பயனுள்ள நாள்..!

 



இன்று அரசு லீவு அறிவுக்கும் என்று பலர் எதிர்பார்த்தார்கள். ஆனால் அரசு அறிவிக்கவில்லை. வங்கிகளும், சில நிறுவனங்களும், முஸ்லீம் பாடசாலைகளும் மாத்திரம் லீவை அறிவித்தன.  எல்லா அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வழமைபோல் இயங்கின. லீவை எதிர்பார்த்தவர்கள் நொந்து, கவலைப்பட்டார்கள். தற்போது நாடு இருக்கும் நிலையில் நாம் உழைக்கும் நேரம் இருமடங்கு ஆகினால் தான் ஓரளவிற்கு நிறைவாக இருக்க முடியும். இல்லை என்றால் எமக்கும் கஷ்டம்..! நாட்டுக்கும் கஷ்டம் தான்..!

பல திட்டங்களோடு இருந்த எனக்கு, இன்றைய நாள் நிறைவாக முடியுமா என்ற தயக்கம் நேற்றிரவுவரை இருந்தது. அரசை நம்ப முடியாது..! ஆனால்  இன்றைய அரசின் முடிவு, மகிழ்ச்சியைக் கொடுத்தது. நினைத்தனைச் செய்துமுடிக்க வாய்ப்பு அமைந்தது.

கொரோனாவின் பின்னர் வழி தெரியாமல் தவித்த சூழலில் நிறுவன வருமானத்திற்கு  தேவையான சில தீர்க்கமான முடிவுகளை அவைதொடர்பான குழுக்களின் சிபாரிசுகளுடன் தெரிவிக்க முடிந்தது.

வெயிலுடன் சேர்ந்து நாட்டுச் சூழல் வாட்டினாலும், சில கடுமையான முடிவுகளை எடுத்தேயாக வேண்டும்.

அத்துடன் பல வருடங்களாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகளுக்கு ஒரு வழி பார்க்க முகாமைத்துவக் குழுவை கூட்டி, முடிவைநோக்கிய பயணத்தை  மீண்டும் ஆரம்பிக்க முடிந்தது.

பரீட்சைதொடர்பான விதிமுறைகளை மீறியவர்களுக்கு விசாரணைகளை நடாத்தியதுடன், அவர்களுக்கும், ஏனைய மாணவர்களுக்கும் புரியக்கூடிய வகையில் ஆரோக்கிய அறிவுத் தண்டனை வழங்கப்பட்டது..!

மேலும் சில நலன் விரும்பி ஊழியர்களின் வேண்டுகோளுக்கு அமைய எமது மாணவர் ஒருவர் நடாத்தும்  ஒரு  யூடியுப் சனலில் அறிமுக உரையை, புதுமாணவர்களின் சேர்க்கைநோக்கிற்கமைய ஆற்றக்கூடியதாக இருந்தது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக லண்டன் மற்றும் கனடா நாட்டில் இருந்து வந்த பல்கலைக்கழக அல்லது உயர்கல்வி மாணவர்களுடன், நமது மாணவர்களின் பிரதிநிதிகள் சிலரை அறிமுகப்படுத்தியதுடன், அவர்களது அனுபவங்களையும், அறிவையும்  பகிர்வதாற்கான வாய்ப்பை வழங்க முடிந்தது.  இதற்கான ஒழுங்குகளை நானும், லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியாருக்குச் சொந்தமான நிறுவனமும் இணைந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம்.  எனக்கே இது ஒரு புது அனுபவமாகவும் புதிய தலைமுறையினரின் வீச்சும் புரிந்தது..! அதிலும் வெளிநாடுகளில் இருக்கும் போது ஏற்படும் தன்நம்பிக்கையும், திறமையையும் எமது மாணவர்களுக்கும் வழங்க நாம் அனைவரும் முன்னின்று உழைக்க வேண்டும். தனியாக படிப்போடு இருக்காமல், உழைப்பும் படிப்புமாக இருப்பதற்கான வழிகளைக் காண ஒவ்வொரு மாணவர்களும் முயலவேண்டும். அதற்கான வழிமுறைகளை நாமும் காண்பிக்க வேண்டும். அப்போது தான் எமது நிறுவனம் உண்மையான வளர்ச்சியை அடைவதுடன், நமது மாணவர்களும் உலக தரத்துடன் திகழ முடியும். நாடும் மீளும்.

 

ஆ.கெ.கோகிலன்

30-06-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!