பிராரப்தம் (பிரார்த்தம்)..!

 



மகளின் சாமத்தியவீட்டுக்கான கடமைகளால், அந்தச்சமயத்தில் நிகழ்ந்த பல உறவுகளின் மரணச்சடங்குகளில் பங்குபற்ற முடியவில்லை. என்னைவிட வயது மூத்தவர்கள்,  ஒரு நல்ல காரியத்திற்கு நாள் குறித்தால், அதன் பிறகு வரும் துக்க நிகழ்வுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டினார்கள். நான் முன்பு இவற்றைப் பெரிய அளவில் கடைப்பிடிப்பது இல்லை. ஆனால், கடந்த காலத் தடங்கல் அனுபவம், அதனை ஏற்கச்செய்துவிட்டது..! வேறுவழியின்றி மரணச்சடங்குகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிட்டேன். இப்போது சாமத்திய வீடு முடிந்துவிட்டது. அதன்பிறகு அலுவலகப் பணி காரணமாக கொழும்பு சென்று வரவேண்டிய நிலை ஏற்பட்டதால், மரணவீடுகளுக்குப் போகமுடியவில்லை.

இறுதியாக இன்று வேலைக்கு லீவு போட்டுத்தான் இருமரண வீடுகளுக்குப்போனேன். அதில் ஒன்று, எனது வீட்டுக்கு மிக அருகாமையில் இருக்கின்றது. இன்று அந்த வீட்டில் அந்தியேட்டி நடைபெற்றது. அவர்களுக்கு கீரிமலைக்கடமைகள் செய்ய அதிகாலை 5.00 மணிக்கே சென்று உதவியது மனதிற்கு சிறு மகிழ்ச்சி.

காலை 9.00 மணிக்குள், அந்த வேலை முடிந்ததால், அடுத்த செத்தவீடு நடந்த இடமான தீவுப்பகுதியிலுள்ள சரவணைக்குச்சென்றேன்.  அந்த இடத்திற்கு ஏறக்குறைய 40 வருடங்களுக்குப் பிறகு போனேன். முன்பு மிக அழகாக இருந்த அந்தப்பகுதி, தற்போது ஆட்கள் அற்று சோபை இழந்து காணப்பட்டது. அந்த ஊர் மக்கள் பலர், உலகம் பூரா பரந்து வாழ்கின்றார்கள்..! எனது சின்னம்மா அந்த ஊரிலே தான் பிறந்தவர். திருகோணமலையில்  பல வருடங்கள்  அவரது உணவை உண்டே வளர்ந்தேன்.

இன்றும் அங்கே தான் நிரந்தரமாக இருக்கின்றார். அவரது சகோதரியின் மரணம் காரணமாக சரவணை என்ற இடத்திற்கு வந்துள்ளார். அவரைப் பார்க்கச் சென்றேன். காலம் அனைவரையும் ஒரே மாதிரி வைத்திருக்காது. முதுமை தெரிந்தது..! சில பற்கள் இல்லை..! எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர், சில உடல் உபாதைகளால் ஒரு தடியின் உதவியுடனே அவரால் நடக்க முடிகின்றது..!

அவரைப் பார்த்தது மேலும் மனத்திற்கு மகிழ்வைக்கொடுத்தது. என்னைப்பொறுத்தவரை, நான் பலருக்கு கடமைப்பட்டுள்ளேன். பலரின் உதவியைப் பெற்றும், அவர்கள் தந்த உணவை உண்டும் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்..! அவர்கள் அனைவருக்கும் என்னால் இயன்ற சின்ன உதவியாவது செய்யவேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் அவர்களில் பலர்  என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை.  எந்தப்பலனையும் எதிர்பாராமல் செய்துள்ளார்கள். திருப்பிச் செய்வதையே விரும்பவில்லை..! அது எனக்கு மேலும் மேலும் சங்கடத்தையும், என்ன மாதிரியான கைமாறைச் செய்வது என்று தெரியாமலும் தவிக்க வைக்கின்றது..!  ஒன்று கொடுத்தால், பதிலுக்கு இன்னொன்றைக் கொடுத்து சமம் செய்யலாம் என்ற என்னுடைய கணக்கு (கணித அறிவு), எனது வாழ்க்கைக்கு உதவவில்லை. என்னிடம் அன்பைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்ப்பதாகத் தெரியவில்லை.

நான் கடமைப்பட்டதுபோல் அவர்கள் கடமைப்படத் தயாராக இல்லை.

ஏன் என்று புரியவில்லை..? சில வேளைகளில் போனபிறப்பில் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்தேனோ தெரியாது..! பதிலாக என்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் செய்துள்ளார்கள்..!

சின்னச்சின்ன கொடுக்கல் வாங்கல்களுக்கே அடிபடும் உலகில் இப்படியான மனிதர்களை என்னைச் சுற்றிப்படைத்த ஆண்டவனுக்கு என்றும் நன்றி கூறவேண்டிய நிலையிலே, நான் இருக்கின்றேன்.

 

ஆ.கெ.கோகிலன்

21-06-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!