வருகைதரு விரிவுரையாளரின் வருத்தம்..!

 


 





அண்மையில் நடந்துமுடிந்த எனது மகளின் சாமத்தியவீட்டிற்கு, உறவினர்கள் வந்தார்களோ இல்லையோ எனது அலுவலகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் வந்திருந்தார்கள். நிரந்தர ஊழியர்கள் மாத்திரமன்றி, ஏனைய தற்காலிக மற்றும் வருகைதரு விரிவுரையாளர்களும் வந்திருந்தார்கள்.

வழமையாகக் கல்விசார் ஊழியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் வருகைதரு விரிவுரையாளர்கள் என்ற வகையில் மூன்று வரவேற்பு அட்டைகளே வைப்பது வழக்கம்.

மூத்த மகளிற்கு அவ்வாறே நானும் வரவேற்பு அட்டைகளை வைத்தேன். இம்முறை ஏற்கனவே அதிகம் வரவேற்பு அட்டைகள் தயாரித்த படியால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வரவேற்பு அட்டைகள் கொடுக்க விரும்பினேன்.  இன்னொரு காரணமும் உண்டு. அது, எனக்கு  எல்லோரும் தனியாக ஒரு காட் தருவது வழமை. ஆகவே நானும் அவ்வாறே திருப்பிச்செய்ய வேண்டும் என்றும் விரும்பினேன். அவ்வாறே செய்தும் முடித்தேன். எமது நிறுவனம் ஏழு நாளும் இயங்கும். ஆனால் என்னால் 5 நாட்களே போகமுடியும். வார இறுதிநாட்களில் நான் போவது மிகக்குறைவு. ஏதாவது முக்கிய விழாக்கள் என்றால் தவிர்க்க முடியாது என்பதற்காகச் செல்வேன். சும்மா சாதாரண நாட்களில் செல்வது கிடையாது. எனக்கும் வீட்டில் அதிகம் வேலை இருக்கும்.

இந்தச்சூழலில், வருகைதரு விரிவுரையாளர்கள் அதிகம் இருப்பதாலும், எல்லோருக்கும் என்னைத் தெரியாது என்பதாலும், என்னை அறிந்த, தெரிந்த குறிப்பாக எனக்கு வரவேற்பு அட்டைகள் தந்தவர்களுக்கு நிச்சயம் கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன். அவ்வாறே நான் நின்ற நாட்களில் சிலருக்கு கொடுத்தேன். ஆனால் பலர் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வருவதால், அவர்களுக்கு கொடுக்க எனது நிறுவன கல்விசாரா ஊழியர் ஒருவரிடம் பொறுப்புக்கொடுத்தேன்.  அவரும் நான் எழுதிக்கொடுத்த எல்லாருக்கும் கொடுத்ததாகக் கூறினார். ஆனால், ஒரு துறையில் இருந்து ஒரு குற்றச்சாட்டு வந்தது. அது “எல்லா வருகைதரு விரிவுரையாளர்களுக்கு கொடுத்த நீங்கள், உங்களுக்கு அழைப்பிதழ் வைத்த வருகைதருவிரிவுரையாளர் ஒருவரை மறந்துவிட்டீர்கள் என்று..”

இல்லையே..! நான் எல்லோருக்கும் தான் கொடுக்கச் சொன்னேன். எனக்கு அழைப்பிதழ் தந்திருந்தால் நிச்சயம் அவர்களுக்கு கொடுக்காமல் விடமாட்டேன். ஏதோ தவறு நடந்திருக்கின்றது. விசாரித்துவிட்டுச் சொல்கின்றேன் எனக்கூறிவிட்டு, பொறுப்புக்கொடுத்த ஊழியரிடம் விசாரித்தேன். அவர், தவறுதலாக மறந்துபோய் வேறோர் இடத்தில் அந்த அழைப்பிதழை வைத்துவிட்டார். எல்லாம் கொடுத்து முடிந்தது எனநினைத்துவிட்டார். பொறுப்பை மறந்துவிட்டதற்கு இன்று மன்னிப்புக்கேட்டார். அவரை என்ன என்று நான் சொல்ல..? அவரே சொன்னார் “குறித்த வருகைதரு விரிவுரையாளரிடம் தானே மன்னிப்பு கேட்பதாக..” நானும் குறித்த விரிவுரையாளருக்கு விபரத்தைக் கூறி தவறைப்பொருட்படுத்த வேண்டாம் எனக்கேட்டுக்கொண்டேன்.  குறித்த ஊழியரும் வேண்டும் என்று செய்யவில்லை. சூழல் அப்படி அமைந்துவிட்டது. எனக்கும் யாரையும் குறைகூற விருப்பமில்லை.

அவருக்கு அழைப்பிதழ் வைக்க முனைந்ததற்கு முக்கிய காரணம், அவர் வைத்த அழைப்பிதழுக்கு, என்னால் போய் சிறப்பிக்க முடியவில்லை. அதேபோல் தண்டனையை அவரும்  எனக்குத் தரவேண்டும் என்பதற்காககவே..! ஆனால் மீண்டும் நானே தவறு செய்ததாக சூழல் அமைந்துவிட்டது.  உண்மையில் நான் வார இறுதியில் நின்று அதனைக்கொடுத்திருக்க வேண்டும். இதனை என்னவென்று சொல்வது..? பழி வரவேண்டும் என்றால் வரவேண்டியது தான். என்பக்க நியாயத்தைச் சொல்லலாம்.  கேட்பதும், மன்னிப்பதும் அவரைப்பொறுத்தது. தொலைபேசியூடாக  அவர் அந்தவிடயத்தைப் பெரிதுபடுத்தவில்லை என்று கூறி, என்னைச் சாந்தப்படுத்தினார்.

 

ஆ.கெ.கோகிலன்

20-06-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!