இறைவன் தந்த கடமை..!

 



சாமத்தியவீட்டுக்கு உரிய நாள் கிட்ட கிட்ட வேலைகளும் அதிகமாகிக்கொண்டே வந்தன. என்னைவிட மனைவி பாடு ஒரே ஓட்டம் தான்..! பெண்கள் வீட்டின் கண்கள், செல்வங்கள், சந்தோசங்கள் என்று சொன்னாலும் இப்படியான நிகழ்வுகளில் அவர்கள் படும் சங்கடங்களும் அதிகம். எனது மகள் மிகவும் வெட்கறை பிடித்தவள். அதிகமான நண்பர்கள் கிடையாது. தானும் தன் வேலையுண்டு என்றும் இருப்பவள். படிப்பதில் வல்லவள். அதுவும் கொரியன் பாட்டுக்கள் பாடுவதில் ஆர்வம்மிக்கவள். நான் என்ன எழுதினாலும் அதனை முதலில் வாசிப்பவள் அவள் தான்.  அவளின் நிகழ்வை சிறப்பாக நடாத்த நினைக்க மரணவீடுகளின் எண்ணிக்கை ஊரில் அதிகரிக்க மனம் மிகவும் கவலை கொள்கின்றது. மூன்று வருடங்களுக்கு முதலே செய்யவேண்டிய காரியம் இயற்கையால் பிந்தியது. இயற்கையின் கையிலே எல்லாம் இருக்கின்றது. எது நடக்க வேண்டும் என்று இயற்கை நினைக்கின்றதோ அதுவே நடக்கும். அதனை மாற்ற  முடியாது.

பொதுவாகப் பிள்ளைகளை பெற்றோர்களே பாடசாலைகள், தனியார் வகுப்புகளுக்கு கூட்டிச்செல்கின்றார்கள். நான் அவர்களைக் கூட்டிச்செல்வது மிகவும் குறைவு. காரணம், அவர்கள் சமூத்தில் தனித்து இயங்கப் பழகவேண்டும் என்று. நேற்று மகள் சைக்கிள் திறப்பைத் தொலைத்து, பின்னர் பூட்டை உடைத்து சைக்கிளை வீட்டுக்கு கொண்டுவந்தாள். இன்று அவளது சைக்கிளுக்குப் பூவுடன் பூட்டு ஒன்றும் வாங்கிப்போட்டேன். அத்துடன் எனது மோட்டார் சைக்கிளிலும் எனது நிறுவன ஊழியர் உதவியுடன் Accelerator Cable வாங்கி மாற்றியதுடன், மேலும் Water Air Cover உம் மாற்றவேண்டும் என்று அவர் சொன்னதால், அதனையும் இன்று மாற்றினேன்.

மனைவி வீடு கழுவ உதவச்சொன்னார். சில பகுதி வேலைகளை நான் எடுத்துச் செய்தேன். வெளிப்பகுதிகளை நான் கழுவினேன். நேரம் மதியத்திற்கு கிட்ட வந்துவிட்டது. அரை நேரமாவது அலுவலகம் போக வேண்டும் என்று பதட்டமானேன். மாபிள் வீடு, தண்ணீரால் கழுவப்பட்டுள்ளது. அவசரப்படும்போது வழுக்கிவிட்டது. நல்ல வேளை கையில் நல்ல அடியுடன் தப்பித்தேன். ஏற்கனவே ஒரு கால் உணர்வற்ற மாதிரி இருக்க, மாபிள் மேல் தண்ணீர் இருக்க, நடக்கவே பயமாக இருந்தது. இவை எல்லாம் தாண்டி, ஒருவாறு அலுவலகக்கடமைகளை முடிக்க முடிந்தது. அத்துடன் எனது பாடசாலை நட்புக்கள், எனக்குப்பிடித்த நல்ல மனிதர்கள் சிலருக்கும் சமத்தியவீட்டுக்கு அழைக்க அழைப்பிதழ் கொடுத்தேன். குறிப்பாக எனது சைக்கிள் திருத்தும் நபருக்கும், மோட்டார் சைக்கிள் திருத்தும் நபருக்கும் அழைப்பிதழ் கொடுத்தேன். ஒன்றும் இல்லை. சும்மா வந்து சாப்பிட்டுச் செல்லுங்கள் அவ்வளவு தான்..! இது, சேவைகள் செய்வதால் ஏற்பட்ட அன்பால் வந்த அழைப்பு. குறைநினைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

ஆக இன்றைய நாளில் பல வேலைகளைச் செய்து முடித்தேன். மண்டபத்திற்கும், சாப்பாடுகளுக்கும், ஏனைய சேவைகளுக்குமான செலவை முற்றாகச் செலுத்தினேன். 300 சாப்பாடு என்று முதலில் நினைத்து, பின்னர் 500 இற்குப் பணத்தைக் கட்டினேன்.

காசை வீட்டில் வைத்திருப்பது அபாயம். அது உடனேயே தேவையானவர்களுக்கு அவர்களின் சேவைகளின் பயனாக சென்றடைய வேண்டும் என்பது எனது நினைப்பு. இங்கு சேவைபெற முதலே எல்லாம் கொடுத்துவிட்டேன்.

மேலும் வீட்டிலும் ஒரு பதிவை ஒட்டுச்சித்திரமாக அமைத்து, மகளிற்கு ஒரு சிறிய மகிழ்ச்சியையும் ஏற்படுத்தினேன் என நம்புகின்றேன். இறைவன் என்னை நம்பி ஒரு குடும்பத்தைத் தந்துள்ளான். அவனின் நம்பிக்கையைக் காக்க வேண்டியது எனது கடமை தானே..!

 

ஆ.கெ.கோகிலன்

06-06-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!