பணிப்பாளர் நாயகம் யாழ் விஜயம்..!

 


 


கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே எமது தலைமையகத்திற்கு புதிதாக பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர், இலங்கைக்கல்வி அமைச்சில் பல வெளிநாட்டு நிதித்திட்டங்களை முன்னெடுக்கும் முக்கிய பொறுப்பில் பணிப்பாளராக இருக்கும் சுஜிவா லெவான்கமகே என்பவர் எமது நிறுவனத்தையும், அதன் வசதி வாய்ப்புக்களையும், நிறுவன மாணவர்களையும் சந்திக்கவேண்டும் என்பதையும் பல முறை என்னிடம் கூறியுள்ளார். பல முறை online meeting ஊடாக இந்த விடயத்தை நினைவுபடுத்திக்கொண்டே வந்தார். அத்துடன்  எனது காலம் முடிவடைந்ததையும், திருகோணமலையில் இருக்கும் பணிப்பாளர் யாழ் வரமுயல்வதாகவும் சொன்னார். நீங்கள் இருவதும் கலந்து, அது தொடர்பான முடிவைத் தரும்படியும் பலமுறை கூறியுள்ளார்..! நான் அளித்த பதில், நீங்கள் சொல்வதை நான் கேட்பேன். நீங்கள் எங்கு போகச்சொன்னாலும் போவேன். எனக்கு எல்லாம் ஒன்று தான் என்று கூறியுள்ளேன்.  உங்களின் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப ஏதாவது நிறுவனத்தைத் கேட்கச்சொன்னார். அதன் பிறகு, தலைமையகத்தில் ஏதாவது இடம் இருந்தால் தரும்படி கேட்டேன். அதற்கான தருணம் தற்போது வரவில்லை என்றார். பின்னர், எனக்கு புதுமையாகவும், புது மனிதர்களோடு பழகும் சூழலுமுள்ள நிறுவனத்தைத் தரும்படி கேட்டேன். அதற்கு பின்னர் மட்டக்களப்புக்கு போக முடியுமா..? என்றார். மட்டக்களப்பில் இருப்பவர் ஏற்றுக்கொண்டால் நான் தயார் என்றேன்.

இந்தப் பேச்சுவார்த்தை போகும் நிலையில், எமது நிறுவன முகாமைத்துவத்துறை ”முகாமைத்துவ நேரம்” என்ற இலத்திரனியல் சஞ்சீகையை, பல நிகழ்வுகளுடன் சேர்த்துச்செய்ய விரும்பியது. நானும் அதற்கு சம்மதித்தேன். பணிப்பாளர் நாயகம் வந்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். ஏற்கனவே வருவதற்கான திட்டத்துடன் இருந்த பணிப்பாளர் நாயகம், இந்த அழைப்பையும் ஏற்றுக்கொண்டு வருவதற்கு சம்மதித்தார். அத்துடன் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க, அதுதொடர்பான நபர்களையும் கூட்டிவர சம்மதித்தார்.

இன்று அதிகாலை 1.30இற்கே பணிப்பாளர் நாயகம் கொழும்பிலுள்ள அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு, அவருடன் மற்றைய வேலைகளுக்கான பொறுப்பான நபர்களையும் கூட்டிக்கொண்டு காலை 11.30 மணியளவில் எமது நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தார்.

நானும் இன்று சிறு பதட்டத்துடன் அவரை வரவேற்கக் காத்திருந்தேன். பல சோதனைகள், இயற்கையாலும், சூழலாலும் வந்தன..! எமது நிறுவன ஊழியர்களின் துணையோடு, அவற்றை முறியடித்து, அவர் வந்த நோக்கத்தை நிறைவுசெய்ய முனைந்தேன். பல கூட்டங்கள் வைத்தேன். என்ன என்ன நன்மைகளை அவரால் செய்ய முடியுமோ அவற்றைச் செய்வதாகக் குறிப்பிட்டார். நாட்டிலும், தலைமையகத்திலும், நிறுவனங்களிலும் நடக்கும் அரசியலைப் பற்றிக்கூறினார். தான், நாட்டிற்கு ஏதாவது நன்மையை இதன் ஊடாகவும் செய்ய விரும்புவதாகக் கூறினார். எமது ஒத்துழைப்பு இருந்தால், அவரால்  பல விடயங்களை செய்யமுடியும் என்பதை, கடந்த 5 அல்லது 6 மாத காலச் செயற்பாடுகளூடாக அறிய முடிந்தது.

அப்படியான தகுதியான நபர், இன்னும் சில காலம் சேவையில்  தொடர்ந்தால், நிறுவனங்களின் தரத்தை இன்னும் உயர்த்த முடியும் என்பது எனது நம்பிக்கை.

மதிய உணவை, எமது நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. மாலை அவர்களுக்கான தங்குமிடத்தை அருகிலுள்ள விடுதியில் ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் அவர்கள் அங்கு காணப்பட்ட அதிக எண்ணிக்கையிலான நுளம்புகளால், வேறு இடத்திற்கு மாறவேண்டிய நிலை ஏற்பட்டது..!

அத்துடன் வடமாகாண ஆளுனரையும் சந்தித்து, சில விபரங்களைக் கேட்டதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மூலம் 10 வருடத்திற்கான செயற்திட்ட முன்மொழிவைத் தயாரிக்கவும், அதில் 2 அல்லது 3 கட்டங்களூடாக (Phase) எமக்குத் தேவையான கட்டடத்தையும், ஆய்வுகூடங்களையும், பெற முயற்சிக்கவும் கூறினார். எமது நிறுவனத்திற்கான பஸ்ஸைத் திரும்ப எடுக்கச் சொன்னார். குறைந்த அளவிலாவது தேவையான கணினிகளை கோரவும், தேவையான Projectors ஐ  பழைய திகதியிட்டுக் கோரவும்  கூறினார். தங்கல் உயர்தொழில்நுட்ப நிறுவனத்திலுள்ள தொழில்நுட்ப உத்தியோகத்தரை குறைந்த காலத்திற்கு, எமது நிறுவனத்தில் பயன்படுத்த, எழுத்து மூலம் கோரச்சொன்னார். அவ்வாறாக பல வித ஆலோசனைகளை வழங்கியதுடன், வரியறவிடாத கால பழைய  கொடுப்பனவை, சரியான முறையில்,  கணக்காளரும், நானும் சேர்ந்து, அவரது தீர்மானத்திற்கு அமையச் செய்து முடிக்க அனுமதி தந்தார்.

இரவு வலம்புரி விடுதியில் அவர்களுக்கான இரவு உணவுடன் சில ஆலோசனைகளையும்,  அறிவுரைகளையும் எமக்கு தந்ததுடன், எமது நிறுவனத்தை உயர்த்துவதற்கு ஏற்ற கற்கை நெறிகளையும், எமக்குத்  தேவையான  பொருளாதாரத்தைப் பெற, குறுகிய கால கற்கை நெறிகளை, பணம்பெற்று வழங்கும் படியும்,  அனைவரும் நன்மையடையும் வகையில் நடைமுறைப்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.

காலை 8.30 இற்கு அலுவலம் சென்று, வீடு திரும்பி வர இரவு 11.00 மணி  ஆகிவிட்டது. நாளைய நிகழ்ச்சி நிரலை நினைத்தபடி படுக்கச்சென்றேன்..!

 

ஆ.கெ.கோகிலன்

15-12-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!