சாமத்தியவீட்டுக்கு முதல் நாள்..!
நாளை சாமத்தியவீடு என்பதால் மனம் பதறியது. ஒவ்வொரு நாளும் மரண வீட்டு அறிவிப்புக்கள் வீதியில் வரும்போது, வீட்டுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரப்போகுது என்ற பயம் வந்தது. யாரையும் குறைகூற முடியாது. ஆனால் சூழல் அப்படி அமைகின்றது. காலையில் இருந்து, மரங்களுக்குத் தண்ணீர்விட்டு, வீடுகளைச் சுத்தம்செய்து வெளியில் வர மதியமாகிவிட்டது. மகள் இருக்கும் குளியல் அறை அதிக குப்பையாக இருந்ததாக எனக்குப்பட்டது. தனியாகப் படிக்கும் பெண், ஒரு வீட்டைப் பாதுகாப்பது என்பது மிகப்பெரிய கஷ்டம் தான். தன்னால் இயன்றதை அவள் செய்தாள். அதற்கு மேலாக என்னால் இயன்றதை நானும், தன்னால் இயன்றதை சின்ன மகளும் செய்தோம்.
இவற்றை முடித்துக்கொண்டு, குளித்துவிட்டு அலுவலகம் புறப்பட்டேன்.
போகும்போது சில நாளைய நிகழ்வுக்குத் தேவையான சாமான்களையும் வாங்கிக்கொண்டு சென்றேன்.
அப்போது கடையில் நின்றவர் ”அண்ணே அவசரப்பட்டு எல்லாவற்றையும் கடும்விலையில் வாங்காதீர்கள்.. 50 சதவீதத்தால் விலை குறையும் என்று அரசாங்கம் சொல்வதால்,
அவசரத்திற்குத் தேவைப்படாத சாமன்களை பொறுத்திருந்து வாங்கலாம்..” என்றார்.
பின்னர் அவர்சொன்னதற்கு ஏற்ப முக்கிய தேவையுள்ள சமான்களை
மட்டும் வாங்கிக்கொண்டு நான் வேலைசெய்யும் நிறுவனத்திற்குச் சென்றேன்.
அங்கு அரைநாள் கடமையைச் செய்து கொண்டு, வீடு திரும்பும்போது,
Makeup செய்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட, எமது நிறுவனத்தில் ஒப்பந்த சேவையில் வேலைசெய்த
பெண் பிள்ளை ஒருவரை அழைத்துக்கொண்டு வீடுசென்றேன். பின்னர் பிள்ளைகளுக்குத் தேவையான
மேக்கப் வேலைகளில் சிலவற்றை அவர் செய்தார். நான் வளவிலுள்ள மரங்களுக்கு தண்ணீர்விட்டதுடன்,
வாழை கட்டுவதற்கு உதவிசெய்தேன். அத்துடன் வெட்டிய கழிவு வாழைத்தண்டுகள், நார்கள் மற்றும்
இலைகளை தள்ளுவண்டியில் ஏற்றி குப்பையில் போட்டேன். உடல் அவ்வளவு வேர்த்தது. தொடர்ந்து
வேலைகள் வந்தன. இளநீர் வாங்கி, வாழையில் கட்டினோம். பின்னர் மேக்கப் செய்யவந்த பெண்ணுடன்
சாறிக்கு ஏற்ற காப்புகள் வாங்கிக்கொண்டு, அவரையும் வீட்டில் கொண்டுபோய்விட்டுவந்தேன்.
போகும்போது தம்பிகளின் மகன்களும் காரில் வந்தார்கள்.
வீடு வந்ததும், படுக்க முன்னரும் சின்னச்சின்ன வேலைகள் இருந்தன.
அவற்றைச் செய்தேன்.
பின்னர் பாண் பருப்பு என்ற வழமையான விடுதி உணவுடன் உறங்கச்
செல்ல, மணி இரவு 12.00 நெருங்கிவிட்டது.
ஆ.கெ.கோகிலன்
08-06-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக