தீர்வை நோக்கும் கூட்டங்கள்..!

 


இன்று காலை வானம் இருட்டுவதும், வெளிச்சம் வருவதுமாக இருந்தது..!

இரண்டு கூட்டங்களுக்கு நான் சமூகமளிக்க வேண்டும். ஒன்றில் நான் ஒரு அங்கத்தவராகவும், மற்றைய கூட்டத்தில் தலைமை தாங்குபவராகவும் இருக்க வேண்டும்.

வழமையாக தலைமையகக் கூட்டத்தில் எனக்கு கதைக்க விருப்பம் வருவதில்லை. அதற்கு காரணம் நான் நினைக்கும் விடயங்களைப் பலர் கதைப்பார்கள். பின்னர் ஏன் எனது சக்தியை விரயப்படுத்துவதுடன் மற்றவர்களின் நேரத்தையும் வீண்பண்ண வேண்டும். ஆனாலும் இன்று சில விடயங்கள் கதைக்கவேண்டி வந்துவிட்டது..! போதனாசிரியர்கள் பிரச்சனை என்பது எமது நிறுவனத்தின் பிரச்சனை..! ஒவ்வொருவரும் நிறைவாகவும், நிம்மதியாகவும் வேலை செய்தால் தான் நிறுவனம் சுமூகமாக இயங்கும்.  அந்த நோக்கத்திற்காகவும், எமது போதனாசிரியர் கேட்டதற்கு இணங்கவும், இருக்கும் SOR இனை புதுப்பிக்கவும் எல்லோருக்கும் புதிய வேலைப்பட்டியல் கொடுக்கவும், அதுமாத்திரமன்றி நிதி ரீதியில் கவலைப்படும் அவர்களுக்கு தகுதி இருந்தால், வருகை தரும் விரிவுரையாளராக வேலை செய்வதற்கும் வாய்ப்புத் தரவேண்டும்.

ஆனாலும் இதற்கு போதிய ஆதரவு வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதேவேளை மாலை நடந்த என்னுடைய கூட்டத்தில் பல வாக்குவாதங்கள் நடந்தன. கொரோனாவிற்கு முதல் வந்த புதிய  பரீட்சை மதிப்பீடுகள் தொடர்பான விதிமுறைகளில் சில தளர்வுகளை அந்தக்காலத்திற்கு ஏற்ப எடுக்கவேண்டி ஏற்பட்டது. அதனை துறைகளிலுள்ள அனைவரது ஒத்துழைப்புடன் செய்ய வேண்டிக்கொண்டேன். இது ஒரு விசேட சூழலால் ஏற்பட்டது.  அது ஒருவாறு முடிந்துவிட்டது. ஆனால் பின்பற்றல் என்பது தொடர்ந்தது..! நிலமை சிறிது சாதாரணமாக வந்தவுடன் சில தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன. அதனை தீர்ப்பதற்கு துறைத்தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கினேன். சிலர் சரியாகச் செய்தார்கள். சிலர் அதை விடுத்து, தவறைச்செய்ய முனைந்தார்கள். அந்த இடத்தில் முகாமையாளர் என்ற வகையில் தவறுகள் நடைபெறாமல் இருக்கச்செய்ய வேண்டியவற்றைச் செய்தேன். அது பல குழப்பங்களை ஏற்படுத்திவிட்டது..! ஒரு தவறை மறைக்க பல தவறுகள் செய்ய வேண்டிய சூழலுக்குள் சிக்குண்டார்கள். ஒரு முறை பரிந்துரைத்த விரிவுரையாளரை இன்னொரு முறை தவறு என்று நிராகரித்தார்கள். ஆனால் மாணவர்களும், சில துறையினரும் அதற்கு அதரவைத் தந்தார்கள். இறுதியாக துறைகளுக்கு இடையே முரண்கள் வந்தன. தீர்க்க வேண்டியது எனது கடமை. ஆனால் அதற்கான நேரம் வரும்வரை பொறுத்திருந்தேன். இன்று வந்தது..! அதுவும் சில வாரங்களில் பணிப்பாளர் நாயகம் வர இருக்கின்றார்.  அவருக்கு, இது தொடர்பாக எதுவும் தெரியாது. எமக்குள் இருக்கும் தவறான புரிந்துணர்வுகளால் ஏற்படும் பிரச்சனைகளை வெளியே கொண்டுசெல்லும்போது, அது முகாமையாளரின் திறமையின்மையாகவே பார்க்கப்படும்.  இயன்றவரை அதனைத் தீர்க்க தற்துணிவுடன் சில முடிவுகள் எடுக்க வேண்டிவரும். அது நிறுவன நன்மைக்கானதாக இருக்க வேண்டும். தனிப்பட்ட நபர்களது திருப்திக்கானதாக இருக்கக்கூடாது.

பொதுப்பார்வையில், இந்த  உறுதியான முடிவுடனே  எனது வழிநடத்தல் இருக்கின்றது.

ஆனால், இன்று நான் வழங்கிய நெகிழ்ச்சித் தன்மையை தவிர்க்க வேண்டியுள்ளார்கள்..! இனி, இன்னொரு விதமான முகாமையைப் பார்க்க வேண்டிய சூழலுக்கு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.

இங்கு நிறுவன விதிகள் முற்றிலுமாகப் பேணப்படும். அது எந்த வேலை என்றால் என்ன அது எனது கட்டளைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். கடந்த ஆறு வருடங்கள்  நான் எனது வேலையைச் செய்கின்றேன். நீங்கள் உங்கள் வேலையை செய்யுங்கள் என்ற ஒரு ஜப்பானிய முகாமைத்துவக் கோட்பாட்டுக்குள் இயங்கினேன்.

இனி, நான் சொல்வதைச் செய்யுங்கள். செய்யாவிட்டால் என்னால் எந்த ஒரு முன்னேற்றத்திற்கான சிபாரிசுகளும் செய்ய முடியாது. மாறாக,  தவறானவர்களுக்கு தண்டனைகளும், சிறப்பாகச் செய்பவர்களுக்கு பாராட்டுக்களும் எழுத்து மூலமாக வழங்கப்படும்.

அத்துடன் நிறுவன விதிகள் முற்றாகப் பின்பற்றவேண்டும். மேலும் கூட்டங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு வருகை கட்டயமானது. அவ்வாறு சமூகமளிக்கவில்லை என்றால் அவர்களின் சம்பள உயர்வுக்கான பரிந்துரைகள் நிறுத்தப்படும்.

லீவுகள் முறையாகச் செய்யப்பட வேண்டும். பரீட்சைகள் நடைபெறும்போது,  தமக்கு அளிக்கப்பட்ட பணியைச் செய்யத்தவறினால், அது குறிக்கப்படுவதுடன், அந்த நாள் அவர்களுக்கு ஒரு லீவாகக் கருதப்படும்.

இதைத்தவிர,  பலவருடங்களாக இழுபட்ட காணிப்பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது..! அத்துடன் அனைவரின் ஒத்துழைப்புடன் நிறுவன முன்னேற்றத்திற்கு தேவையான வழங்களைப் பெற முயலவேண்டும். அதற்கு முதல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எல்லோரும் மாறி மாறிச் சண்டை போட்டால் என்னால் இவ்வாறான கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதே கடினம். பலர் கூட்டத்தை வைக்க வேண்டாம் என்று பலமுறை சொன்னார்கள்..! இருந்தாலும் எனக்கு கூட்டம் வைப்பது அவசியமாகப்பட்டது. தீர்வு எட்டப்படாவிட்டாலும் சிலரின் மன அழுத்தங்களாவது கொஞ்சம் குறைந்திருக்கலாம்.

அடுத்துவரும் கூட்டங்களில், இன்னும் அதிக இயல்பு நிலைக்கு ஊழியர்கள் வரமுடியும்.

எது எப்படியோ நெகிழ்ச்சித் தன்மைகள் தவிர்க்கப்பட்டு, இறுக்கமான சூழலை உருவாக்கியதால் பல சிக்கல்களும் எதிர்காலத்தில் உருவாகும். அதையும் எதிர்பார்த்து, வென்று செல்வோம் என்ற நம்பிக்கை என்றும் எனக்கு இருக்கின்றது.

இறைவன் தந்த கடமை..! இறைவனே கூட இருந்து வழிப்படுத்துகின்றான்.

சரியான வழியில் சென்றால் போதும், தீர்வு தானே வரும்.

 

ஆ.கெ.கோகிலன்

27-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!