நிறைவடையும் ஓட்டம்..!
வாழ்க்கையில் ஒரு விடயத்தை நிகழ்த்த எண்ணும்போது சில தடங்கல்கள்
வந்து, நமது தன்நம்பிக்கையை உடைக்க, பயனாகப்பல விடயங்கள் நடக்கும். அவ்வாறான சூழல் தான் எனது இரண்டாவது மகளின் சமாத்திய
நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யும்போது இருந்துவருகின்றன..! 2020 இன் ஆரம்பத்தில் ஒரு நரம்பு வருத்தம் எனக்கு
வந்தபோது, மகளின் சாமத்திய வீடு நடாத்தவேண்டிய சூழல்வந்தது. நானும் தடுக்க முனைந்தேன்.
உறவினர்கள் நடாத்தவே சொன்னார்கள். எளிமையாகச் செய்வோம் எனநினைக்க, மூத்த மகளின் சாமத்திய
வீட்டை எனது வீட்டில் செய்தபோது சில குறைகள் ஏற்பட்டன. அவை வரக்கூடாது என்று மனைவி
பிள்ளைகள் சொல்ல நானும் அதற்கு உடன்பட்டேன். அதனால் வெளியே மண்டபத்தில் செய்ய முடிவுசெய்தோம்.
ஆனால் இயற்கைக்கு பிடிக்கவில்லை போலும் கொரோனா மூலம் ஏற்பாடுகளைத் தடைபோட்டது. நாட்குறித்து,
விழா செய்ய ஏற்பாடு செய்தவேளை கொரோனா லொக்டவுண் அனைவரையும் வீட்டுக்குள் கட்டிப்போட்டது.
ஒன்றும் செய்ய முடியவில்லை. நடப்பது நடக்கட்டும்.
இறைவன் வழிவிடும்போது நடக்கட்டும் என்று பேசாமல் விட்டுவிட்டேன். அதற்குள் மூன்று
முக்கிய குடும்ப உறுப்பினர்களின் மரணங்கள் 3 வருடங்கள் தள்ளிப்போகக்காரணமாகின. அத்துடன்
மகளின் உருவ வளர்ச்சியும் பெரிதாக இருந்தது. சாமத்தியவீட்டை நடாத்தாவிட்டால் என்ன என்று
கூட நினைத்தேன். ஆனால் நிலமை மீண்டும் அதேபோல் வந்தது. வீட்டைச்சுற்றிப் பல மரணங்கள்.
இருந்தாலும் கொண்டாட முடிவு செய்தோம். சாமத்தியவீட்டுக்கான வரவேற்பு அட்டையை கொடுக்கும்போது
தான் புரிந்தது உண்மையான நிலைமை. பல வீடுகளில் மரணம் நடந்துள்ளன..! சில இடங்களில் அதே
நாளில் வேறு முக்கிய நிகழ்வுகள் இருக்கின்றன. இருந்தாலும் ஒரு தகவலுக்காக எனக்காட்டைக்
கொடுத்துவிட்டு வந்தோம். 500 சாப்பாட்டை ஓடர்செய்ய நினைத்தேன். இப்போது எவ்வளவு என்று
புரியவில்லை. எனது மாமா சொன்னார் 300 சாப்பாட்டிற்கு ஓடர் செய்யச்சொன்னார். அவர் சொல்வதையே
நான் வேதவாக்காக எடுப்பதுண்டு. இல்லை என்றால் அநியாயமாக உணவை விரயப்படுத்த நேரிடும்.
அதுமாத்திரமல்ல பணத்தையும் தான்.
இறைவா சரியான வழியைக் காட்டியதற்கு நன்றி.
ஆ.கெ.கோகிலன்
04-06-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக