ஜப்பான்..!

 



வழமையாகக் கார்த்தியின் படங்கள் என்றால் நான் விரும்பிப் பார்ப்பேன். வேறுபட்ட கதைகளில் நடிப்பது அவரது வழமை..! சில படங்கள் நன்றாக இருக்கும். சில படங்கள் படுமோசமாகவும் இருந்துள்ளது..! இந்தப்படத்தை திரையில் பார்க்க விரும்பினேன். ஆனால் படம் பற்றி வந்த விமர்சனங்கள் மிக மோசமாக இருந்ததால் தியேட்டரிற்கு செல்லவில்லை. அதனால் இம்முறை தீபாவளியே ஒரு மாதிரி டல்லாகவே இருந்தது..!

படம் வெளிவந்து ஒரு மாதம் தாண்டிவிட்டது..! OTT தளமான Netflix இலும் வந்துவிட்டது..!  வேலையால் வீடு, வரும்போது ஒரு ஜப்பான் பட CDஜ வாங்கி வந்தேன். பின்னர் இரவு போட்டுப்பார்த்தேன்.

படம் பராவாயில்லை. ஆனால் படத்தில் ஹீரோக்கு எய்ட்ஸ் என்பதும், கடைசியில் ஹீரோ இறப்பதும், கதாநாயகி ஓரிரு காட்சிகளோடு காணாமல் போவதும், பாடல்கள் ஒன்றையேனும் குறைந்த அளவிலாவது காட்டவில்லை என்பதும் ஒரு சலிப்பை ஏற்படுத்திவிடுகின்றது. யூடியூப்பில் பார்த்தவை கூட படத்தில் இல்லை என்பது மிகப்பெரிய குறையாகத் தெரிந்தது..!

வழமையாக 2019இல் பேசப்பட்ட கொள்ளையன் முருகனின் கதை என்றாலும் எடுத்தவிதமும், காட்டப்பட்ட சம்பவங்களும் வித்தியாசமாக இருந்தன. கொள்ளையனைச் சாட்டி, அவனால் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கதையளக்கும் அரசியல் வாதிகளையும், வியாபாரிகளையும் எடுத்து, அவர்களது கள்ளத்தனத்தைத் தோலுரிக்கும் கதையே ஜப்பான்..!

கொமர்சியல் படம் போல் எடுக்கப்பட்ட ஒரு கலைப்படமாகவே ஜப்பான் எனக்குப் புரிந்தது..! பொறுமையாகப் பார்த்தால், தாயின் பேச்சைக் கேட்காமல் தவறுகள் செய்து, இறுதியில் தனது தவறுகளை உணர்ந்து தனக்குரிய தண்டனையை ஏற்றுக்கொள்வதே ஜப்பான் படத்தின் கதை..!

பருத்திவீரனில், தனது கேடுகெட்ட செயல்களால், இறுதியில் காதலியை இழக்கும் நீதிக்கதைபோல் இதுவும் தாயின் சொல்லைக் கேட்காமல் திருட்டை தொழிலாகச் செய்து, இறுதியில் தான் திருடாமலே, யாரோ திருடியதை தான் திருடியதாக ஏற்றுக்கொண்டு, தாய் சொன்னது போல் நாசமாய் போகும் நாயகனாக கார்த்தி, வித்தியாசமாக நடித்துள்ளார்.

வாகை சந்திரசேகர், சுனில், விஜய் மில்டன், கே.எஸ்.ரவிக்குமார், பவா செல்லத்துரை, அனு இமானுவேல் என எல்லோரினது நடிப்பும் நன்றாக இருந்தது.  தொழில்நுட்பங்கள், ஒளிப்பதிவு, இசை எல்லாம் பரவாயில்லை என்று சொல்லும் அளவில் இருந்தன.  இரண்டு கதைகள் ஒரிடத்தில் ஒன்றாகி, ஒன்று மற்றொன்றுக்கு தீர்வாகவும் மாறும் வித்தியாசமான கதையை ராஜூமுருகன் எழுதியுள்ளார். ஆனால் அவரது திரைக்கதையை இன்னும் நன்றாக அமைத்து, நாயகிக்கும் இன்னும் சில காட்சிகளை வைத்து, ஹீரோவையும் கொல்லாமல் முடித்திருந்தால், இந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுருக்கலாம்.

 ”தாய் சொல்லைத் தட்டாதே..” என்ற நீதியை படம் போதிக்கின்றது..!



ஆ.கெ.கோகிலன்

19-12-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!