கில்மிசா..!

 



இப்படியான ஒரு தமிழ் பெயரை இதற்கு முன் நான் கேள்விப்படவில்லை. புதுமையாகச் சிந்தித்து பெயர் வைத்த கில்மிசாவின் பெற்றோருக்கு எனது வாழ்த்துக்கள்.

தமிழர்கள் வாழும் பல நாடுகளில் இருந்து வந்து, ஒரு சிறந்த பாடகியாகத் தெரிவாவது என்பது அவ்வளவு சுலபமான விடயம் கிடையாது. வசதி படைத்த நாடுகளில் இருந்து வந்த திறமையான தமிழர்களே,  தவறவிட்ட சந்தர்ப்பங்கள் பலவற்றைப் பார்த்துள்ளோம். அதில் இந்திய ஊடகங்களின் நோக்கத்தையும் புரிந்துள்ளோம். திறமைகள் இருந்தாலும் நுணுக்கமான சில விடயங்களாலும், மக்களின் வோட்டுக்களாலும் பலர் கோட்டைவிட்டுள்ளார்கள்.

“குயில் பாட்டு வந்ததென்ன..” எனத் தொடங்கும் பாடலோடு அறிமுகமானபோது கடைசிவரை தாக்குப்பிடிப்பாரா என நான் நினைத்ததுண்டு. இசைக்குடும்பம் இல்லை. பொருளாதாரத்திலும் சிக்கல் இருக்கின்றது. அவரின் தந்தையாரே முதல் மேடையில், மகளின் சாமத்திய வீட்டிற்குச் சேர்த்த பணத்தை வைத்தே போட்டியில் கலந்துகொள்ளச் செய்தேன் என்று சொன்னார்.

Zee தமிழ் இலங்கை வந்து செல்லும்போது கில்மிசாவின் திறமையைப் பார்த்துள்ளார்கள்..! அதனடிப்படையிலே வாய்ப்பையும் வழங்கியுள்ளார்கள்.  அதுமாத்திரமன்றி, கொடுக்கப்பட்ட அனைத்து வாய்ப்புக்களையும் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். ஒன்று இரண்டில் ”Golden Performance” வாங்காவிட்டாலும், பெரும்பாண்மையான போட்டிகளில் அசத்தியுள்ளார்.

இவரைவிடவும் சிறப்பாகப் பாடக்கூடியவர்களும் அங்கே இருந்துள்ளார்கள்..!

இவரின் உச்சரிப்புக்கள் சில இடங்களில் தெளிவில்லாமலும் இருந்திருக்கின்றன..! இருந்தாலும் மொத்தமாகப் பாடலைப் பார்க்கும்போது குறை சொல்ல மனம் வராது.

இறுதிப்போட்டியில் பாடகர், நடுவர் சீனிவாஸ் கருத்துச்சொல்லும் போது,  90, 95 வீதம் நன்றாகப் பாடியுள்ளார் என்றுகூறி, எழுந்துநின்று மரியாதையும் செய்தார்.

இரண்டாவது சுற்றில் மிகச்சிறப்பாகப் பாடி குறை ஒன்றுமே சொல்ல முடியாத வகையில் அனைவரையும் எழுந்து நின்று வாழ்த்தச் செய்தார்.

இவரைப்போல் இன்னோர் பெண் பிள்ளையும் நடுவர்களின் பாராட்டைப் பெற்றார். இருந்தாலும், கில்மிசாவின் பாடல் பலரைக் கவர்ந்துவிட்டது..!

அண்மைக்காலமாக இலங்கையின் பொருளாதாரம் அடிபட்ட நிலையில், இங்கிருந்து இந்தியா போய் இலங்கைப் பணத்தில் 50 இலட்சத்திற்கு மேல் பரிசில்கள் பெற்று தனது குடும்பத்திற்கு உதவினாலும், இலங்கை என்ற நாட்டிற்கு பணத்தைக் கொண்டுவந்துள்ளார். ஒரு சிறுமி, இவ்வாறு தனது விடா முயற்சியால் நாட்டிற்கு உதவியதை, இந்நாட்டின் சார்பாக அவரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

எவ்வளவு திறமைகள் இருந்தாலும் வெற்றி என்பதைச் சுவைக்க ஒரு அதிஷ்டமும் வேண்டும்.  அண்மைக்காலமாக, இந்தியா குறிப்பாகத் தமிழ்நாடு இலங்கை மேல் அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் மேல் அதீத அக்கறை காட்டுவது ஆச்சரியமாக உள்ளது. 200 வருடங்களாக வாழும் இந்திய மக்களுக்கு இலங்கையில் குடியுரிமை அந்தஸ்து கிடைக்கவில்லை என்றும், இன்னும் இலங்கை, அவர்களை ஏழ்மை நிலையிலே வைத்திருக்கின்றது என்றும் ஊடகங்களில் கூவினார்கள். ஆனால் இந்தியாவிலும் அவ்வாறான நிலமை இலங்கையில் இருந்து இந்தியா சென்ற அனைத்துத் தமிழர்களுக்கும் இருக்கின்றது. அகதி முகாம்களில் நன்றாகப் படித்தாலும் இந்திய அரச வேலைகளில் இணைய முடியாது..!  எத்தனையோ பிள்ளைகளுக்கு இலங்கையே தெரியாது..! ஏறக்குறைய 40 அல்லது 50 வருடங்களுக்கு மேலாக இருக்கும் இலங்கைத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும் குடியுரிமை இல்லாமல் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தோட்ட தொழிலாளிகளாக வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் இன்று வரை அதே நிலையில் இருப்பதாகவும், அவர்களின் உணர்வை வெளியே கொண்டுவர இன்னொரு மலையகக் குயில், அசானியைக்  கொண்டாடினார்கள்..! உலகம் பூராகவும் அசானியின் பெயரை பதித்தார்கள். இலங்கையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் கூட அசானிக்காக இந்தியா சென்றார். இவற்றை எல்லாம் பார்க்கும் போது ஒரு பெரிய அரசியல் கண்ணுக்குத் தெரிகின்றது.

சிங்களவர்களே, இந்தியர்கள் தான் என்றாலும், அவர்களில் அதிகம் பேர் தெலுங்கர்கள் என்று தான் சொல்ல வேண்டும். தெலுங்கர்களுக்கும், சிங்களவர்களுக்கும் அவ்வளவு தொடர்புகள் உண்டு. வரலாற்று ஆய்வில் அதனை நன்கு அறியலாம்.

இந்த களநிலையில் சிங்களவர்கள் மத ரீதியாக சீனாவின் பின் நிற்பதால், இந்தியாவிற்கு இலங்கையில் ஆதீக்கம் செலுத்த வாய்ப்புள்ள ஒரே இனம் தமிழர் தான்..! தமிழர்களை கைக்குள் போட பல முயற்சிகளை இந்தியா செய்கின்றது. அண்மையில் யூடியூப்பில் வெளியான துவாரகா முதல் வடஇந்திய தொலைக்காட்சி நிறுவனமான Zee உம் தமிழர்களை கவரும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இது உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். இறுதி முடிவு “சரிகமபா“வில் மக்கள் வோட்டும், நடுவர்களின் புள்ளியும் என்ற வகையிலே இறுதி வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார்.

இது, உண்மையான வெற்றியா அல்லது வெற்றியைக்கொடுப்பது போல் தமிழர்களை வளைத்து, இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவாக நாம் இருக்கின்றோம் என்பதைக் காட்டும் உத்தியா என்றும் சிந்திக்கவேண்டிய சூழலில் நாம் இருக்கின்றோம்.

மீண்டும் சொல்கின்றேன்.  கில்மிசா  தனது திறமையில் எந்தக்குறையும் வைக்கவில்லை. சிறப்பாகவே பாடியுள்ளார். பல படங்களில் பாடுவதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார். சீமான் கூட கில்மிசாவின் வெற்றி உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கட்டும் என்றும், அதற்காக நன்றாகப் பாடும் படியும் ஒரு போட்டியில் கூறியுள்ளார்.

எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால், திறமையும் அதிஷ்டமும் இருக்கு என்பதை உணர முடியும்.

திறமையிருந்தும் தோற்பவர்கள் இருக்கின்றார்கள்..! முயற்சி என்னும் அதிஷ்டத்தால் தளராமலும் பலர் இருக்கின்றார்கள்..! திறமையும் அதிஷ்டமும்  ஒன்றுசேர கிடைக்கும் பாரிய வெற்றி, கில்மிசாவுடையது..!

 

ஆ.கெ.கோகிலன்

18-12-2023.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!