துன்பத்திலும் இன்பம்..!

 


நீண்ட நாட்களாகக் கதைக்க முடியாமலும், தேவையற்ற மனச்சோர்வுகளும் இருந்த சூழலை, மகளின் சாமத்தியவீட்டு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மாற்றிவிட்டது.

கொரோனாவின் பின்னர் பல வீடுகளுக்குப் போவதில்லை. அவர்களும் வருவதில்லை. அவரவர் தங்கள் வேலைகளை மாத்திரம் செய்துகொண்டு, மிகுதி நேரங்கள் முழுக்க தொலைக்காட்சிகளுடனும், தொலைபேசிகளுடனுமே கழிந்தன..!

2023 வருடம், சில மாற்றங்களை மீண்டும் ஏற்படுத்தி வருகின்றது. அதில் ஒன்று பௌதீக ரீதியில் உறவுகளுடனான தொடர்புகள் அதிகரித்துள்ளன. ஒருவர் வீட்டுக்கு இன்னோருவர் போகக்கூடிய சூழல் வந்துள்ளது. தொடர் மரணங்கள், நோய்பரவல்கள், பொருளாதாரக்கஷ்டங்கள் என்று சென்ற வாழ்க்கையில் சில மாற்றங்களைக் காணும் போது மனம் குதுகலிக்கின்றது.

அம்மாவின் ஒன்றைவிட்ட சகோதரங்கள் வீட்டுக்குச் சென்று அவர்களுடன் உரையாடி, மகளின் பூப்புனித நீராட்டுவிழாவிற்கான அழைப்பிதழ்களையும் கொடுத்து வந்தேன். அவர்களும் பொருளாதாரச் சூழலைப்பற்றி சிந்தித்தாலும், பல நாட்களாக வராதவன், இன்று வந்தானே என்று சந்தோசப்பட்டிருப்பார்கள். பொதுவாக நான் எல்லோருடனும் மிகவும் கலகலப்பாகப் பழகக் கூடியவன். ஆனால் அந்த இயல்பு கடந்த பல வருடங்களாகக் காணாமல் போயிருந்தது. வீட்டைவிட்டு வெளியே போகவே மனம் வருவதில்லை. ஏதாவது எழுதத் தோன்றும். அல்லது எதையாவது படிக்க அல்லது பார்க்கத் தோன்றும். அவ்வளவு தான்..!

மேலும் திருகோணமலை உறவுகளுக்கு இன்று கடிதம் போட நினைக்க அவர்களின் முகவரிகளை தொலைபேசியூடாக வேண்டினேன். கிடைத்தது. அனைத்தையும் தபாலகத்தில் அனுப்பிவிட்டேன். என்ன ஆச்சரியம் மாலை அதில்  அவர்களில் சிலர் எனது வீட்டுக்கே வந்து, நலம் விசாரித்துவிட்டுச் சென்றார்கள்.

நாம் நினைக்க, அவர்களும் நினைப்பதே Telepathy  என்பார்கள். இன்று, அவ்வாறான ஒரு தன்மையை இயற்கை எனக்குக் காட்டியது.

நானும், மனைவியும் கஷ்டப்பட்டே இவற்றினைக் கொண்டுநடத்த வேண்டியுள்ளது. இருந்தாலும் அந்தக்கஷ்டத்திலும் ஒரு மகிழ்ச்சி வருவது அதிசயம். ஆனால் நடக்கின்றது. தொடர்கின்றது.

இறைவனுக்கு நன்றி.

 

ஆ.கெ.கோகிலன்

27-05-2023.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!