மாறிய முடிவு..!
சிலர் தமது வாழ்நாளில் பல நன்மைகளைச் செய்து மக்களின் மனங்களில்
இடம்பெறுவார்கள். அப்படி மக்களின் மனங்களில் இடம் பெற்ற ஒரு ஆங்கில ஆசானின் மகன் எமது
நிறுவனத்தில் வருகைதரு விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார்..! மிகவும் மென்மையான இயல்புகள்
கொண்ட அவர் பழக மிக இனிமையானவர்..! அவரும் ஆங்கிலத்துறையில் சிறப்பு மிக்கவர். என்னைவிட
அவருக்கு ஒரு 10 வயது கூட இருக்கலாம். அவருக்கு இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவரும், பார்க்க
பழக மென்மையானவராக இருந்தாலும் கடும் முயற்சியாளர். மற்றும் விவசாயி..!
அண்மையில் நடந்த எனது மகளின் சாமத்திய வீட்டுக்குக்கூட வந்திருந்தார்.
மக்களை மதிப்பவர். எனது வீட்டு விழாக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தால் நிச்சயம் தவறாது
சமூகமளிப்பவர்.
அவர், தனது தந்தையாரின் 100ஆவது ஆண்டையொட்டி ஒரு விழா செய்யப்போவதாகவும்,
என்னையும் சிறு உரையாற்றும்படியும் வேண்டியிருந்தார். முதலில் ஓம் என்று சொல்லிவிட்டேன்.
அதற்கேற்ப திட்டமிட, சில மாற்றங்கள் நடந்துவிட்டது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும்
அறிஞர்களுடன் என்னை அழைத்தவர், தற்போது பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அறிஞர்கள்
வரமுடியாத சூழ்நிலை உருவானதால், அவரது தந்தையார் கற்பித்த பாடசாலை அதிபரைப் பிரதம விருந்தினராக
அழைத்திருக்கின்றனர். அதன் பின்னர் என்னையும் அழைக்க விரும்பிப் பெயரை இணைக்க, பதவிகளில்
உள்ள வேறுபாட்டால், குறைநினைக்க வேண்டாம் எனச்சொல்லிப் பெயரை போடவில்லை. நாங்கள் உங்கள்
பெயரைப் போடவில்லையே தவிர நீங்கள் வந்தால், தனது குடும்பத்தைப் பற்றி சிறு உரையாற்றமுடியும்
என்றார். எனக்கும், எனது தாயார் அவர்களது குடும்பத்தைப் பற்றியும், அந்த ஆங்கில ஆசிரியர்
பற்றியும் சொல்லியிருந்தார். அத்துடன், அவரது மனைவியும் எனது தாயாருடன் வேலைசெய்துள்ளார்கள்.
இந்தத்தொடர்புகளைக் கதைப்பது நல்லது என்றும், கண்டிப்பாக வரவேண்டும் என்று வேண்டுகோள்
வைத்தார். அவருக்காக நான் அந்த நிகழ்வுக்குப்போக நினைக்க, அவர்கள் இந்நிகழ்வை நடத்தும்
இடம் காரைநகர் என்பதால், மனம் பயந்துவிட்டது..! அந்த ஊருக்குப்போகும் பாதைகள் யாவும்
குண்டும் குழியும்..! ஏற்கனவே எலும்பு மற்றும் நரம்புப் பிரச்சனைகள் இருக்கும் இந்தத்தருணம்
போவது சரியல்ல. என்னசெய்வது..? போக விருப்பம் ஆனால் பாதைகள் பயமுறுத்துகின்றன..!
அண்மையில் சாமத்தியவீட்டுக் கார்ட் கொடுக்கப்போயும், கலங்கியபடி
வந்தேன். அந்தப் பாதையால் பயணிப்பது என்றால் பயமாக இருக்கின்றது. ஏன் இன்னும் திருத்தாமல்
இருக்கின்றார்களோ தெரியவில்லை..? அப்பாதைகளால் ஒவ்வொரு நாளும் பயணிப்பவர்களை நினைக்க
கவலையாக இருக்கின்றது.
அவருக்கு மறுக்க முடியவில்லை. ஆனால் வரமுயற்சிக்கின்றேன்
எனச்சொல்லி, எனது ஆற்றாமையை ஓரளவிற்கு அவருக்கு உணர்த்தினேன். இருந்தாலும் போக முடிந்தால்
எல்லோருக்கும் சந்தோசமே..!
ஆ.கெ.கோகிலன்
23-06-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக