புரியாத முதியோர்..!

 



அறிவியல் வளர்ந்த இன்றைய காலத்தில், ஒரு குடும்பத்தை வழிநடத்துவது என்பது இலேசுப்பட்ட காரியமில்லை..! குறிப்பாக சூடு மற்றும் சொரனை இருக்கவே கூடாது..! அப்படியே இருந்தாலும், வாய் பேசமுடியாத, கண் தெரியாத, காது கேளாத மாதிரி இருந்தால் மாத்திரமே இந்த உறவுகளின் செயற்பாடுகளிலும்,வார்த்தைகளிலும் இருந்து சேதாரமில்லாமல் தப்பமுடியும்..!

திருமணம் செய்த ஆரம்பத்தில் எனக்கும்,  மனைவிக்குமான புரிதல்கள் மிகவும் குறைவு தான்..! இதனால்   சத்தங்களும், சண்டைகளும் அதிகம் வரும்..!  போகப்போக பிள்ளைகள் வர, சண்டைகளால் சாதிக்காததை மௌனத்தால் சாதிக்க முடிந்தது..! அதன்பிறகு, அந்த நுட்பத்தை இன்றுவரை கடைப்பிடித்து வருகின்றேன்.

ஒருவரின் செயற்பாடு பிடிக்கவில்லை என்றால், அவரிடம் அதைப்பற்றி ஒன்றுமே சொல்வதற்கு இல்லை. மாறாக அவரை ஒரு பொருட்டாகவே பார்ப்பதில்லை. உறவு என்றால் கூட அவரைப்பற்றி ஒன்றும் நினைப்பதில்லை. கண்டாலும்,  அவருக்கு எந்தக்காயமும் ஏற்படாத வகையில் எனது செயற்பாடு இருக்கும்.

காலப்போக்கில், அவருக்கு என்னிடம் கதைக்க விருப்பம் வந்தாலும், நான் அதைப்பற்றி அலட்டிக்கொள்வதே இல்லை.

ஆனால் இப்படியான ஆட்களுடன் சத்தம்போட்டுப் பேசுவதோ, சண்டைபிடிப்பதோ ஒரு நாளும் இல்லை.

வயது முதிர்ந்த பெற்றோர்கள் இருக்கும் வீடுகளில், பிள்ளைகளிடம் அன்பையோ அல்லது பாசத்தையோ அல்லது பொருளையோ அதிகம் எதிர்பார்க்கும் பெற்றோர்களுக்கு, அது கிடைக்காத பட்சத்தில், சலிப்பை பல விதங்களில்  அவர்கள் வெளிப்படுத்தும் போது, குடும்பத்தில் விரிசல்களும், வெடிப்புக்களும்  ஏற்படுகின்றன..! நவீன வாழ்வியல் முறைகளால் ஏற்படும் மன அழுத்தத்தால் இளம் குடும்பங்கள், பெற்றோர்கள் மேல் ஒரு வித வேறுப்பையும் கொள்கின்றார்கள்..!

தமது ஆசைகளை பிள்ளைகளை மேல் திணிப்பதாலும், அதன் பலாபலன்களை அறுவடைசெய்யக் காத்திருப்பதாலும், பிள்ளைகளிற்கு அவை மேலும் மனவுலைச்சலை அதிகரிக்கும்.

யார் என்றாலும், எல்லாவற்றிற்கும் ஒரு அளவு வேண்டும். அளவுக்கு அதிகமானால் எல்லாம் ஆபத்துத் தான்..! அன்பு கூட அளவுக்கு மீறியதால், சில தாய்மார்கள், மகன்கள் திருமணம் செய்தாலும், அவர்களுக்குப் பிள்ளைகள் இருந்தாலும், மருமகள்களைவிட தன்னிடம் மகன்கள் எதற்கும் வரவேண்டும் என்றே விரும்புகின்றார்கள். மகனுக்கு இருக்கும் பொறுப்புக்கள் பற்றியும், அதன் பின்னால் இருக்கும் உறவுச்சிக்கல் பற்றியும் அவர்களால் சிந்திக்க முடிவதில்லை..! போதாததற்கு, தம்மோடு சேரும் ஏனைய உறவுகளுக்கும், தேவையில்லாத கதைகளைக் கதைத்து தாயுடன் மகன் சேரவே விருப்பம் இல்லாத அளவுக்கு கொண்டுவந்து விடுகின்றார்கள்..! இப்படியான பல சம்பவங்களை, நான் எனது வாழ்க்கையிலும் பார்த்துள்ளேன். மற்றவர்கள் வாழ்க்கைகளிலும் அவதானிக்கின்றேன். தாயைக் குறைசொல்லவும் முடியாது. ஆனால் அவர்களுக்குப் புரியவைக்கவும் முடியாது. வயது போனதால், அவர்களும் குழந்தைகள் போல் செயற்படுகின்றார்கள். ஒரு காலத்தில் எம்மை இருத்தி எழுப்பிய பெரியவர்கள், இன்னொரு காலத்தில் இப்படிவரும்போது என்ன செய்ய..? சிலர் இவற்றைத் தவிர்க்க முதியோர் இல்லத்தை நாடுகின்றார்கள். சிலர் பொறுமையுடன் சகிப்புத்தன்மைகளை வளர்த்து, ஒருவாறு சமாளிக்கின்றார்கள். சிலர் அடிபிடிப்பட்டு சபை, சந்திகளில் நாறுகின்றார்கள். எது எப்படியோ..? இயன்றவரை உறவுகளுக்கு இடையே ஒரு இடைவெளியை பேணுவது, அவசியம். இல்லையென்றால், வெடிப்புக்களைத் தவிர்க்க முடியாது.

நவீனம் முதுமைகளை நீடிக்கும் அளவுக்கு, ஞானத்தை நீடிக்க மறுக்கின்றது..!  அதனால் வரும் விளைவுகளே இவை. ஞானம் இருந்தால், எல்லாவற்றையும்  அன்பாலும், அறிவாலும் அரவணைத்துச் செல்லும் நுட்பம் விளங்கும். இல்லையென்றால் என்ன செய்ய..? பொறுப்பதோ அல்லது விலத்தித் தவிர்ப்பதோ என்பதை, சூழ்நிலையின் தன்மையைப் பொறுத்து, தேர்ந்தெடுக்கலாம்.

 

ஆ.கெ.கோகிலன்

26-06-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!