விசேட கூட்டம்..!
அண்மையில் எமது தலைமையகத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர் அன்பாகப்பேசக்கூடியவர். முதலில் ஒன்லைன் ஜூம் செயலியூடாக ஒரு அறிமுகக்கூட்டத்தையும்,
பின்னர் அனைவரையும் கொழும்புக்கு அழைத்து, பௌதீகரீதியில் ஒரு கூட்டத்தையும் சிறப்பாக
நடாத்தினார். குறைவான நேரத்தில் பல விடயங்களைத் தீர்ப்பதற்கு அதிக உப அமைப்புக்களை
உருவாக்கி, அதன் ஊடாகத் தீர்மானம் எடுக்கும் வேலைகளை இலகுபடுத்த திட்டமிட்டார். அதனையே
எம்மையும் பின்பற்ற அறிவுறுத்தினார். அவரும்
பல உபகுழுக்களை அமைத்துள்ளார்.
எனது நிறுவனத்திலும் பல குழுக்கள் ஒவ்வொரு வருடமும் நியமிக்கப்படுவது
வழமை. ஆனால் அவற்றைப் பயன்படுத்துவது குறைவு. சில குழுக்கள், ஒரு காரியங்களும் ஆற்றாமலே
அவற்றின் காலம் கடந்து, புதிய குழுவும் உருவாகிவிடும்.
இந்த நிலையில் நான் சில குழுக்களை தூண்டி அவற்றினூடாக சில
பிரச்சனைகளுக்கான பரிந்துரைகளை வரிசைப்படுத்தச்சொன்னேன்.
அதனடிப்படையில், இன்றைய விசேட ஒருங்கிணைந்த திட்டமிடல் செயற்பாட்டினை
5 வருடங்களுக்கு மேற்கொள்ளும் முயற்சியில் ஒரு புதிய குழுவை நியமித்ததுடன், அக்குழுவுக்குத்தேவையான
போதிய தகவல்களை அனைவரும் வழங்கும்படி கேட்டுக்கொண்டு, ஒரு மாதிரித் திட்டமிடலையும்
இணைய வாயிலாக எல்லோருக்கும் அனுப்பி வைத்தோம்.
அத்துடன், குழுக்கள் கொடுத்த பரிந்துரைகளுக்கு அமைய சில தீர்மானங்களை
எடுத்து, அதனடிப்படையில் எமது நிறுவனம் செல்லும் பாதையை தெளிவாக்க முனைந்தேன். இதற்குப் போதிய ஆதரவு இருந்ததால்,
முடிவுகள் மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தன.
ஒரு நிறுவனத்தலைவர் என்ற வகையில் நிறுவன இயக்கத்தில் குறையில்லாமல்
பார்ப்பது எனது முக்கிய கடமை என்று நான் நினைக்கின்றேன். என்னால் சரியாகச் செய்யமுடியவில்லை என்றால், வேறு
இடத்திற்குச் செல்லவும் தயாராகவே இருக்கின்றேன். என்னால் இயன்றதை முனைவேன்.
நான் இந்தப்பதவிக்கு வரும்போதே சொன்னதைத் தான் திரும்பவும்
சொல்கின்றேன். இறைவன் விட்ட வழி தான் என் வழி..! இது வேண்டும், அது வேண்டும் என்று
அடம் பிடிக்க மாட்டேன். எதனையும் ஏற்றுக்கொண்டு செல்வேன். வந்தால் சந்தோசம்..! வராவிட்டால்
மகா சந்தோசம்..!
ஆ.கெ.கோகிலன்
20-06-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக