானும், மனைவியும்
அவர்களது நிகழ்வுக்கு லிப்ட் வசதியுள்ள ஒரு
மண்டபத்திற்கு சென்று அமைதியாக ஒவ்வொரு நிகழ்வுகளையும் ரசித்துக்கொண்டு இருந்தேன்.
மனைவியும் அவ்வாறே இருந்தார். 3 வாரங்களுக்கு முன்னர் நாம் ஓடிய ஓட்டங்களும், நிகழ்வுகளும்
மனத்தில் ஓட நிம்மதிப் பெருமூச்சை விட்டோம். தொடர்ந்து நிகழ்வுகள் போய்கொண்டிருந்தன.
அது தொடர்பான தகவல்களை மனைவி சொல்லிக்கொண்டிருந்தார்.
திருமணம் நடந்துகொண்டிருக்கும் குடும்பத்திலும் இரண்டு பெண்கள் தான் இருக்கின்றார்கள்.
மூத்தவர் திருமணம் செய்துவிட்டார். இளைய மகளின் திருமணமே இன்று நடைபெறுகின்றது.
எல்லாம் சிறப்பாக நடந்துகொண்டிருந்தன. சாறி மாற்றிக்கொண்டுவந்து,
மணமகன் தாலி கட்ட அரைவாசி மண்டபச்சனம் எழுந்து மலர்தூவி வாழ்த்தினார்கள்.
அதிசயமாக இருந்தது..! நாங்கள் கொஞ்சம் பின்னுக்கு இருந்ததால்
அதனைச் செய்ய முடியவில்லை. அவர்கள் வரவேற்பு அட்டையில் சொன்னபடி சரியான நேரத்தில் தொடங்கி,
சரியான நேரத்திற்குள் எல்லாவற்றையும் முடித்தார்கள். தாய் மற்றும் தந்தையார் முகத்தில்
பெருநிம்மதி தெரிந்தது. மணமக்கள் அவர்களிடம் ஆசீர்வாதம் பெறும்போது மீண்டும் எனது நிம்மதி
மீண்டும் பறந்தது..! ” நாம் இன்னும் இரண்டு திருமண நிகழ்வுகள் செய்ய வேண்டும்..” என்பதை
எண்ணியபோது..!
மனைவியும் அதே கருத்தை எண்ணியுள்ளார். இப்ப தான் சாமத்தியவீடு
முடிந்துள்ளது. ஏன் அவரசப்பட வேண்டும்..? இருந்தாலும், நாளை என்ன நடக்கும் என்பதை நாம்
அடித்துக்கூறமுடியாது. எமக்கு அந்தக்கடமை இருந்தால்,
நிச்சயம் செய்தே ஆகவேண்டும். தவிர்க்க முடியாது.
எல்லாம் அந்த இறைவனுக்கே வெளிச்சம்.
ஆ.கெ.கோகிலன்
29-06-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக