நோயாளிகள்..!
எனது நெருங்கிய உறவினர் வயது மூப்பு மற்றும் கிரிமித்தோற்று போன்ற பல காரணங்களால் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்..! அம்மா பல தடவை “அவரை போய் பார்த்துவிட்டு வா..” எனச்சொன்னாலும் எனது வேலைச்சூழல் ஒத்துழைக்க வில்லை. இன்று ஞாயிறு, எப்படியாவது போகவேண்டும் என்ற முடிவோடு இருந்தேன். காலையே மனைவியிடம் சொல்லிவிட்டு வெளிக்கிட்டேன். என்னத்தைக் கொடுப்பது..? எத்தனை மணிக்கு பார்வையாளர்களை விடுவார்கள்..? எந்த வாட்டில் இருக்கின்றார்..? என ஒரு விபரமும் அம்மாக்குத் தெரியவில்லை. நான் போன் மூலம் சிலரை தொடர்பு கொண்டேன் அவர்களையும் பிடிக்க முடியவில்லை..! பின்னர் ஊரிலுள்ள தம்பி மனைவி மூலம் சில தகவல்களைப் பெற்றுக்கொண்டு சென்றேன். நான் காலை 7.00-8.00 பார்வையாளர்கள் போகலாம் எனநினைத்துக்கொண்டு செல்ல, அவர்கள் 6.00-7.00 என்றார்கள்..! எந்த வாட் என்று தெரியாமல் அலைந்து, ஒருவரிடம் விசாரிக்க அவர் 5ம் வாட்டில் பார்க்கச் சொல்லி சொன்னார். அங்கு தேடினேன் ஆள் இல்லை. அந்த வாட் ஊழியரிடம் விசாரித்தேன். அவர் 1ம் வாட்டிற்குப் போகச் சொன்னார். சரி அங்கு போய் தேடுவோம் எனப்போனால், எனக்குத் தெரிந்தவர்கள் நோயாளியாகவும், அவரைப் பார்ப்பவராகவும் இருந்தார்கள்..! அவர்களிடம் நான் விடயத்தைக்கூற, ஊழியரிடம் விசாரிக்க சொன்னார்கள். அவர்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, ஒரு பகுதிக்குச் செல்ல, அங்கு அவரையும், அவரது மருமகனையும் கண்டுகொண்டேன்.
பார்க்க கவலையாக இருந்தது. சின்ன வயதில் இருந்தே அவரைப்பார்க்கின்றேன்..!
தானும் தன்பாடும் என்று இருப்பவர்..! யாருடனும் சண்டையிட்டதைப் பார்க்கவில்லை. குடிப்பழக்கம்
கிடையாது. தனது குடும்பம் மீது அதீக அக்கறையுடன் செயற்பட்டவர்.
நான் ஊரில் இல்லாத சமயங்களில், அம்மா தனித்து இருக்க, பல
உதவிகளை அவர்களது குடும்பத்தினரே செய்தார்கள். இருந்தாலும் அருகருகே வீடுகள் இருப்பதால்
சில மனக்கசப்புக்களும் இருக்கத்தான் செய்தன.
நான் எல்லோரையும் அனுசரித்துப் போக நினைப்பவன். அம்மா எல்லோருடனும்
அவ்வாறு இருக்க மாட்டார். நல்லவர்..! ஆனால் “நறுக்“ என்று இருப்பவர். தற்போது முதுமை
வந்தும் “ராங்கி“ குறையவில்லை. இருந்தாலும் உடல் உபாதைகளால் அவதிப்படுவார். நான் புத்திமதிகளைச்
சொன்னாலும் கேட்பாரோ தெரியாது..! எனது சின்ன வயது வாழ்வியல் அவருக்குப் பல நெருக்கடிகளைக்
கொடுத்ததால் என்னில் இன்றும் நம்பிக்கை குறைவு..!
நானும் என்னால் இயன்றதைச் செய்கின்றேன். இருந்தாலும் அம்மாவின்
மனதை முற்றாக வெல்ல முடியவில்லை..!
நான் 50ஐ தாண்டிய பின்னரே அம்மாவின் மனதில் மாற்றங்கள் மெது
மெதுவாக வருகின்றன. அயல்களுடன் மனக்கசப்புக்கள் இருந்தாலும் மன்னிக்கும் குணம் மெல்ல
மெல்ல தலைப்பட்டன..! அதன் விளைவாகவே என்னை வைத்தியசாலைக்குப் போகச் சொன்னார்.
நான் சின்ன வயதில் இருந்து, இன்று வரை எல்லோருடனும் ஒரு வரையறுத்த
நிலையிலான தொடர்புகளை மட்டுமே வைத்திக்கொண்டு வருகின்றேன். அம்மா சிலருடன் கதைக்க வேண்டாம்
என்றாலும், நான் அவருக்குத் தெரியாமல் கதைப்பேன்.
எனக்கு குற்றம் என்று படும் வரை யார் சொல்லியும் எனது மனத்தை
மாற்ற முடியாது. அம்மாவிற்கும் அது நன்றாகத் தெரியும்.
நான் திருமணம் செய்யும் சமயம் என்கூட இருக்க, உதவ, ஒரு உறவினர்களும்
இல்லை..! நாட்டு நிலமை அப்படி..! வசதி வாய்ப்புக்களும்
குறைவு..! அப்பாவும் இல்லை..!
இந்த அங்கிளின் (Uncle) உதவியுடனே பல காரியங்களைச் செய்தேன்.
அவரே தனது மோட்டார் சைக்கிளைத் தந்து, எனது திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும்,
நானே இலகுவாகச் செய்யகூடிய நிலையை ஏற்படுத்தித் தந்தார். அதனை நான் என்றும் மறக்க மாட்டேன். சிலருக்கு பிடிக்காத ஒருவர் எனக்கும் பிடிக்காது என்று எப்படிச்சொல்ல முடியும்..? அவரவர்களே அதனைத் தீர்மானிக்க வேண்டும்.
வைத்தியசாலையில் இருந்த நோயாளிகளையும், அவர்களின் கதைகளையும்
கேட்கும் போது மிகவும் கவலையாக இருந்தது.
எனக்குத் தெரிந்தவர்களே பலர் அங்கே நோயாளிகளாக இருந்தார்கள்.
அழகான சிறுபெண் அந்த வாட்டில் அங்கும் இங்கும் செல்லும் போது
யார் அது என்று விசாரிக்க, அவர் தான் டொக்டர் என்றும் சிங்களப் பெண் என்றும் நன்றாகத் தமிழ் கதைப்பார் என்றும்,
மிக அன்பாக நடத்துவார் என்றும், அங்கே இருந்தவர்கள் சொல்லும் போது, மனம் மகிழ்ந்து
அவரையும் சேவையையும் பாராட்டினேன். டொக்ரர் என்றால் அப்படி இருக்க வேண்டும். அப்போது
தான், கடவுளுக்குச் சமமாக மதிக்கப்படுவார்கள். இல்லை என்றால் வியாபாரிகள் போல் தான்
பார்க்கப்படுவார்கள்.
இறுதியாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளே வர, அயல்வீட்டு அங்கிள் மற்றும் அவரது மருமகன்,
மற்றும் எனக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
-நோயற்ற வாழ்வே குறைவற்ற பெரும் செல்வம்-
ஆ.கெ.கோகிலன்
10-12-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக