இறையருள்..!
இது எப்படி நமக்கு கிடைக்கின்றது என்பதை உணர்வது கடினம். இயற்கையைப் புரிந்துகொள்ள முனையும் போது, ஓரளவிற்கு இறைவனின் அருள் எமக்கு இருக்கின்றதா இல்லையா என்பது புரியும். நேற்று, வடமராட்சி மற்றும் வலிகாமம் முழுக்க மோட்டார்சைக்கிளில் சென்று, சாமத்தியவீட்டிற்கான அழைப்பிதழ்களைக் கொடுத்து வந்தேன். வடமராட்சி போகும் போது கடும் வெப்பம் நிலவியது. அத்துடன் மதியத்திலே பயணிக்கவேண்டிய சூழலும் வந்தது. என்ன செய்வது, எனது கடமையை நானே முடிக்கவேண்டும். மற்றவர்களுக்கு கொடுப்பதை இயன்றவரை தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அவ்வாறே போய்கொண்டிருந்தேன். வல்லைக்கோவில்கள் வந்தன. அத்துடன் பயமும் வந்தது. நின்று, கால்கழுவி, இறைவனை வணங்கிச் சென்றேன். போன காரியங்கள் கைகூடின. வரும்போதும் அவ்வாறே செய்தேன். இருந்தாலும் மதியம் தாண்டும் நேரம் வீதிகளில் சனமில்லை. கடும் வெயில் மக்களை வாட்டியது. தனியே வந்துகொண்டிருந்தேன். அப்போது தான் எனது மோட்டார் சைக்கிளின் ரயரின் நிலைமை எண்ணத்திற்கு வந்தது. 5 அல்லது 6 மாதங்களுக்கு முன்னர் ரியூப் வாங்கி, அலுவலகம் செல்லும் போது கொண்டுசெல்லும் பைக்குள் அதனை வைத்துள்ளேன். இந்த நேரத்தில், காற்றுப் போனால் நம்முடையபாடு திண்டாட்டம் தான். மனம் அதை நினைத்துப் பயப்பட, என் வீட்டுக்கு கிட்டவாக செல்லும் உள் பாதைகளில் பயணப்பட்டேன்.
ஒருவாறு மாலை 2.00க்கு முன்னர் வீடுவந்துவிட்டேன். மிகுந்த
சந்தோசம். இடையில் ஏதாவது நடந்திருந்தால், அதுவும் வெயில் கொழுத்தும்போது, கஷ்டம் தான்.
நேற்று மாலையும் அவ்வாறே தெல்லிப்பளை, இளவாலை, அராலி யாழ்ப்பாணம்
என வலிகாமம் சுற்றிவந்தேன். என்னுடன் மனைவியும் கூட வந்தார். எந்தப் பிரச்சனையுமின்றி,
வீடுவந்து சேர்ந்தோம்.
இன்று வேலையால் விரைவாகவீடுவந்து காத்துஇருந்தேன். இன்னும்
மகள் வகுப்பால் வரவில்லை. அதுவரை காத்திருக்க விருப்பமில்லாமல் அருகிலுள்ள எனது மாணவியிடம்
கேக் ஓடர் சொல்வதற்கு மனைவியுடன் சென்றேன். வரும்போது, வீட்டிற்கு கிட்டவாக ஒரு டயரிலுள்ள
ரியூப்பிலிருந்து காற்று முற்றாகப்போய், நானும்
ஓடிவந்ததால் ரியூப்பை பயன்படுத்த முடியாத சூழல் வந்தது..! முன்பே வாங்கி வைத்திருந்த ரியூப்பை கொடுத்து மாற்றி, டயருக்கு காற்றும் அடித்துக்கொண்டு,
வீடு வந்தோம். இன்று நடந்த விடயம், நேற்று மதியம் நடந்து இருந்தால், வாழ்க்கையே வெறுத்திருக்கும்.
இறைவனுக்கு நன்றி..!
ஆ.கெ.கோகிலன்
29-05-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக