ஸ்கந்தபுரம்
அயல் வீட்டு நண்பரின் தந்தை இறந்த நாளிற்குப் போக முடியாது போனதால், இன்று அவருடைய 31ம் நாளிற்குப் போக, முதலே முடிவு செய்து வைத்திருந்தேன். கடந்த சில வாரங்களாக அலுவலகத்தில் அதிக வேலை இருந்ததால் ஊர் வேலைகளை கவனிக்க முடியவில்லை. இவ்வாறு தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் எமக்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்ற நினைப்பு வந்தது..! இந்தப்புரிதல் 50இற்குப் பிறகு தான் வந்துள்ளது.
அந்தியேட்டி கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஸ்கந்தபுரம் என்ற
கிராமத்தில் என்பதால், அதற்காக அதிகாலையே ஆயத்தமானேன். காலை 8.00 மணியளவில் நானும், மனைவியும், அயல்வீட்டு
நண்பரின் மாமனாரும், மாமியாரும் எனது காரில் வெளிக்கிட்டோம். போகும் போதே பல விடயங்களைக்
கதைத்துக்கொண்டு போனதால் நேரம் போனது தெரியவில்லை. கிளிநொச்சி கனகபுரம் ஊடாக அக்கராயன்
செல்லும் பாதையில் சென்றோம். அந்தப்பகுதியில் பாதை கொஞ்சம் சரியில்லை என்றாலும் முதல்
முறை என்பதால், அதனை ரசித்துக்கொண்டே சென்றேன். அந்த ஊர்களே மிகவும் ரம்மியமாகவும்,
மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை ஊட்டியபடியும் இருந்தது. பாதைகள் வளைந்து வளைந்து செல்வதால்,
கூகுள் மப்பின் உதவியுடன் சென்று இருந்தாலும்
இடையிடையே மனித உதவியும் தேவைப்பட்டது. போற வழியிலே கனகபுரம் மாவீரர் துயிலும் மாயணம்
வெறுமையாகக் காட்சியளித்தது. இதற்கு முதல் நான் அதனைப் பார்க்கவில்லை என்பதால் எந்தவோர்
தாக்கமும் எனக்கு ஏற்படவில்லை. வாகனத்தைச்செலுத்தும்போது, சிறு தூரத்திற்கு வீதி மிகமோசமாக இருந்தது. இருந்தாலும் மிக மெதுவாகச் சென்றதால் சமாளிக்கக்கூடியதாக
இருந்தது.
ஏறக்குறைய காலை 10.15 இற்கு நண்பர் வீட்டிற்குச் சென்றுவிட்டேன்.
அந்த இடமே வளமானதாகவும், ஆரோக்கிய சூழலைக்கொண்டும் இருந்தது. அந்தியேட்டி நடைமுறைகளும்
வித்தியாசமாக இருந்தன. அனைத்தையும் ரசித்தேன். அவர்களுடன் கதைத்து மகிழ்ந்தேன். நண்பரின்
பிள்ளைகளுடன், அவர்களின் வீட்டிலுள்ள பல இடங்களை அவதானித்தேன். அருமையான மதிய உணவை
உண்டபின்னர், அவர்களிடம் விடைபெற்று, அவர்கள்
தந்த அன்பளிப்புக்களில் செம்பருத்தி, முல்லைச் செடிகள் உள்ளடங்கலாகப் பெற்றுக்கொண்டு
அக்கராயன் சந்திக்குச் சென்று, அங்கேயுள்ள மன்னனின் சிலையைப் புகைப்படம் எடுத்துவிட்டு,
முறிகண்டிப்பாதையில் A9 வீதியை நோக்கிச் சென்றேன். போகும் வழியில் கடும் மழைபெய்தது.
ஒரு பாலம் எம்மைப் பயமுறுத்தியது..! இருந்தாலும் பாலத்தின் நடுவில் நின்று படம் எடுத்துவிட்டுக்
கிளம்ப, வீதியை முற்றாக மறித்தபடி நூற்றுக்கணக்கான மாடுகள் சென்றன..! பலமாகக் கோணை
அழுத்தியும், மேய்ப்பவர்களின் துணையுடனும், முன்னால் வந்த வாகனங்களின் முயற்சியாலும்,
அந்த மாட்டு மந்தையை முந்திச்செல்லக்கூடியதாக இருந்தது..! ஏறக்குறைய 2.00 மணிக்குக்
கிட்ட முறிகண்டியில் இறங்கி, பிள்ளையாரை வணங்கிவிட்டு, கச்சானும் வாங்கிக்கொண்டு புறப்பட்டோம்.
ஆனையிறவுக்குக் கிட்டவாக சோளனும் வாங்கித் தின்றுகொண்டு,
வீடு வர மாலை 3.30 ஆகிவிட்டது. வரும்போது பல பொருட்களைக் கொண்டுவந்தோம். அதில், செம்பருத்திப்
பூக்கண்டு, முல்லை கன்று என்பனவும் அடங்கும்.
ஒரு மணி நேர நித்திரைக்குப் பின்னர் கொண்டுவந்த மரங்களை நட்டுவிட்டு,
சுடுதண்ணீர் குளியல் ஒன்றைப் போட்டுவிட்டு, அம்மாவின் பிறந்த நாளைக் கொண்டாடச் சென்றோம்.
எனது வீட்டிலுள்ள அனைவரும் சென்றோம். போகும் போது, தேவையான கேக், அலங்காரத்துண்டு, பலூன், மற்றும் மெழுகுதிரி என்பவற்றைக் கொள்வனவுசெய்து,
இரவு 7.00 மணியிளவில் அம்மாவீட்டில் சோடித்து, அம்மாவின் பிறந்த தினத்தைக் கொண்டாடினோம். அம்மாவிற்கு
இவற்றில் அதிக நாட்டம் இல்லை என்றாலும், நான் வற்புறுத்தியதால் ஏற்றுக்கொண்டார். போதிய
படங்களை எடுத்துக்கொண்டு, இரவு 8.00 மணியளவில் திரும்பினோம். மகள் வழியில் கொத்து வாங்கக்
கேட்டாள். மிகுந்த களைப்பு இருந்தாலும், மகளின் கோரிக்கையைப் பூர்த்திசெய்து, இரவு
9.00 மணியளவில் கொழிஇறைச்சி எவ்வாறு
மாற்றப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்துவிட்டு, இரவு சாப்பாட்டையும் வாங்கிக்கொண்டு,
வீடு திரும்பினோம்.
இரவு 9.30இற்கு இறைச்சிக்கொத்து உண்டுவிட்டு நித்திரை வெறியில்
இதனை எழுதுகின்றேன். ஒவ்வொரு நாளையும் சிறப்பாக்க முனைகின்றேன். சில நாட்கள் நினைத்தது
போல் அமைகின்றது..! சில நாட்கள் புதிய பாடங்களை கற்பிக்கின்றது..! அறிவு, அனுபவத் தேடல்
தொடர்கின்றது..!
ஆ.கெ.கோகிலன்
23-12-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக