கடன் அன்பை முறிக்கும்..!

 


நான் இன்று அரைநாள் லீவு எடுத்துக்கொண்டு  மகளின் சாமத்தியவீட்டிற்கான ஏற்பாடுகளினை செய்துகொண்டிருந்தேன். அதில் ஒன்று இன்று வங்கியில் இருந்து முக்கிய நிலையான வைப்பு ஒன்றை உடைத்து, தேவையான பணத்தை எடுப்பது என்பது..! நினைத்த மாதிரி எல்லாம் செய்து முடித்து வீடு வந்து, மேலும் சில வரவேற்பு அட்டைகள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டேன்.

இந்தச்சமயத்தில் எனது பால்ய நண்பனின் மகன் பணவுதவி கேட்டு வந்திருந்தார். தாய், தகப்பனிற்குத் தெரிந்தால் அவர்கள் கவலைப்படுவார்கள் என்றும், அவர்களுக்குச் சொல்லவேண்டாம் என்றும் சொல்லி சில இலட்சங்களைக் கேட்டார். எனக்குப் பெரிய ஆச்சரியம். இன்று மண்டபத்திற்கு காசு கட்டுவதற்காகப் பெரிய தொகையை வங்கியில் இருந்து எடுத்து வைத்திருந்தேன். இது எப்படி இவருக்குத் தெரிந்தது..? உண்மையில் ஆச்சரியமாக இருந்தது.

2020இலும் மகளின் சாமத்திய வீடு தடைப்பட்டபோது, இன்னொரு  நண்பர் ஒருவர் உதவி கேட்டார். சில நாட்களில் திருப்பித்தருவதாகக் கூறினார். ஒரு வருடமாக அவரால் தரமுடியவில்லை. எத்தனையோ நுட்பங்களைப்பயன்படுத்தி, அவரது புத்தியில்  உணரவைத்து இப்படிச்செய்து எடுக்கும் பணம்  கூடாது, நிலைக்காது, ஏன்..? குடும்பத்தை கூடஅழித்தவிடும் என்று நீதி நியாயங்களைக் கூறி, அவரது மனத்தில் திரும்பி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய பின்னரே  அவரால் தர முடிந்தது.  அதற்கு ஒருவருடத்திற்கு மேல் சென்றுவிட்டது. பணத்தின் பெறுமதி கூட மாறியிருந்தது. உண்மையில் எனக்கு நட்டம். ஒரு வைப்பில் போட்டால் கூட சிறுதொகை கூடி வட்டியாக வரும். ஆனால் உதவி என்று செய்யப்போய் ஏமாறாமல் தப்பினேன் என்று பெருமூச்சு விட முடிந்ததே என நிம்மதியடைந்தேன்.

இதேபோல் எனது திருமணத்திலும் நண்பர் ஒருவருக்கு உதவிசெய்ய ஒருதொகைப்பணத்தைக் கொடுத்து இன்றுவரை அந்தப்பணம் திரும்பி வரவில்லை.  அம்மாவிடம் இன்றுவரை ஏச்சுவாங்கும் நிலை ஏற்பட்டது.  வாழ்க்கையே சில பாடங்களைக் கற்றுத்தரும் வகுப்பறை தான்.  இப்படியான தவறுகளைத் திரும்பத் திரும்ப விடுவதால், எனக்கு மட்டும் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது என்பது  மட்டும் மறுக்க முடியாத உண்மை.

இன்று மாலை மேலும் சில முக்கிய நபர்களுக்கு வரவேற்று அட்டைகளைக் கொடுத்தேன். அப்போது, சில கசப்பான அனுபவங்களும் கிடைத்தன.  உறவுகளுக்குள் இருக்கும் கசப்புக்களுக்கு ஒரு வித அன்பும், அதனால் வருகின்ற ஏமாற்றங்களும் காரணமாக இருக்கலாம். சூழல்கள் சில சமயம் எம்மைச் சிக்கலுக்குள் கொண்டுசென்று விட்டுவிடும். தப்ப முடியாது. இருந்தாலும் அவற்றைப் பெரிய அளவில் பொருட்படுத்தாது, கருமத்திலே கண்ணாகவிருந்து, எனது கடமைகளை முடித்தேன்.

 

ஆ.கெ.கோகிலன்

26-05-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!