சொன்ன வார்த்தை பலித்தது..!
திருகோணமலைக்கு போக நான் சம்மதித்ததற்கு உரிய காரணங்களை எமது
நிறுவன ஊழியர்கள் சிலருக்குத் இன்று தெரியப்படுத்தினேன். இன்னும் கடிதம் வரவில்லை.
வந்ததன் பின்னரே உண்மையான நிலை புரியும். இருந்தாலும் கடந்த காலங்களோடு இன்று வரை நடக்கும்
சம்பவங்களை நினைக்க ஒரே ஆச்சரியமாக இருக்கின்றது.
2009 இல் யுத்தம் முடிந்த காரணத்தாலும், வாடகை வீட்டில் நான்
இருந்ததாலும், அதனால் ஏற்பட்ட சில அசௌகரியங்களாலும், எனது அலுவலகத் தலைமைக்கும் எனக்கும்
இடையேயான சில முரண்பாடுகளாலும், யாழ் உயர்தொழில்நுட்ப நிறுவனத்திற்குச் செல்ல இடமாற்ற
விண்ணப்பத்தைப் போட்டேன். விளைவு 2010 இலே யாழ் வரக்கூடியதாக நிலமை இருந்தது. எனக்குப்
பதிலாக யாழில் இருந்தும் ஒருவர் சேவை மூப்பு அடிப்படையில் இடமாற்றப்பட்டிருந்தார். இதற்கு நான் என்ன செய்ய முடியும்..?
எல்லோரும் வேலை வேண்டும் என்பதால் கிடைக்கும் இடத்திற்குச்
செல்வதும், பின்னர் வாய்ப்பு வந்தால் சொந்த இடங்களுக்குத் திரும்புவதும் வழமை என்ற
விதத்தில் தான் செயற்பட்டேன். ஆனால் யாழில்
எனக்குப்பதிலாக இடமாற்றப்பட்டவர் 10 வருடங்களுக்கு மேல் சேவையாற்றியவர் என்ற அடிப்படையிலே
இடமாற்றம் நடந்துள்ளது. இதனை நான் எவ்வாறு நடந்தது என்று அன்று ஆராய்ந்து பார்க்கவில்லை.
அது எனது வேலையும் கிடையாது. நானும் 10 வருடங்களுக்குக் கிட்ட வேலைசெய்தாகிவிட்டது.
இது இடமாற்றம் பெறக்கூடிய பதவியே..! அப்படி இல்லை என்றால் எல்லோரும் எங்கே நியமிக்கப்பட்டார்களோ
அங்கேயே வேலைசெய்ய வேண்டும். அப்படியான நடைமுறை எமது நிறுவனத்தில் இல்லை. தேவை ஏற்படும்
போது இடமாற்றத்திற்கு விண்ணப்பித்தால் வாய்ப்புகள் வரும்போது, அவை வரும்.
இந்த இடமாற்றத்திற்குப் பின்னாலும் சில அரசியல்கள் இருக்கின்றன.
அதைப்பற்றி அலச எனக்கு விருப்பமில்லை. அப்படி அரசியல் செய்து, பதவியைப் பிடிக்கவும்
எனக்கு ஆசையில்லை. ஒரு பதவியை எடுத்தால், அதற்கு விசுவாசமாக இயன்றவரை இருக்க வேண்டும்.
அதற்காக உழைக்க வேண்டும். அவ்வளவு தான். மிகுதி எல்லாம் தானே நடக்கும்.
எனக்கு ஏறக்குறைய எல்லாம் சரியாக நடப்பதாகவே நினைக்கின்றேன்.
அதனால் தான், நான் இன்னும் இன்னும் சரியாக நடக்க முயற்சிக்கின்றேன்.
எனக்காக யாழில் இருந்து திருகோணமலை போன ஊழியரின் 15 இற்கு
மேற்பட்ட கடிதங்களை நேற்றிரவு ஒவ்வொன்றாக வாசித்தேன்.
