கொலைப் பழி..!

 


இன்று ஞாயிற்றுக்கிழமை. வெள்ளி மற்றும் சனி DG  வந்ததால் அவரோடு மெனக்கிட வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் பல வேலைகள் வீட்டில் சேர்ந்துவிட்டன.

முருங்கைக்காய் விருப்பத்தில் பல முருங்கை மரங்களை வீட்டில் வைத்திருந்தேன். மழைகாரணமாக அவற்றில் தற்போது காய்கள் இல்லை. அதனால் மரங்களைக் கவனிக்க வில்லை.

இந்தநிலையில் இன்று மரங்களைப் பார்க்கும் போது பல இடங்களில் மசுக்குட்டிகள் இருந்தன. வீட்டில் ஒருவரும் அவற்றைக் கவனிக்கவில்லை. மனைவி பிள்ளைகளே அதிகம் வளவில் உலாவுவது வழமை. நான் வேலை காரணமாகவும், தொடர் மழை காரணமாகவும் வளவுக்குள் சில நாட்கள் தொடர்ந்து இறங்கவில்லை.

உடனடி வேலையாக மூத்த மகளைக்கூட்டிக்கொண்டு, பழைய துணிகளைத் தடிகளில் கட்டி, கழிவு ஓயிலையும் அவற்றின் மேல் ஊற்றிக் கொழுத்தி, மசுக்குட்டிகளைக் கொன்றேன். ஆயிரக்கணத்தில் கொன்று,  பெரிய கொலைப்பழியையும் பெற்றுக்கொண்டேன். நான் மசுக்குட்டிகளைக்கொல்லப் போக பல முறை மழை வந்து தடுத்தது..! என்ன செய்வது என்று விளங்கவில்லை..? அவற்றைச் சகித்துப்போக நாம் ஒன்றும் சாமியார் அல்ல..! மசுக்குட்டி மயிர் பட்டாலே உடலில் கடி எழும்பும்.

இன்று, ஊழியர் ஒருவரின் தந்தை இறந்து 31 நடைபெறுவதால், சில மர மசுக்குட்டிகளை அப்படியே விட்டுவிட்டு, குளித்து அந்தியேட்டிக்குச் சென்று வந்தேன். அப்போதும் மழை வேடிக்கை காட்டியது..!

மாரி காலம் என்றால் தொடர் மழை தான். வீட்டுக் கிணறுகள் நிரம்பும் வரை மழை பெய்ய வேண்டும். அப்படிப் பெய்தால் தான், அந்தவருடம் செழிப்பாக இருக்கும். ஒவ்வொரு நாளையும் விஞ்ஞான முறையில் நோக்கினால், ஒவ்வொரு நாளும் பயங்கரமாகவே நமக்கு இருக்கும்.

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பது போல்,  சில உயிர்களைப் பாதுகாப்பதற்காக, சில உயிர்களை எடுக்கலாம் என்பதும் சூழல் கற்றுத்தந்த வாழ்க்கை முறை..!  

 

ஆ.கெ.கோகிலன்

17-12-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!