தொடர் தடைகள்..!

 


இரண்டாவது மகளின் சாமத்தியவீடு செய்ய முனைந்த நாள் முதல் தடைகள் வந்துகொண்டே இருக்கின்றன.

முதலில் தீர்மானித்து, ஒழுங்குகள் செய்த திகதியில் செய்ய முடியாமல் கொரோனா  வந்து தடுத்தது..! சரி அந்த வருடத்தில் லொக் டவுண் இல்லாத சமயம் செய்யலாம் என எண்ணும் போது ஒவ்வொரு ரத்த உறவுகளின் மரணங்கள் வந்து, அந்நிகழ்வே நடைபெறாமல், அந்த எண்ணமே மறக்கும் வரை  இழுத்துச் சென்றது.  

மூன்று வருடங்களுக்கு மேல் சென்றாலும், மனைவி பிள்ளைகளுக்கு அதனைச் செய்து முடிக்கவே ஆசை. ஆனால் பெரும் நிதி வேண்டும். அதனை நானே கொடுக்க வேண்டும். ஏற்கனவே சில இலட்சங்கள் செலவாகிவிட்டன. இன்னும் பல இலட்சங்கள் வேண்டும். தற்போதைய பொருளாதார நெருக்கடி அனைவரையும் வாட்டி வதைக்கின்றது. இந்நிலையில் லீவுகள் சாதகமாக வர, சில உறவுகளும் வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வந்துள்ள நிலையில் சரி செய்வோம் என்ற எண்ணம் எனக்கும் வருகின்றது..!

விறு விறு என்று திரும்ப அனைத்தையும் செய்ய நினைக்கின்றேன். பண விரயத்தைத் தடுப்பதற்காக, ஏற்கனவே விட்ட குறையிலிருந்து தொடர வெளிக்கிட்டேன்.  அவ்வாறே மண்டபத்தைத் தீர்மானித்ததுடன், வரவேற்பு அட்டைகளையும் திருத்திக்கொடுக்க முடிவு செய்து அதனை நடைமுறைப்படுத்த வெளிக்கிட்டேன்.

இந்த சமயத்தில் நண்பர்களின் தயார் மறைந்து, அதற்கான அந்தியேட்டி இன்றைய நாளில் நடக்கின்றது. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்குகொள்ள இன்று மாலை கொழும்பு செல்லவேண்டிய சூழலும் வருகின்றது..!

இந்தப்பயணத்தில்  கொழும்பு உறவுகளுக்கும் காட்டைக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் மாலை எடுக்கக்கூடிய வகையில் அச்சகத்தில் காட்களின் திருத்தம் அடிக்க ஓடர் செய்தேன்.

 

பின்னர் வீடுவந்து அந்தியேட்டி செல்லும்போது, மீண்டும் உறவினர் ஒருவர் இறந்த செய்தி காதை அடைந்தது. இனி நிறுத்த முடியாது. நடப்பது நடக்கட்டும் என்ற போக்கில் போனேன். உறவுகளும் நாள் குறித்த படியால் மரணச்சடங்கிற்குப் போகவேண்டாம் என்றார்கள். சரி என்று பொறுத்துக்கொண்டு, ஏனைய கடமைகளைச் செய்து முடித்து, கொழும்பில் இருந்து திரும்பி வர மீண்டும் துக்க செய்தி..! அது திருகோணமலையிலிருந்து வந்து நம்மளை மேலும் குழப்பியது.

இவ்வாறாக மேலும் தொடர்தடைகள் வந்து, என்னையும் , மகளையும், வருத்தியது..! வருவது வரட்டும்  இந்தமுறை எப்படியாவது நடத்தி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும் நான் உறுதியாக இருந்தேன்.

 

ஆ.கெ.கோகிலன்

30-05-2023.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!