உயிரின் உயர்வு..!

 



நான் பணிப்பாளராக வந்த பின்னர், பல முறை வருகைதரு விரிவுரையாளர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் வைத்துள்ளேன்.  அந்த நியமனங்கள் எல்லாம் 6 மாதங்கள் வரையான தற்காலிக நியமனங்கள் தான். இந்த முறை, தலைமையகம் நேரடியாக ஒப்பந்த அடிப்படையிலான போதனாசிரியர்களை, நேர்முகத்தேர்வினை வைத்து, எம்மையே தெரிவு செய்யக்கூறினார்கள்.

அதனடிப்படையில் இன்று நேர்முகத்தேர்வுகள் நடந்தன. சிலர் வந்தார்கள். அதில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்களும், பட்டப்பின்படிப்பு படித்தவர்களும் இருக்கின்றார்கள்..! உயர்தரத்தில் மூன்று பாடத்திலும் அதிவிசேட சித்தி பெற்றவரும் இருக்கின்றார்..! உயர் தரத்தையே, சரியாக நிறைவு செய்யாமல் பட்டங்கள் பெற்றவர்களும் இருக்கின்றார்கள்..! குறைவான தரமானாலும், ஆங்கிலத்திலும், தன்நம்பிக்கையிலும் அடித்து நொருக்கக்கூடிய நபரும் வந்தார்..! அமைதியான நபரும் வந்தார். ஆர்ப்பாட்டமான நபரும் வந்தார். முடிவை புள்ளிகள் அடிப்படையில் தீர்மானித்தோம்.

இந்த நேர்முகத்தேர்வை 5பேர் சேர்ந்து நடாத்தினோம். அப்போது பல விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டது.

குறிப்பாக, நடத்தைகளைச்  சற்று உன்னிப்பாக நோக்கினோம். மரியாதை தரவேண்டும் என்பதை கேட்டு வாங்குபவர்களும் இருக்கின்றார்கள்..! தங்களின் நடத்தைகளூடாக மரியாதை கொடுக்க வேண்டும் என்ற  எண்ணத்தை தோற்றுபவர்களும் இருக்கின்றார்கள்.

நடத்தைகள் ஊடாக எமக்கான மரியாதைகளை பெற முயற்சிக்க வேண்டும். மாறாக உரத்து கதைப்பதாலும், கண்டபடி பேசுவதாலும், நல்லவர் போல் நடிப்பதாலும் “உண்மையான மரியாதை” கிடைக்காது..! ஒருவர் நடத்தையைத் தொடர்ந்து அவதானிக்கும் போது, இயல்பாகவே அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டிய எண்ணம் வரவேண்டும்.

அதேநேரம், ஒருவர் உள அழுத்தத்தால் முரணாக நடந்தால், உண்மையான நண்பர்களாக இருந்தால், அவர்களைக் கண்டித்து திருத்த வேண்டும். தவறுகள் இல்லை என்றால் அவர்களுக்கு பக்கபலமாக நின்று வாதிட வேண்டும். மாறாக விலாங்கு மீன்  போல் வாழ்வது கற்றவர்களுக்கு அழகல்ல..!

உண்மை,  உழைப்பு, உறுதி என்ற இந்த மூன்று “உ”வும் (3உ)  எமது உயிரின் மதிப்பை  உயர்த்தி, உலகிற்கு உணர்த்தும்.


ஆ.கெ.கோகிலன்

28-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!