அவர் குடும்பத்துடன் இருக்க முடியாமைக்கு காரணம் எனது இடமாற்றம்
என்றே ஒவ்வொரு இடங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், இருவரும் பதவி உயர்வு
பெற்று, பணிப்பாளர் என்ற வகையில் இருப்பதால், இனி அவரின் ஆசைக்கு இணங்க, பணிப்பாளர்
நாயகத்தின் வேண்டுகோளின் படி, முழுமனத்துடன் திருகோணமலைக்குப் போக சம்மதித்தேன்.
இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அவரைப்போல் நானும் இவ்வளவு
காலமும் நிம்மதி இல்லாமலே இருந்தேன். அவர் தொலைவில் இருந்து பிரிந்து இருந்தார். நான்
ஒரு வளவிற்குள்ளே வெவ்வேறு வீடுகள் கட்டி,
தனித்தனியே மனைவி ஒரு வீடு, பிள்ளை ஒரு வீடு, நான் ஒரு வீடு என வாழ்ந்தேன். ஒரு ஆத்மா நிம்மதியில்லாமல் அலையும் போது அதற்குக்
காரணமான ஆத்மாவும் நிம்மதியில்லாமல் அலைய வேண்டிவரும்.
ஆக, என்னையறியாமல் பாதிக்கப்பட்ட ஒருவரின் மனநிம்மதியே எனக்கு
நிம்மதியைக்கொண்டுவரும் என்ற பாடத்தைத் தெரிந்து பல முறை அவருக்கு உதவ முனைந்தாலும்,
சில நன்மைகள் கருதி அவர் அதனைத்தவிர்த்ததும், தற்போது சூழலின் வீரியம் புரிந்து, மீண்டும்
வருவதால், எனக்கான வாய்ப்பாகக் கருதி, அவருக்கு
உதவுகின்றேன்.
2010இலும் நான் யாழ் வரவேண்டிய சூழல் வந்தாலும், அது மற்றவரை
உடனடியாகப் பாதித்ததால், அவரின் வேண்டுகோளை ஏற்று, ஒருவருட கால தாமதத்தின் பின்னரே
யாழ் வந்தேன்.
நான் திருகோணமலையில் நிரந்தர விரிவுரையாளராக நியமனம் பெற்ற
பின்னர், அங்குள்ள பணிப்பாளர், சற்று போதையேறிய சூழலில் அம்மாவின் காலைத்தொட்டு, உங்கள்
பிள்ளையை இந்த நிறுவனத்தின் பணிப்பாளராக கொண்டுவருவேன் என்று சபதமிட்டார்..! ஆனால்
சில வருடங்களில் அவருக்கும், எனக்கும் பல முரண்பாடுகள் வந்து, அந்த நிறுவனத்தை விட்டே வெளியேறும் எண்ணத்திற்கு வந்துவிட்டேன். சில காலங்களில் அது நடந்தும் விட்டது..!
காலம் மாறியது..! காட்சி மாறியது..! நான் யாழ்ப்பாணத்தின்
பணிப்பாளராகவே வந்துவிட்டேன். யாழ்ப்பாண சேவைக்காலமும்
முடிந்து மேலதீகமாக ஓரிரு வருடங்கள் வேலைசெய்தும் விட்டேன்.
என்ன ஆச்சரியம்..! அவர் சொன்ன வார்த்தைகள் பலிக்கின்றன..!
நானே நினைக்கவில்லை இனி திருகோணமலை போகவாய்ப்பு வரும் என்று..! ஆனால் வந்துள்ளது..!
ஆகவே அந்த சந்தர்ப்பத்தை வழங்கிய இயற்கைக்கும், இறைவனுக்கும் நன்றி..!
நடப்பது எல்லாம் நன்மைக்கே..!
ஆ.கெ.கோகிலன்
28-12-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக