காட்சி எண்ணம்..!
அண்மைநாள்களில், குளிர் சாதனப் பெட்டிக்குள் இருந்த கேக்,
பலகாரங்கள், வாழைப்பழங்கள், குளிர்வித்த தண்ணீர் போன்றவற்றை அதிகம் எடுத்ததோ என்னவோ
தெரியவில்லை கால் பிரச்சனை மீண்டும் வந்துவிட்டது போன்ற எண்ணம் இன்று திரும்ப ஏற்பட்டுவிட்டது..!
காலும் அதிகம் விறைத்து இருந்தது. வழமையாக நடப்பதுபோல் நடக்க சற்று சிரமமாக இருந்தது.
இது உண்மையில் நிகழ்ந்ததா..? அல்லது கற்பனையா..? என்றுகூடத்தோன்றியது. இன்று காலை கூடப்பிசியோதெரபி
செய்தேன்.
முந்தையநாள் இரவு கொழும்பில் இருந்து வரும்போது, ஒரு வயதான
தாயாரை ஒரு இளம் மகள் கூட்டி வந்தார். ஓட்டோவில் இருந்து இறந்து பஸ்ஸில் ஏற அந்தத்
தாயார் மிகுந்த சிரமப்பட்டார். அங்கிருந்த பலர் அந்தக்காட்சியைப் பார்த்தோம். இளம் மகள்
தாயாரை வார்த்தைகளால் ஊக்கப்படுத்தி நடக்க வைக்க முயற்சித்தாள். ஆனால் அவரால் முடியவில்லை.
அவரது முகத்தில் அழுகையும் சிரிப்பும் ஒன்றாக இருப்பதாகத் தோன்றியது. பார்வையாளர்களில்
60 வயது மதிக்கத்தக்க ஆரோக்கியமான உடல்வாகுகொண்ட பெண் ஒருவர் ஓடிச்சென்று அந்த அம்மாவிற்கு
உதவினார். முதுகைத் தட்டிக்கொடுத்து மெல்ல மெல்லமாக பஸ்ஸில் ஏற்றிவிட்டார். அந்தக்காட்சி
மனதில் ஆழப்பதிந்துவிட்டது. எனக்கு கண்களும் கலங்கிவிட்டன. அதனை வெளியே நான் காட்டவில்லை.
பின்னர் பஸ்ஸில் பயணம் செய்யும்போது அந்த எண்ணம் பல நேரம் ஓடியது.
குளு குளு பஸ்களில்
சரிக்கும் வசதியுள்ள கதிரையில் படுப்பதற்காக முக்கால் வாசி சரிக்க முடியும். அவ்வாறு
தொடர்ந்து படுத்துவரும்போது, கழுத்து, இடுப்பு மற்றும் காலில் ஏதோ பாதிக்கப்பட்டது
போல் உணர்வு இருந்தது. இருந்தாலும் ஒருவாறு வீடு வந்து சேர்ந்துவிட்டேன்.
ஆனால் காலில் விறைப்பும், முன்பு இருந்ததுபோல் தரையில் காலை
ஒழுங்காக வைக்கவும் முடியவில்லை. வெளியில் ஒருவாறு சமாளித்து நடந்துவிட்டு, எனது வீட்டில்
ஓய்வும், பல கோணங்களில் படுத்துப் பயிற்சியும் செய்து காலிற்கு உணர்ச்சிவர முயற்சி
செய்தேன்.
இன்று மாலை முகாமைத்துவ கிளப் ஒன்றை தொடங்க, எனக்கும் அழைப்பிதழ்
தந்திருந்தார்கள். எனது உடல் நிலையில் போவதற்கு ஆசையிருந்தாலும் அறிவு தடுத்தது. இங்கிருந்து
போய்வர ஏறக்குறைய 40 கிலோ மீற்றர் பயணிக்க வேண்டும். இந்த உடல்நிலையில் இதுதேவையில்லை
எனநினைத்து பேசாமல் அப்படியே படுத்துவிட்டேன். சில அழைப்புக்கள் வந்தன. எழுந்து எடுக்க
இயலவில்லை. மாலை 5.00மணி வரை பாயிலேயே இருந்தேன். இது பற்றி வீட்டில் ஒருவருக்கும்
தெரியாது. அவர்கள் மீண்டும் கலக்கமடைவார்கள் என்று தெரிவிக்க மனம்வரவில்லை. பின்னர்
எழுந்து கதிரையில் உட்கார்ந்து இருக்கும்போது, எமது நிறுவன விரிவுரையாளர் ஒருவர் கோல்
எடுத்து, முகாமைத்துவ கிளப்பிற்கு வரும்படி கூற, நான் எனது நிலையைக்கூறி மறுத்தேன்.
மனித வாழ்க்கையில் சிலவிடயங்கள் நினைத்தாலும் நடக்காது..!
நடப்பது தான் நடக்கும். ஒட்ட வேண்டியது தான் ஒட்டும்..! இவற்றினை ஏற்கப்பழகுவதே எமது
வாழ்க்கையை எளிமையாக்க உதவும்.
ஆ.கெ.கோகிலன்
17-06-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக