உணவுத்திருவிழா..!

 



இன்று பல வேலைகள் செய்யவேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டிருந்தேன்.

அதில் முதல் வேலை இரண்டாவது மகளை பரிசளிப்பு விழாவிற்குப் போக, கூட்டிச்செல்ல வேண்டும். பொதுவாக இருக்கும் பெற்றோர்கள் போல் எனது பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச்செல்வது மிக மிகக்குறைவு..! சில சமயங்களில் பிள்ளைகள் கேட்கும் போது அதனைத் தட்டிக்கழிக்க மனம் இடம்கொடாது..! எப்படியாவது அதனை நிறைவேற்றத் துடிப்பேன். அதையே இன்றும் செய்தேன்.

அடுத்து இன்று லீவு நாள் என்றாலும் குழுப்படம் எடுக்கத்துறைத்தலைவர் ஒருவர் கேட்க, ஒத்துக்கொண்டதால் சென்றேன். போகும் போது வழியில் மழைவந்துவிட்டது. காரில் சென்றதால் நனையாமல் சென்றேன். வழமையாகக் காரில் செல்வது குறைவு. ஆனால் இன்று இயற்கை அவ்வாறு செல்லத்தூண்டிவிட்டது..! அதனைத்தொடர்ந்து அதேதுறை மாணவர்கள் உணவுத்திருவிழா நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு என்னையும் பணிப்பாளர் என்ற வகையில் பிரதமவிருந்தினராக அழைத்தார்கள். இன்று இன்னொருவருக்கு பதில் கடமைசெய்யும் பொறுப்பைக் கொடுத்திருந்தாலும், நானே தொடங்கவேண்டிய ஒரு சூழல் வந்ததாலும் சென்றேன். சொன்ன நேரத்திற்கு தொடங்க முடியவில்லை. மழையும் வந்து எம்மை தொந்தரவு செய்ததுடன், ஒருவிதத்தில் மனத்தைக் குளிர்விக்கவும் செய்தது.

எமது நிறுவனத்தை வளர்த்த பழைய பணிப்பாளர்கள்,விரிவுரையாளர், கணக்காளர், மற்றும் பழைய மாணவர்கள் என எல்லோரும் வந்திருந்தார்கள்..!  வழமைபோல் என்னைப் பேச அழைக்க நானும் அதிகம் பேச பல விடயங்கள் வைத்திருந்தேன். அந்நேரச் சூழலும், நட்பு வட்டாரங்களின் கோரிக்கையும் சில வார்த்தைகளுடன் பேச்சைச் சுருக்க வைத்தது..! அவ்வாறே மற்றோரும் செய்தார்கள். எல்லா எமது சகோதர நிறுவனங்களிலும்  சிறந்தபெறுபேறு பெற்ற எமது நிறுவன மாணவியைக் கௌரவித்தோம். இம்மாணவியைப் போல், பலரும் உருவாக நானும் எனது உரையில் வேண்டிக்கொண்டேன்.

எனக்கும் ஒரு கேடயம் தந்து கௌரவித்தார்கள். 

சிறிது நேரத்தில் உணவுகளை வாங்கச் சென்றேன். எல்லாப்பிள்ளைகளின் பொருட்களையும் வாங்க மனம் விரும்பியது. ஆனால், அது நடைமுறைச் சாத்தியம் அல்ல. இருந்தாலும் பல பொருட்களை ரூபா.5000.00 மேல் செலவு செய்து வாங்கினேன்.

நான் வழமையாகக் கன்ரீனுக்கே போவது கிடையாது. இன்றைக்கு பல தின்பண்டங்களை வாங்கினேன்.

அந்நேரத்தில் பழைய மாணவர்களுடன் நிறுவனத்தை முன்னேற்றுவது தொடர்பாகக் கதைத்து, அவர்களது உதவிகளையும் கேட்டேன். சில வருகைதரு விரிவுரையாளர்களையும் இவ்வாறான செயற்பாட்டிற்கு உதவச் சம்மதித்தார்கள்.

இந்த நேரத்தில், இன்னோர் துறை மாணவர்களிடையே மோதல் மூண்டது. அதனை விசாரிக்கச் செல்ல, ஒரு பகுதி மாணவர்கள் ஓடிவிட்டார்கள். ஆனால் அவர்களை அடையாளப்படுத்த முடியும். ஒழுக்காற்று குழுவின் ஊடாக அவைதொடர்பான விசாரணைகளும், தண்டனைகளும் வழங்க வேண்டும்.

பின்னர் மகளை கூட்டிவர பாடசாலைக்குச் சென்றேன். சிறிது காத்திருந்து, அவரைக் கூட்டிவந்தேன். காலையில் மோட்டார் வண்டியில் கொண்டுசென்று விட்டேன். வரும்போது காரில் கூட்டிவந்தேன்.  பொருளாதாரச் சூழலாலும், நேர விரயம் தடுக்க முற்படுவதாலும் இவ்வாறு நடக்க நேரிடுகின்றது.

இறுதியாக மீண்டும் நிறுவனம் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. நல்ல வேளை, அந்நிகழ்ச்சியை பிற்போட்டுவிட்டார்கள்..! அதனால் மாலை சற்று ஓய்வு எடுக்கக்கூடியதாக இருந்தது.

 

ஆ.கெ.கோகிலன்

09-12-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!