நன்றி கூறல்..!
நாம் நினைக்காத பல விடயங்கள் நம் வாழ்க்கையில் வந்து சென்றுவிடும்..!
அப்படியான ஒரு வாழ்க்கை கடந்த 12 ஆண்டுகள் வந்து சென்றது..! குறிஞ்சி 12 ஆண்டுகளுக்கு
ஒரு முறை பூக்கும் என்பார்கள். அது போல் எனக்கும்
சில விடயங்கள் அமைகின்றன..!
கடந்த ஒரு வருடமாக பல விதமான மனக்குமுறல்களையும், சந்தோசங்களையும்,
சங்கடங்களையும் கடக்க வேண்டும் என்பதற்காக, இப்படியான Bloger பக்கங்களில் எழுதிவந்தேன்..!
ஒரு வருடத்தில் 365 நாட்கள். லீப் வருடமென்றால் 366. இந்தவருடம் இதுவரை 365 விடயங்கள் தொடர்பாக எழுதிவிட்டேன்.
இன்று 366 ஆவதாக என்ன எழுத என்று யோசிக்கும் போது, இன்று
நடந்த ”நன்றி கூறும்..” நிகழ்வு தான் எண்ணத்தில் வந்தது..! நான்
எனது நன்றிகளை எமது ஊழியர்களுக்குத் தெரிவித்து,
என்னில் இருக்கும் குறைகளைக் கேட்கும்போது
அவர்கள் கூறிய விடயங்கள் பெரும்பாலும் நல்லதாகவே இருந்தன..! இருந்தாலும் சில விடயங்களில்
இன்னும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து, இன்னும் சிறந்த நிர்வாகியாக வர ஆலோசனை வழங்கினார்கள். அதற்கு நன்றி கூறுவதுடன் அவற்றை இயன்றவரை கடைப்பிடிக்க
முனைவேன். தவறுகளைத் தவிர்க்கவும், சரிகளைத் தொடரவும் 2024இல் எனது உறுதிமொழியாக எடுக்க விரும்புகின்றேன். மேலும் இந்நிகழ்வின்போது சில சந்தர்ப்பங்களில் என்னையறியாமல்
கலங்கி விட்டேன். ஊழியர்களில் பலர் அவ்வாறான உணர்வுகளை, அவர்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடுகளாகக்
காட்டினார்கள்..! ஒவ்வொரு ஊழியரினதும் பேச்சினூடாக அவர்களின் அகமனம் எனக்குப் புரிந்தது.
என்னால் இயன்றவரை, நல்ல தலைவராக அவர்கள் முன்னிருக்க வழி வகுத்த இறைவனுக்கும், இயற்கைக்கும்
நன்றி கூறி, அனைத்து ஊழியர்களுக்கும் எனது நன்றியைக் கூறி விடைபெற்றேன்.
6 வருடங்கள், பல வித அனுபவங்களுடன் முடிந்தது..! நான் பதில்
பணிப்பாளராகக் கடமையாற்றி அனுபவம் பெறவில்லை. எடுத்த எடுப்பிலேயே பணிப்பாளர் தரம்
2 எனவும் சில வருடங்கள் கழித்து பணிப்பாளர் தரம் 1 எனவும் வர இறைவன் வழிசெய்துவிட்டான்..!
ஒரு கட்டத்தில் ஒரு மாற்றம் வேனும் என்ற நிலையில், நான் முன்பு நினைத்த, பணிபுரிந்த, இடத்திலே பணிப்பாளராக
வரக் கோணேசர் அருள்புரிந்துள்ளார்..!
இவ்வாறாக எனக்கு எது நல்லதோ அது இயற்கையாகவே அமைகின்றது..!
அதற்கு மீண்டும் இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி கூற வேண்டும்.
நேற்றும் அலுவலகம் சென்று சகல குறை வேலைகளையும் முடித்து,
மாலை எனது நண்பர்களுடன் இரவைக் கழித்து, விடிந்த பின்னர் காரைக்கழுவி, நானும் குளித்து
வெளிக்கிட்டு, அலுவலம் சென்று நிகழ்வைத் தொடங்கப் 10.10ஐ தாண்டிவிட்டது. காலை 10.00
மணிக்கு தொடங்க வேண்டியது, இறுதியில் 10.30 இற்குப் பிறகே தொடங்கியது..! நேர முகாமைத்துவம் இன்று சறுக்கியது..! அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டேன். மதியச்சாப்பாடும் சற்றுப்
பிந்தியே வந்தது. திட்டங்கள் போட்டாலும், சில பிந்தியே நடந்தன..! யாரையும் நோக முடியாது.
நடக்க வேண்டிய நேரத்தில் அவை நடக்கின்றன..! அவ்வளவு தான்..! அதற்குப் பின்னால் இயற்கையும்,
இறைவனும் இருப்பதாக, நான் இன்றுவரை நம்புகின்றேன்.
ஆ.கெ.கோகிலன்
31-12-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக