டடா (அப்பா)
கடந்த
சில வாரங்களாக திரைப்படங்கள் பார்க்கும் எண்ணம் வராத அளவிற்கு வேலைகள் இருந்தன. படம்
பார்க்க முதல், அதனை ரசிப்பதற்கான ஒரு மனநிலை உடலில் வந்தால் தான், படத்தை ரசிக்க முடியும்.
இல்லையாயின் ஒரு நல்ல படமும் கெட்டதாகத் தெரியும். மாறியும் நடக்க வாய்ப்புண்டு..!
அவசரக்காதலும்,
அதனால் ஏற்படும் கர்ப்பமும், கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்ன காதலனும், அதனைச் செய்ய மறுத்து, பிள்ளையைப் பெற்றெடுக்க
முனைந்த காதலியும், பின்னர் சூழல் மாறியதால், காதலனே பிள்ளையை வளர்க்க வேண்டிய நிலையும்,
காதலி வேறோர் மனநிலைக்கு சென்ற நிலையில், எல்லோரையும் ஒன்று சேர்த்து தாய்மையின் உண்மையை உணரவைத்த படம்.
மிகவும்
சிறப்பான கதையம்சம் கொண்ட படத்தை, திரைக்கதையில் இன்னும் சிறப்பாகக்காட்டி பல இடங்களில்
கண்ணீரையும், கைதட்டலையும் கொண்டுவந்தது இயக்குனரின் சிறப்பு.
நாயகனாக நடித்த பிக்போஸ் கவின் இந்தப்படம் மூலம் தானும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக வருவதற்கான முழுத்தகுதியும் இருக்கின்றது என்பதை சிறந்த இயல்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்..! நாயகியாக நடித்திருக்கும் மலையாள வரவான அபர்ணா தாஸூம் அப்படியே பாத்திரமாக வாழ்ந்துள்ளார்..!
ஏனைய
கதாபாத்திரங்களும் சிறப்பாக அமைந்துள்ளன. பாடல், இசை, ஏனைய தொழில்நுட்ப விடயங்கள் எல்லாம் தரம். ஆடம்பரமோ அலட்டலோ இல்லாமல் அமைதியாகவும்
அழுத்தமாகவும் ஒரு படம் தந்ததற்கு இயக்குனர் கணேஸ் கே. பாவுவைப் பாராட்டலாம். சிறுவனாக
நடித்த பையன் இலனும் பாராட்டுக்குரியவனே..! ஆகமொத்தம்
அனைவரும், குறிப்பாகக் காதலிப்பவர்களும், அதிலும் அவசரப்படுபவர்கள் கண்டிப்பாக இந்தப்படத்தை
பார்க்க வேண்டும். காதலிப்பதை விட அதன் பின்னர் வரும் பாரங்களைச் சுமக்க முடியாதவர்கள்
காதலிப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படியானவர்களிடம் இருந்து காதலே காணாமல் போய்விடும் என்ற பாடத்தைத் தருகின்றது இப்படம்..!
ஆ.கெ.கோகிலன்
24-06-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக