இயற்கையின் உதவி..!

 


சில விடயங்கள் சிலருக்கு மாத்திரம் என்றே இயற்கை வரையறுத்துள்ளது.

அப்படிப்பட்ட ஒரு சம்பவம் வாழ்வில் நடந்தது.  அப்பா உயிருடன் இல்லை. ஆண் சகோதரங்கள் அருகில் இல்லை. உறவுகள் கூட வடக்கிற்கு வெளியே இருந்தார்கள். இலங்கையில் இரு வகையான ஆட்சிகள் நடந்த காலம் அது. அந்த சமயத்தில் எனக்கு உதவ யாரும் அருகில் இல்லை. குறிப்பாக

எனது கலியானத்திற்கு நானே போய் ஒவ்வொரு உறவுகளுக்கும் வரவேற்பு அட்டையைக்கொடுத்து திருமணவீட்டுக்கு  வரச் சொன்னேன்.  யாழ்க்குடாநாட்டில் உறவுகளும், நட்புக்களும் இருக்கும் இடம் தேடி அலைந்து அதனைச் செய்தேன். அதற்கு உதவ எனது ஒன்றைவிட்ட சித்தப்பா தனது மோட்டார் சைக்கிளைத் தந்து உதவினார். இது நடந்தது 2001இல்..! அதுவும் சமாதானம் வர முன்னர்..!

கப்பலில் யாழ்ப்பாணம் போய், திருமணம் செய்து, விமானத்தில் கொழும்பு வந்து, பின்னர் புகைவண்டியில் திருமலை செல்லவேண்டிய நிலமை.

திருமணத்துடன் சமாதானம் வந்தது. ஊருக்கு வீதியில் போக முடிந்தது.

ஏறக்குறைய 20 வருடங்களுக்கு மேலும், அதே சூழ்நிலையில்  நான் இருப்பதாகவே உணர்ந்தேன். உறவுகள், நட்புக்கள் கூட இருந்தும், தற்போதைய நாட்டுச்சூழலில் யாரையும் கஷ்டப்படுத்த மனம் இடம் கொடுக்காது. எனது கடமையை நானே செய்ய முடிவு செய்தேன்.

பல தடைகள் தாண்டி இரண்டாவது மகளின்  சாமத்திய வீட்டை நடாத்த தீர்மானித்து விட்டோம். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இன்று, உறவுகளை அழைக்க வடமராச்சிக்கு தனியாகவே போனேன்.  அப்போது, 2001இல் எனது திருமணத்திற்காக நான் அலைந்தது நினைவுக்கு வந்தது..! இவ்வளவு வருடங்கள் கடந்தும் இயற்கை நம்மை வாட்டுவதாகவே முதலில் உணர்ந்தேன். பின்னர் புரிந்துகொண்டேன். இல்லை, இல்லை. அதே மனவலிமையும், உடல் வலிமையும் இன்னும் கெடாமல் பாதுகாத்து தந்துள்ளது என்பதை..!

மேலும், மாலை மனைவியுடன் வலிகாமம் முழுக்க வட்டம் போட்டேன்.  நல்ல வேளை மனைவியின் ஒன்றுவிட்ட தப்பியும், மனைவியும் வந்ததால் மகளுக்கு மாமாவின் மரியாதை பெறச் சூழல் வந்தது. சில சமயங்களில் உறவுகள் இருந்தும், அதற்கு காலம் இடம் கொடுக்காது. வாழ்க்கையில் எல்லோரும் எல்லாரையும் பின்பற்ற முடியாது. சிலருக்கு விநோதமாகவே வாழ்க்கை அமையும். அதனை ஏற்பதும், அதற்கேற்ப வாழ்வதுமே நமது கடமை.

 

ஆ.கெ.கோகிலன்

28-05-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!