கருமேகங்கள் கலைகின்றன..!

 


வயதுபோன முதியவர் ஒருவர் தனது முதுமைக்காலத்தில் படும் மன உணர்வுகளைக்  கடத்த முற்பட்டிருக்கும் படம்.

தங்கர் பச்சானின் அழகியை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. நான் பார்த்த படங்களிலே அதற்குத் தனியிடம் உண்டு.

அந்த வகையில் அமைந்த மென்மையான உணர்வுகளைக் கொண்ட இந்தப்படத்தில் யோகிபாபு, மற்றும் பாரதிராஜா முக்கிய பாத்திரங்களாக நடித்து மனதை உருக்கினார்கள். படம் வழமையான தங்கர்பச்சான் படங்கள் போல் சிறிது மெதுவாகச் சென்றாலும், காட்சிகளின் தரம் ரசிக்க வைக்கின்றது. ஒளி ஓவியர் என்பதை இந்தப்படத்திலும் நிரூபிக்கின்றார்.

கதை என்று பார்த்தால், காதலித்த பெண்ணைக் கைவிட்ட காதலனை ஜெயிலுக்கு அனுப்பும் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, அதே தவறை தானும் செய்ததால் மன்னிப்புக் கேட்கப்போய், மனமுடைந்து மறைவதே அல்லது விழுவதே கதை. இதற்குள் ஒரு அருமையான மனித உணர்வை விளக்கும் குட்டிக்கதையும் உண்டு. “அப்பா” என்ற ஒரு பதவியை அடைய பெற்றால் மட்டும் போதாது. குழந்தையுடன் எவ்வளவு அன்பாகவும், அரவணைப்புடனும் இருக்கின்ற தகுதி இருந்தால் தான், குழந்தையே “அப்பா” என்று தந்தையை அழைக்கும். இல்லாவிட்டால் குழந்தைக்கு தந்தையும் யாரோ..?

“அருவி“ பட அதிதி பாலன் இந்தப்படத்தில் ஓய்வுபெற்ற நீதிபதியின் தவறான உறவால் பிறந்த பிள்ளையாக வந்து, தனது தந்தையை யாரென்று தெரியாமலே அவரால் தண்டனை பெற்று, கடைசியில் தந்தையே அவரது காலில் விழவேண்டிய நிலைக்கு கொண்டுவந்த, படத்தின் நாயகி..!

தவறு, தவறு தான்..! மன்னிக்க மறுக்கும் காட்சிகளும், ஆண்வேஷம் போட்டு பிள்ளையை வளர்க்க, தாய் பட்ட கஷ்டத்தைச்சொல்லும் போது ஒரு வேறுபட்ட உணர்வு வந்தது..!

உண்மைகளைப் பொய்களூடாகப் பார்க்கும் போது ஏற்படும் ஒரு மயக்கநிலை இந்தப்படத்தில் எனக்கு ஏற்பட்டது.

கௌதம் வாசுதேவ மேனன் உட்பட மேலும் பல நடிகர்கள் நடித்த இந்தப்படம் ஒரு மென்மையான உணர்வுகளுடன்  மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை.

படத்தின் தொழில்நுட்பங்கள், இசை, பாடல்கள், இயக்கம் எல்லாம் நன்றாக இருந்தன.

 


ஆ.கெ.கோகிலன்

02-12-2023

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!