அமிழ்தம்..! (பேச்சு)

 



அமுதம், அமிர்தம் என்று மரணமடையாமல் இருப்பதற்காக உண்ணும் உணவுகளை, அமிழ்தம் என்றும் சொல்கின்றார்கள்.

“வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று

 என்று திருவள்ளுவர், திருக்குறளில் 

சொல்கின்றார்.

கணக்கியல் துறையின் 80ஆவது ஆண்டைக்கொண்டாடும் முகமாக எமது கணக்கியல் துறை மாணவர்கள் “அமிழ்தம்“ என்று அழைக்கும் ஒரு உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்.

அதற்கு முதலில் அந்த மாணவர்களுக்கும், அதற்கு உறுதுயைாக இருந்த துறைத்தலைவர் உட்பட அனைத்து விரிவுரையாளர்களுக்கும் எனது இந்நேர வணக்கம்.

பொதுவாக உணவே மருந்து என்பார்கள்..! அறு சுவைகளும் சமமாக, திகட்டாதவண்ணம்  உணவுகளை உட்கொண்டுவந்தால், நோய்கள் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்கின்றார்கள்..!

பிடித்ததை உண்டும், பிடிக்காததைத் தவிர்ப்பதாலும், அறுசுவைகளுக்கு ( ஆறு சுவைகள் - 1.துவர்ப்பு -பாக்கு, 2. இனிப்பு-சீனி, 3.புளிப்பு-புளி, 4.கார்ப்பு/உறைப்பு-மிளகாய், 5.கசப்பு-பாவற்காய்/வெந்தயம், மற்றும் 6.உவர்ப்பு-உப்பு) ஏற்ற உணவுகள் கிடைக்காததால் அல்லது சில சுவைகளுக்கான உணவுகள் கூடவாகவும், சில சுவைகளுக்கான உணவுகள் கிடைக்காமையாலும் நோய்கள் எம்மை ஆட்கொள்ளலாம் என்பது எமது முன்னோர்களின் அறிவியல், அனுபவம், மற்றும் வரலாற்று ஆய்வு..!

உயிர் வாழ்வதற்கு மிகவும் அடிப்படைத்  தேவைகள், முறையே

காற்று

நீர்

உணவு மட்டும் தான்..!

இம்மூன்றில், பொதுவாக முதல் இரண்டையும் இயற்கை தருவது போலவே எடுக்கின்றோம்..! ஆனால் நிலமை தற்போது மாறி வருகின்றது..!

சுவையூட்டப்பட்ட காற்று, நீர் இவைகள் வியாபாரமாகி வரதொடங்கிவிட்டன.

கவனமாக அவற்றைப்பயன்படுத்தினால் ஆரோக்கியத்தைப் பேண முடியும்.

உணவு என்பது இயற்கையாக வந்ததில் இருந்து, பல பரிமானங்கள் தாண்டி நவீன பாணி உணவுகள் சந்தைகளில் வந்துவிட்டன..!

பீட்ஷாவும், சவர்மாவும் யாழ்ப்பாணத்தில் வரும் அளவிற்கு காலம் மாறினாலும் எமது வழமையான மற்றும் பழமையான உணவுகளை விடக்கூடாது. ஒடியல் புட்டு, குரக்கன் ரொட்டி, பழம்சோறு எல்லாம் தற்போது இல்லை என்கின்ற அளவிற்கு அரிதாகிவிட்டது..! உண்மையில் அவைகள் தான் எமது இடத்திற்கும் சூழலுக்குமான உணவு..!

இத்தாலி நாட்டின் பீட்ஷாவும், அரேபிய நாடுகளின் சவர்மாவும் நமக்கு ஏற்புடையதா என்பதை ஆய்வுகள் ஊடாக விளக்கவேண்டிய காலம் விரைவில் வருகின்றது..!

சில அதிகுளிர் நாடுகளில் பச்சை இறைச்சி (Red Meet) உண்பார்கள். அவர்களுக்கு கடும்குளிரைத் தாங்கக்கூடிய கொழுப்புத் தேவை..! நாம் அவ்வாறு எடுத்தால், எமக்கு அது நோயாக மாறுவதற்கான வாய்ப்பு உண்டு.

உணவே சக்தி..!

சாதிப்பதற்குத் தேவை சக்தி..!

சரியான முறையான உணவுகளை எடுத்து உங்கள் சக்தியைக் கூட்டி, அதனூடாக சாதித்து, அனைவருக்கும் பெருமை சேருங்கள்.

வாழ்த்துக்கள்..!

வாழ்க வளமுடன்..!

 

ஆ.கெ.கோகிலன்

08-12-2023.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!