மீண்டும் இடமாற்றம்..!

 



அண்மையில் இடமாற்றம் தொடர்பாக நடந்த கூட்டத்தில் இடமாற்றம் கேட்ட பலரின் இடமாற்றங்கள் நிறுத்தப்பட்டன. அதனால் எனக்கு வரக்காத்திருந்த இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அம்மா சொன்னது பலித்துவிட்டது என நினைத்தேன். பின்னர், பதவி முன்னேற்றம் தொடர்பான நேர்முகப்பரீட்சை நடந்தது. அப்போது எனது நிலையை ஒத்த பதவிக்கான நேர்முகத்தேர்வும் நடந்தது. அதில் யாராவது ஒருவர் எனது இடத்திற்கு வந்தால் நான் இடமாற்றம் பெறவேண்டிய சூழல் வரும்.  அதுமாத்திரமன்றி, இடமாற்றத்தில் தவறுகள் இருந்தால் மேன்முறையீடு (Appeal) செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. எனது இடத்திற்கான கோரிக்கை வலிப்பெற்றது. அந்த வகையில், நான் எனது சேவைக்காலத்தை முடித்த படியால் வெளியேறத்தயாரானேன்.

எனது நிலைப்பாட்டை அறிந்து,  பணிப்பாளர் நாயகம் கேட்டதால், என்னால் எந்த மறுப்பும் சொல்ல முடியவில்லை.

இன்று காலை எனது  வேலையும், வீட்டிலுள்ள நடைமுறைகள் தொடர்பாகவும் மனைவி, பிள்ளைகளிடம் குறைப்பட்டேன்..! ஏதோ வெறுப்பான சூழலில் இருப்பது போல் உணர்வதாகவும், ஏதாவது செய்து இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றும் அவர்களுடன் கதைத்தேன். சிறிது நேரத்தில் நல்ல மழை வந்தது. அதோடு பணிப்பாளர் நாயகத்திடம் இருந்து அழைப்பும் வந்தது. அவரே இந்த இடமாற்றத்தை ஏற்கும் படியும், மற்றவர் தொடர்ந்து கஷ்டப்படுவதைப் பார்க்க வருத்தமாக இருப்பதாகவும், நான் கேட்ட இடங்கள் தற்போது சாத்தியம் இல்லை என்றும், இன்னும் சில மாதங்கள் கழித்து தலைமையக பணிப்பாளர் வெற்றிடத்திற்கு விண்ணப்பிக்கவும் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டேன். மட்டக்களப்பு பற்றியும் கேட்டேன். அதற்குத் தற்போதைய பணிப்பாளரிற்கு பல வேலைத்திட்டங்கள் வழங்கியதால், இடமாற்றம் அவரைப்பாதிக்கும் என்றும், நான்கு மாதத்திற்கு என்னை ஏற்கவும் சொன்னார். நானும் சம்மதித்தேன்.  மனைவி, பிள்ளைகளுக்கு முன்பே சொல்லியிருந்தாலும், ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமான முடிவுகளைச் சொல்வதால் சற்றுக் கவலையுடன் காணப்பட்டார்கள். அவர்களைத் தேற்றி, இதே நிலமை இன்னும் இரு வருடங்கள் கழித்து வந்தால் இன்னும் கஷ்டமாக இருக்கும். இப்போது வந்ததே தாமதம் என்றாலும் பரவாயில்லை.

மாலை எனது மாமாக்கள் இருவருடனும் கதைத்தேன். அவர்கள் அது எனக்கு நல்லது என்றும் விதிமுறைகளை பின்பற்றுவதே அனைவருக்கும் நல்லது என்றும் சொன்னார்கள். நானும் அதே நிலைப்பாட்டில் இருந்ததால், அவர்களது கருத்தை ஆமோதித்தேன்.

கிறிஷ்மஸ் தினம் என்பதால், மாலை பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு, அலங்காரங்களை காண்பிக்க மனைவி சொன்னார். அவ்வாறே எனது பிள்ளைகளையும், அயல் வீட்டிலுள்ள பிள்ளைகள் இருவரையும் கூட்டிக்கொண்டு, யாழ்ப்பாணத்திலுள்ள சென் பற்றிக்கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி, எனது நிறுவனம், அரியாலையிலுள்ள கில்மிஷாவின் வீடு, கோட்டைப் பூங்கா மற்றும் மணிக்கூட்டுக்கோபுரம் எனப்பல இடங்களைக்காட்டிவிட்டு, “பிரியாணி..” என்ற கடையில் கோழிக்கொத்தும் உண்டுவிட்டு வீடு வந்தோம்.

இன்றைய நாளில் பல உணர்வுகள் வெளிப்பட்டாலும், புலமைப்பரிசுப் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த இரு மாணவர்களைக் கூட்டிச்சென்று, அவர்களுடன் நேரம் செலவிட்டது மனதிற்கு நிறைவைத் தந்தது.

எல்லாம் தருவதும் இயற்கையே..!

எல்லாத்தையும் பறிப்பதும் இயற்கையே..! ஏற்கப்பழகுவதே எல்லோருக்கும் பெரிய பாடமாகவும், வாழ்வியல்  நோக்கமாகவும் இருக்கின்றது.

 

ஆ.கெ.கோகிலன்

25-12-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!