தலைமையகக் கூட்டம் (ASM-180)

 



வழமையாக எத்தனையோ முறை கொழும்பிலுள்ள தலைமையகக் கூட்டத்திற்கு சென்றாலும், இம்முறை செல்லும் போது மனம் சிறிது எதிர்பார்ப்பிலும், ஆச்சரியத்திலும் ஏன் பதட்டத்துடன் கூட இருந்தது.

பொதுவாக முன்பு, இரவு A/C Bus இல் வெளிக்கிட்டு, அடுத்தநாள் கூட்டம் முடிந்ததும், அந்தநாள் இரவு A/C Bus இல்  வீடு சேருவதே வழமை. ஆனால் நரம்பு நோய் வந்தபின்னர், தொடர்ந்து இருந்து பயணிப்பதை தவிர்க்க முனைவேன். இல்லையெனில் பெரிய வலியைத் தாங்கியே எனது பயணத்தைச் செய்ய நேரிடும்.

இம்முறை, காலை அதிவேக கடுகதிப் புகைவண்டியில் சென்று, அங்கு கிடைத்த உணவுகளை உண்டு, ஓடும் காட்சிகளை ரசித்தபடி கொழும்பு சென்றாலும், தம்பி வீட்டில் நண்டுடன் பிட்டு சாப்பிட்டாலும், நித்திரை தொந்தரவாக மாறிவிட்டது..! என்னால் நித்திரையை ஒழுங்காகக் கொள்ளமுடியவில்லை..! எப்படிப்படுத்தும் முடியவில்லை..! இறுதியாக காலை 5.00மணிக்கு, எழுந்து குளித்தபின்னர் சிறு நிமிடங்கள் மட்டும் நித்திரை வந்தது..! அதுவும் 6.00மணியுடன் நகர்ந்தது.

விரைவாக வெளிக்கிட்டு, அலுவலகம் பஸ்ஸில் போக, வழமையாக வரும் குறித்த பஸ்ஸை பார்த்துக்கொண்டிருந்தேன். அதனைக் காணவில்லை..! காலை 6.45போன நான் காலை 7.45 வரை பஸ் நிலையத்தில் காத்து, வெறுத்து, வெந்துவிட்டேன்.  இருந்தாலும் சுதாகரித்துக்கொண்டு, மூன்று பஸ்களினதும், கால்களினதும் உதவியால் காலை 8.30இற்குள் அலுவலகம் வந்துவிட்டேன். வழமையான வேலைகளுடன், பணிப்பாளர் நாயகத்தை யாழ் வரவேற்பதற்கான வரவேற்பு அட்டையைக் கொடுத்துவிட்டு, எனது இடம்மாற்றம் பற்றிக்கதைத்தேன். எது வந்தாலும் நான் ஏற்பதாகக் கூறினேன். தலைமையகத்தில் தேவையிருந்தால் தரும்படியும் கூறினேன். திருகோணமலையில் ஏறக்குறைய 15 வருடங்கள் இருந்ததால், அது எனக்குப் புதுமையான அனுபவங்களைத் தராது என்றும், வேண்டும் என்றால் மட்டக்களப்பு அல்லது சம்மாந்துறை போன்ற இடங்களைத் தரும்படியும் கோரினேன்.  எது நடந்தாலும் ஏற்கும் பக்குவம் எனக்கு இருக்கின்றது.

பொதுவான சில நாட்டிற்கு நன்மையளிக்கக்கூடிய வள உச்சப்படுத்தல் தொடர்பாக எனது எண்ணத்தைத் தெரிவித்தேன். பார்ப்போம் என்ன நடக்கின்றது என்பதை..?

பணிப்பாளர் நாயகமே ஒரு முறை அடுத்த கூட்டத்தில் தான் இருப்பேனா என்ற சந்தேகத்துடன் கூட்டத்தைத் தொடர்ந்தார்..?   கூட்டம் சிறிது சல சலத்தது..! அவர் சங்கடப்படாமல் நகர்ந்து சென்றார்.

அங்கே பல பிரச்சனைகள் இருந்தன..! அதற்கான தீர்வுகளும், தீர்வுகளைத் தேடுவதற்கான முயற்சிகளும் ஆராயப்பட்டன.

வழமையான கூட்டம் முடிய, மாலை 2.30  தாண்டிவிட்டது..!

பின்னர் மதிய உணவை எடுத்துக்கொண்டே, பணிப்பாளர் ஒன்றியக்கூட்டம் நடந்தது..! பல விடயங்கள் சொல்லப்பட்டன. அதில் எனது இடமாற்றம் தொடர்பாகவும் கதைக்கப்பட்டது. நானும் வழமைபோல் எனது நிலைப்பாட்டைக்கூறி, எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறி, சில வரலாற்று நிகழ்வுகளையும், தலைமையகம் விட்ட தவறுகளையும் சுட்டிக்காட்டினேன். மௌனமும், மெல்லிய சிரிப்புமாக நகர்ந்தன அந்த நேரம்..!

முடிவுகள், சில ஆய்வுகளின் பின்னரே வெளிவரும். அதுவரை  எனக்கான பதட்டம் தொடரும்..!  அது தான் எனக்கு சுவாரசியமும் கூட..!

மாலையும் இரண்டு பஸ்கள், நடைப்பயணம் என முயன்றே தங்குமிடம் வந்தேன். சில மணிகள் தங்கிய பின்னர் இரவு A/C Bus இன் உதவியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

Duty Leave என்பதால் பகலிலே உறங்கிக் களைப்பைப்போக்கி, வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளையும் செய்தேன்.

மனது அமைதியானது..!

 

ஆ.கெ.கோகிலன்

08-12-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!