சாமத்திய வீடு..!

 


 

ஒவ்வொரு நாள் விடியும்போதும், அந்த நாள் சிறப்பாக மறையவேண்டும் என்ற நினைப்போடே பாயைவிட்டு எழும்புவேன். நேற்றிரவு பிந்திப்படுத்தாலும்  சாமத்தியவீடு பற்றிய நினைவால்,  நித்திரை சரியாகக் கொள்ள முடியவில்லை. எமது வீட்டைச் சூழ நிறைய வயதானவர்கள்  இருக்கின்றார்கள். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ தெரியாது..? இயற்கை மீது எப்போதும் மிகப்பெரிய பயம் இருக்கின்றது. நான் ஏதாவது தவறு செய்துவிட்டால் இயற்கை எப்போதும் தண்டனை தரக் காத்திருப்பது எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை..! என்னை அறியாமலே பல தவறுகள் நடந்திருக்கலாம்.  இறைவன் தந்த அறிவை வைத்தே நான் இயங்குகின்றேன்.  அதில் தவறுகள் இருந்தால் என்ன என்று சொல்வது..? தந்தது அவனே..! வருவதை சமர்ப்பிப்பதும் அவனுக்கே..! எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் இயல்பை மாத்திரம் வளர்க்க விரும்புகின்றேன். அத்துடன் விழாமல் இருக்க, என்றும் முயற்சி செய்ய  விரும்புகின்றேன்.

 

இந்த எண்ணவோட்டத்தில் நேரம் காலை மணி 6ஐ தாண்டிவிட்டது. உடனேயே சின்னச்சின்ன வேலைகளைச் செய்து முடிக்க முன்னரே Camera men மற்றும் மேக்கப் பெண் எல்லோரும் நேரத்திற்கு வந்துவிட்டார்கள். அவர்கள் எல்லோருக்கும், எனது நேரம் தவறாமை பற்றி நன்றாகத் தெரியும்..! ஆனால் நான் இன்று நேரம் தவறிவிட்டாத நினைக்கின்றேன். வழமையாகச் செய்யும் கடமைகளைக்கூடச் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் கீழ்வீட்டு, குளியலறையில் இருந்து வெளிச்செல்லும் கழிவு நீர் குழாய் அடைத்து பின்பக்க Manhole  வழியாக கழிவுநீர் வெளியேறி துர்நாற்றமும் வீசியது..!

இன்னும் சில நிமிடங்களில் மகளை குளிக்க வாக்கவேண்டும்.  அதற்காக மூத்த மகளிற்கு கட்டிய தொட்டிக்கு வர்ணம் பூசி அழகாக வைத்திருந்தேன். அதற்குள் புதிதாக வந்த இந்தப்பிரச்சனையை எப்படித்தீர்ப்பது என்று புரியவில்லை..?  அந்த manhole இல் இருந்து வெளியில் தெரிந்த பெண்களின் சுகாதாரக்கழிவுப்பைகள் நிறைய வெளியே வந்தன.  அருவருப்பைப்பார்க்காது, அவற்றை எடுத்து ஒரு கிடங்குவெட்டித் தாட்டேன்.  எனது பிள்ளைகளின் சுகாதாரக்கழிவுகளே அவை. நான் செய்யாமல் யார் செய்வது..?

ஆனால் இவ்வளவு காலமும் இல்லாமல் இன்று இந்தப்பிரச்சனை வந்துள்ளது..! வேறுவழியில்லாமல், ஓரளவிற்கு முயன்றுவிட்டு, இதைவிட முக்கிய வேலைகள் சில இருந்ததால் அவற்றைச் செய்து,  குளித்துவிட்டு படம் எடுப்பவர்கள் எது தேவை என்று சொல்கின்றார்களோ அவர்கள் சொல்வதைச் செய்துகொண்டிருந்தேன். மகளை பூக்கள் போட்டு தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் குளிக்க வார்த்து அதில் சில புகைப்படங்களும், வீடியோவும் எடுத்தார்கள். அதன் பின்னர்  தலையைத்துவட்டி, மேக்கப் செய்யத்தொடங்கி ஏறக்குறைய காலை 11.15 மணிவரை அது முடிய நேரம் எடுத்தது. 12.00 மணிக்கு மண்டபத்திற்கு போகவேண்டும். ஆனால் 8.00 மணியில் இருந்து படம் எடுக்க வந்தவர்கள் பல இடங்களுக்குப் போய் படம் எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். பல முறை மேக்கப் அறைக்குள் சென்று ”எப்ப முடியும்..? எப்ப முடியும்..?” என்று கேட்க ”இப்ப முடியும்.. இப்ப முடியும்..” என்று சொல்லியே நேரம் 11.15ஐ நெருங்கிவிட்டது.  முதலில் கொக்குவில் Fox இற்கு போக எடுத்த  முடிவு, நேரப்போதாமையால் பின்னர் ஊரெழுவிலுள்ள Magosa என்ற பழைய வீடு ஒன்றிற்குப் போக முடிவுசெய்து, அங்கே சில படங்கள் மாத்திரம் எடுக்கும்போதே நேரம் 12.00 தாண்டிவிட்டது.

மண்டபத்திற்கு மக்கள் வந்திருப்பார்கள். இன்னும் நாம் போகவில்லை என்றால் வெறுத்துவிடுவார்கள். மனைவி மற்றும் மூத்த மகள் மண்டபத்திற்குச் சென்றுவிட்டார்கள். ஆனால் நான் படம் எடுப்பவர்களுடன் நின்றேன். போகும்போதே நேரம் நெருங்கியதால் குளித்து, வெளிக்கிட்டே சென்றேன். அதனால் கொஞ்சம் அலைச்சல் குறைந்தது. இல்லை என்றால் அவர்களை இறக்கிவிட்டு, வீடு வந்து குளித்து வெளிக்கிட்டு, மனைவியையும் மூத்தமகளையும் மண்டபத்தில் விடவே தீர்மானித்திருந்தேன். இடையில் சிலரின் தலையீட்டால் முடிவுமாறியது..!

சுன்னாகம், ஊரெழு வீதி படுமோசமாக இருந்ததால் என்னால் காரை வேகமாக ஓட்ட முடியவில்லை. இடையில் குறுக்கு வீதி ஒன்றைப் பயன்படுத்தியே அங்கு சென்றோம். சிறிதுநேரம் கழித்து, அதே வழியில் திரும்பி வீடுவந்து, மேக்கப்பெண், தனக்குரிய சில சாமன்களை எடுத்துக்கொண்டு மண்டபம் போக நேரம் மணி 12.30ஐத்தாண்டிவிட்டது. எல்லோரும் வெறுத்துப்போய் இருந்தார்கள். நான் பொதுவாக நேரத்திற்கு செல்வது வழமை. இன்று, இது என்னால் நிலைநாட்ட முடியாமல் போய்விட்டது..! அந்த சமயத்தில் எனது காரை பார்க் பண்ணக்கூட இடமில்லாமல் இருந்தது. கடைசியில்  இரண்டாவது தம்பி வந்து  உதவியதால் பார்க் பண்ண முடிந்தது. அதே நேரம் மனைவியும், மூத்த மகளும் ஏதோ சமாளித்துக்கொண்டு மண்டபத்தில் சம்பிரதாயச்சடங்குகளுக்குரிய ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தார். நாம் சென்றதும், உடனேயே அவற்றினைச் செய்து, ஆராத்தி  எடுத்து, மக்களையும் சாப்பிட அனுப்பினோம். இந்நிலையில் ஆராத்தி எடுப்பதற்குரிய ஆட்கள் சாப்பிடச்சென்றதால், வேறுவழியின்றி, எனது நிறுவன ஊழியர்களைக் கேட்டேன். சிலர் தயங்கினார்கள். இருவர் ஒத்துக்கொண்டார்கள். அந்நிகழ்வு சிறப்பாக முடிந்தது. என்ன ஆச்சரியம் அவர்கள் இருவரும் மூத்த மகளின் சாமத்தியவீட்டிற்கும் ஆராத்தி எடுத்தவர்கள்..!  இறைவன் சிலரை ஏதோவோர் வடிவத்தில் எம்முடன் இணைத்துக்கொண்டே வருகின்றார். அவருக்குத்தான் தெரியும் அந்தக்கணக்கு..!

பின்னர், கூட்டம் கூட்டமாகப் படம்  எடுத்தபின்னர் நாங்கள் சாப்பிடச்சென்றோம். நேரம் 3.00 மணி தாண்விட்டது. சாப்பாட்டில் அவ்வளவு ஆர்வம் வரவில்லை. வடை, பாயசம், ஐஸ்கிறீம், பீடா எல்லாம் முடிந்துவிட்டது என்றார்கள். 500 பேருக்குத்தான்  Order செய்தேன்.  ஆனால் சோறு மற்றும் கறிகள் மிஞ்சி இருந்தன. பின்னர் அவற்றைச்  சாப்பிட்டு, வீடு வந்தோம்.  இரண்டு மூன்று தடவைகள் காரை ஓட்டவேண்டிவந்தது.

வீடுவந்தாலும் சும்மா இருக்க முடியவில்லை. ஆட்கள் சிலர் வந்தார்கள். இரவு குறைந்த எண்ணிக்கையான மக்களுடன் கேக் வெட்டுவதாக இருந்தது. Makeup பெண் அதற்காக மகளை மீண்டும் வெளிக்கிடுத்தினார்.  படம் எடுப்பவர்கள் வீடு சென்றுவிட்டு, இரவு 7.30இற்குப்பின்னர் தான் வந்தார்கள். கேக் வெட்டியதுடன், வந்தவர்களுக்கு உணவும் அளித்து மகிழ்ந்தோம். இறுதியாக மேக்கப்பெண்ணை வீட்டில்கொண்டுசென்று விட இருந்தேன். நேரம் இரவு 9.00ஐ நெருங்கியது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு நண்பர், தனது மனைவி மற்றும் மகனுடன் வந்திருந்தார். அவருடன் அப்பெண்ணை அனுப்பி வைத்தேன்.

படம் எடுத்துக்கொண்டிருக்கும் தருணத்தில் சாப்பாட்டுக்காக சிறிது நேரம் காக்கவேண்டியும் வந்தது..!  Order செய்த உணவு என்பதால் அந்தநிலை ஏற்பட்டது. இறுதியில் தருணத்திற்கு வந்துவிட்டது. கேக்கினை வெட்டியும் Desert ஆகவந்தவர்களுக்கு, சாப்பாட்டிற்குப் பின்னர் கொடுத்தோம்.

எல்லோரும் சுவைத்து உண்டார்கள் எனநம்புகின்றேன். பின்னர்,  பாத்திரங்களைக்கழுவி, மிச்சங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்ததுடன், உணவுக்கழிவுகளை குப்பையில் ஏதாவது உயிரினங்கள் சாப்பிட இரவே போட்டுவிட்டேன். இறுதியாக ஓரளவிற்கு ஒழுங்குபடுத்தி படுக்கைக்குப் போகும்போது 11.00ஐ தாண்டிவிட்டது.   இவ்வாறாக, கொரோனாவால் தடைப்பட்ட சாமத்தியவீடு, எதிர்பாராமலே நடந்தேறியது..! அனைத்துக்குமான  நன்றிகள் இறைவனுக்கும் இயற்கைக்கும் போய்சேரட்டும்.

 

ஆ.கெ.கோகிலன்

09-06-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!