சாட்டிக்கடற்கரை
கொஞ்சக்காலம் வேலை வேலை என்று ஓடியதால் உறவுகள் சற்று தொலைவாகப்
போய்விட்டன..! இனி ஓய்வை நெருங்கும் சமயம் உறவுகள் இல்லை என்றால் வாழ்வே வெறுமையாகத்
தோன்றும். எப்பேர்பட்டாலும், உறவுகளின் தொடர்புகளைப் பலப்படுத்துவது எமது கடமைகளில்
ஒன்று என்பதை மிகத்தாமதமாகவே புரிந்துகொண்டுள்ளேன்.
இனி, தவறுகள் விடமுடியாது. புரியாது தவறுகள் செய்தால் மன்னிக்கலாம்.
புரிந்தும் தவறுகள் செய்தால் அவர்களை மன்னிப்பதில்
அர்த்தமில்லை.
இது மற்றவர்களுக்கானது மாத்திரம் அல்ல. எனக்கானதும் கூட.
ஆகவே தவறுகள் விடாமல் நடக்க என்னால் இயன்றளவு முயற்சிக்க வேண்டும்.
அந்தவகையில், திருகோணமலையில் என்னைப் பார்த்த உறவுகளுக்காக,
இன்றைய நாளினை செலவிட்டேன். அந்தியேட்டிக்கடமைகள் அவர்கள் செய்ய நானும் கூட இருந்து, என்னால் இயன்ற உதவிகளைச் செய்தேன். இதற்காக வழமையாக அலுவலகம் போகும் நேரத்தில் சாட்டி வெள்ளைக்கடற்கரைக்குச் சென்றேன். அங்கே உறவினர்
வந்திருந்தினர். அவர்களுடன் சம்பிரதாயக்கடமைகளை முடித்து, கடற்கரையில் நல்லதோர் குளியலைப்
போட்டு, வயிறுநிரம்ப உணவுகளை அடைத்துத் திரும்பும்போது அலுவலகம் முடியும் நேரமாகிவிட்டது..!
சாட்டிக்கடற்கரை இயற்கையின் கொடை..! கற்கள் இல்லாத கடற்கரை
என்பதால் சுற்றுலாவிற்கு சிறந்த இடம். ஆனால், அதனை சரியாக பேணவில்லை. கடற்கரையில் நிறையக்கடற்பாசிகளும்,
கடற்தாவர கழிவுகளும் காற்றுக்காரணமாக கரையை அடைந்துள்ளன..! அவற்றை எடுத்து, பசளையாகப்
பாவிக்க மக்களை அறிவுறுத்தலாம் அல்லது அதனை அரசே செய்யலாம். அத்துடன் அங்குள்ள குளியல்
அறைகள் மற்றும் கழிவறைகள் என்பவற்றைச் சுத்தமாக வைப்பதற்கான ஒழுங்குகளை அரசு செய்யவேண்டும்.
அந்த ஊர் மக்களும் அடிக்கடி சிரமதானங்கள் மூலம் அந்தப்பகுதியை சுத்தமாக வைத்திருந்தால்,
எல்லோரது பொருளாதாரமும் வளரும்..!
உறவுகளைச் சந்திக்கும்போது, திருமணத்திற்கு தயாரான நிலையில்
இருக்கும் பல ஆண்கள், பெண்கள் விபரங்கள் தேவைப்படுகின்றன. முன்பு இதைப்பற்றி யோசிப்பதில்லை. இன்றைய சமூதாயம் தமக்கு எது பிடிக்குமோ அதனைச் செய்து முன்னேற வேண்டும் என்று
நினைப்பவன் நான். இருந்தாலும், சிலர் இன்னும் மற்றவர்களின் உதவியை நாடும் சூழலில் இருப்பது
தவிர்க்க முடியாதது. என்னால் இயன்ற உதவியை அவர்களுக்கு செய்ய முடிவெடுத்துள்ளேன். அதற்காக,
சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்த தொடங்கியுள்ளேன்.
இவ்வாறான உதவி சில காலங்களில் எனக்கும் தேவைப்படலாம். நான்
யாருக்காவது உதவினால் தான், நாளை எனக்கும் யாராவது உதவுவார்கள்.
ஆகவே சந்தர்ப்பங்களைத் தவிர்க்காமல், இயன்ற உதவிகளைச் செய்வோம்
என முடிவெடுத்துள்ளேன். என்ன என்றாலும், இயற்கையின் அனுசரணை இருந்தால் தான் அதில் வெற்றியும்,
நிறைவும் கிடைக்கும்.
ஆ.கெ.கோகிலன்
27-06-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக